"உதயநிதி ஒரு பேரிச்சம் பழம்" .. கடன் வாங்கி பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த வைரமுத்து..
உதயநிதி பேரிச்சம் பழம் போன்றவர் என அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாடலாசிரியர் வைரமுத்து வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் பேரனும், முதல்வர் ஸ்டாலினின் மகனும், தமிழ்நாட்டின் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 48வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் புகழ்பெற்ற இவருக்கு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து
அந்த வகையில், கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழத்து தெரிவித்து கவிதை எழுதி அதை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், உதயநிதியின் துணிச்சலும், திடமான முடிவும் கண்டு தான் வியந்ததையும், அவரது குணம் எப்படி உள்ளது என்பதையும் இந்தக் கவிதையில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில்,
"ஒருநாள்
கலைஞரும் நானும்
கோபாலபுரத்தில்
உரையாடிக்கொண்டிருந்தோம்
உதயநிதி தன் மனைவி
கிருத்திகாவோடு வந்தார்;
நின்றுகொண்டே பேசினார்
கலைஞர் மறுத்த ஒருகருத்தை
தன் வாதத்தை முன்னிறுத்திச்
சாதித்துச் சென்றார்
அப்போதே
தெரிந்துகொண்டேன்
வலிவும் தெளிவும் மிக்க
வல்லவர் இவரென்று
உதயநிதி
பேரீச்சம் பழம்போல்
மென்மையானவர்; ஆனால்
அதன் விதையைப்போல்
உறுதியானவர்
சின்னச் சின்ன எதிர்ப்புகள்
இவரைச் சிதைப்பதில்லை
குன்றிமணி முட்டிக்
குன்றுகள் சாய்வதில்லை
காலம் இவரை
மேலும் மேலும்
செதுக்கும்; புதுக்கும்
“தம்பீ வா
தலைமையேற்க வா”
அண்ணாவிடம் கடன்வாங்கி
அண்ணன் வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோரிடம் வாழ்த்து
முன்னதாக இன்று பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலின் அவரது பெற்றோரை சந்தித்து வாழத்து பெற்றார். மேலும், பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
மேலும், இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கருத்தும் தெரிவித்துள்ளார். அதில், "உயிரையும், உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும் - அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும் கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும், ஈன்றெடுத்த அன்புத்தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டோம்.
எந்நாளும் வழிநடத்தும் தாய் - தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
டாபிக்ஸ்