Vadivelu vs Singamuthu: ‘சிங்கமுத்து பதிலளிக்க உத்தரவு’ வடிவேலு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Vadivelu vs Singamuthu: யூடியூப் சேனல்களில் வடிவேலு பற்றி பல்வேற அவதூறுகள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் வடிவேலு தரப்பில் எந்த பதிலும் கூறப்படவில்லை.
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பற்றி யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் சிங்கமுத்து பதிலளித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு-நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து இடையே பிரச்னை இருப்பது அனைவரும் அறிந்ததே. முன்பு, இருவரும் ஒன்றாக இணைந்து நடித்ததும், அவர்களின் கூட்டணி பெரிய அளவில் வேலை செய்ததும் தெரியும். வடிவேலு-சிங்கமுத்து கூட்டணி காமெடி, இன்றும் பலரால் ரசிக்கப்படுகிறது. இதற்கிடையில் பல்வேறு காரணங்களுக்காக இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.
பின்னணியில் நில விற்பனை விவகாரம் ஒன்று இருந்ததாகவும் கூறப்பட்டது. இணை பிரியா நண்பர்களாக இருந்தவர்கள், அதன் பின் இரு துருவங்களாக மாறினர். இதற்கிடையில் நடிகர் வடிவேலு, திமுக தரப்பில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது, அவருக்கு போட்டியாக அதிமுகவின் தேர்தல் பிரசாரத்திற்கு நடிகர் சிங்கமுத்துவை களம் இறக்கினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
தேர்தல் களத்தில் வடிவேலு-சிங்கமுத்து இடையே நடந்த வார்த்தை யுத்தம், அப்போது அனைவரும் அறிந்ததே. இருவரும் போட்டி போட்டு அவர்களின் குறைகளை வெளிக் கொண்டுவந்தனர். குறிப்பாக, வடிவேலு பற்றி சிங்கமுத்து எடுத்து வைத்த குற்றச்சாட்டுகள், பெரியஅளவில் பேசு பொருளானது. அதன் பின் நடந்த அரசியல் மாற்றங்கள், நடிகர் வடிவேலுவை சினிமாவில் இருந்து பல ஆண்டுகள் ஒதுங்கி நிற்க வைத்தது.
இதற்கிடையில் நடிகர் வடிவேலு உடன் இருந்த, அவரைச் சார்ந்த சில நடிகர்களுக்கு அவரால் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காலத்திற்கு ஏற்ப தன் நடிப்பு கூட்டணியை வடிவேல் தேர்வுசெய்தார். இதனால் அவருடன் நீண்ட நாள் பயணம் செய்த நகைச்சுவை நடிகர்கள் சிலர், வடிவேலு மீதான விமர்சனத்தை பொதுவெளியில் வைக்கத் தொடங்கினர்.
யூடியூப் சேனல்களில் வடிவேலு பற்றி பல்வேற அவதூறுகள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் வடிவேலு தரப்பில் எந்த பதிலும் கூறப்படவில்லை. போதாக்குறைக்கு சிலர் நோய்வாய் பட்டிருந்த போது, அவர்களுக்கு வடிவேலு உதவவில்லை, சிலர் இறப்பிற்கு வடிவேலு வரவில்லை என்கிற பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டது.
இதற்கிடையில் நடிகர் சிங்கமுத்து யூடியூப்களில் பேட்டி அளிக்கும் போதெல்லாம், வடிவேலு தொடர்பான கருத்துக்களை அதிக அளவில் பேசி வந்தார். அதில் வடிவேலுவின் தனிப்பட்ட விசயங்களும் அடங்கியிருந்தது. இந்நிலையில், தன் மீதான சிங்கமுத்துவின் விமர்சனம் குறித்து வடிவேலு தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதில், ‘பல்வேறு யூடியூப் சேனல்களில் பேட்டியளித்து வரும் நடிகர் சிங்கமுத்து, வடிவேலு பற்றி உண்மையில்லாத பொய் தகவல்களை கூறி வருவதாகவும், தரக்குறைவாக பேசுவதாகவும், எனவே சிங்கமுத்து மீது ரூ.5 கோடி மனநஷ்டஈடு கேட்டு’ வடிவேலு தரப்பில் முறையிடப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில், நடிகர் சிங்கமுத்து பதிலளிக்குமாறு’ உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் மூலம் மீண்டும் வடிவேலு-சிங்கமுத்து விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
டாபிக்ஸ்