அவதூறு கருத்து பகிர்வு.. ஆறு ஆண்டுகளாக நடைபெறும் விசாரணை.. சிறை செல்கிறாரா எஸ்.வி.சேகர்?
ஆறு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில் எஸ்.வி.சேகருக்கான சிறை தண்டனையை உறுதி செய்தாலும், மீண்டும் மேல்முறையீடுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் எஸ்.வி.சேகர். பாஜகவின் நிர்வாகியாக இருந்து வரும் இவர் பெண் பத்திரிகையாளர் குறித்து பகிர்ந்த அவதூறு கருத்து வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
எஸ்.வி.சேகர் மீது வழக்கு
கடந்த 2018இல் தனது ஃபேஸ்புக் பதிவில் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்துகளை பகிர்ந்திருந்தார் நடிகர் எஸ்.வி.சேகர். இதுதொடர்பாக பத்திரிகையாளர் அளித்த புகார் அடிப்படையில் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து எம். எல். ஏ., எம்.பி. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் 2019ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தது.
