'விக்ரமின் சரித்திரம் இங்கு தான் தொடங்கியது.. தமிழ் நன்றி சொல்லும்.. '- பாடலாசிரியர் விவேக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'விக்ரமின் சரித்திரம் இங்கு தான் தொடங்கியது.. தமிழ் நன்றி சொல்லும்.. '- பாடலாசிரியர் விவேக்

'விக்ரமின் சரித்திரம் இங்கு தான் தொடங்கியது.. தமிழ் நன்றி சொல்லும்.. '- பாடலாசிரியர் விவேக்

Malavica Natarajan HT Tamil
Published Mar 21, 2025 02:30 PM IST

நடிகர் விக்ரமிடம் ஒரு மருத்துவர் இனி உங்களால் நடக்கவே முடியாது என சொல்லாமல் இருந்திருந்தால் இப்போது இந்த சரித்திரம் நடந்திருக்காது என பாடலாசிரியர் விவேக் பேசியுள்ளார்.

'விக்ரமின் சரித்திரம் இங்கு தான் தொடங்கியது.. தமிழ் நன்றி சொல்லும்.. '- பாடலாசிரியர் விவேக்
'விக்ரமின் சரித்திரம் இங்கு தான் தொடங்கியது.. தமிழ் நன்றி சொல்லும்.. '- பாடலாசிரியர் விவேக்

இசை வெளியீட்டு விழா

எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'வீர தீர சூரன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் இயக்குநர் எஸ். யூ. அருண்குமார், நடிகர் பிருத்வி, இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் கலை இயக்குநர் பாலசந்தர், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா மற்றும் தயாரிப்பாளர் ரியா ஷிபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விக்ரம் என்ற சரித்திரம்

பாடலாசிரியர் விவேக் பேசுகையில், '' தமிழில் மிகவும் முக்கியமான வார்த்தை 'முடியாது'. இது எங்கெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதோ.. அங்கெல்லாம் ஒரு புதிய சரித்திரமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறது. மனிதர்களால் விலங்குகளிடமிருந்து தப்பிக்க 'முடியாது' என்ற சூழல் இருந்தபோது.. தீயை கண்டுபிடித்தார்கள். அதேபோல் மனிதர்களால் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு விரைந்து செல்ல 'முடியாது' என்று சொன்னார்கள். அந்த தருணத்தில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல் ஏதோ ஒரு மருத்துவர்.. ஒரு மனிதரிடம்.. உங்களால் இனி நடக்க 'முடியாது' என சொன்னபோது, அந்த தருணத்திலிருந்து விக்ரம் என்ற சரித்திரம் எழுதப்பட்டது. இதை நான் ஒரு தனி மனித புகழ்ச்சிக்காக சொல்லவில்லை. மனதளவிலும், உடலளவிலும் நம்மால் முடியாது என்று சோர்ந்து போகும் எல்லாருக்கும் .. ஏதோ ஒரு புள்ளியில் விக்ரம் சார் தான் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்.

வியந்து போனேன்

அவருடைய கலை பயணத்தை பற்றி நான் குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் கல்லூரியில் படித்த காலத்தில் 'பிதாமகன்' என்ற படத்தினை பார்த்து வியந்து போனேன். அப்போதே இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று நண்பர்களுடன் பேசி இருக்கிறோம். அன்றிலிருந்து ..இன்று அவருடன் இணைந்து பணியாற்று வரை நான் பயணித்திருக்கிறேன்.

அறிவு ஜீவி

'அமரன்', 'லக்கி பாஸ்கர்', 'வீர தீர‌ சூரன்' 'குட் பேட் அக்லி' என ஒவ்வொரு படத்திற்கும் ஜீ. வி. பிரகாஷ் குமாருக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டே இருக்கலாம். அவர் ஒரு அறிவு ஜீவியாக இசை உலகம் பிரகாசமாக இருப்பதற்கு காரணமாக இருந்து கொண்டிருக்கிறார். அவருக்கும் என்னுடைய நன்றிகள்.

தமிழ் நன்றி சொல்லும்

பாடலாசிரியராக நான் பாடல்களை எழுதும் போது சில கவித்துவமான வரிகளை வேண்டாம் என மறுத்து விடுவார்கள். மொழி நடையை சற்று குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் இயக்குநர் அருண்குமாருடன் இணைந்து பணியாற்றும்போது உற்சாகம் பொங்கும். ' எங்கேயாவது அமர்ந்து தமிழன் இதை ரசிப்பான்..' என்று சொல்லி, இலக்கிய தரமிக்க சொற்களை கேட்டு வாங்குவார். அவருடைய இயக்கத்தில் வெளியான 'சித்தா' படத்தில் 'ஆறா மலை..' 'நீங்கா நிழல்.. ' போன்ற சொற்களை பயன்படுத்தி இருக்கிறோம்.

இதற்கு நான் நன்றி சொல்வதை விட தமிழ் உங்களுக்கு நன்றி சொல்லும். தமிழ் திரைப்பட உலகம் உங்களுக்கு நன்றி சொல்லும். மேலும் இங்கு வருகை தந்திருக்கும் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும். '' என்றார்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner