நெட்பிளிக்ஸில் ரிலீஸான லக்கி பாஸ்கர்.. ரூ.100 கோடி வசூலுக்குப் பின் ஓடிடியில் இறக்கிய தயாரிப்பாளர்கள்!
நெட்பிளிக்ஸில் ரிலீஸான லக்கி பாஸ்கர்.. ரூ.100 கோடி வசூலுக்குப் பின் ஓடிடியில் இறக்கிய தயாரிப்பாளர்கள் குறித்து பார்ப்போம்.
மலையாளத் திரையுலகின் உச்ச நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம், லக்கி பாஸ்கர். லக்கி என்ற பெயர் குறிப்பிடுவதுபோல, இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் அதிர்ஷ்டம் இருக்கும் என்று தான் சொல்லத்தோன்றுகிறது.
லக்கி பாஸ்கர் திரைப்படம் தியேட்டர்களில் நன்கு ஓடி பாக்ஸ் ஆபிஸ் வசூலில்,. ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்துள்ளது. இன்னொரு ஹிட்டுக்காக காத்திருந்த துல்கர் சல்மான், லக்கி பாஸ்கர் படம் மூலம் வெற்றி பெற்றுள்ளார்.
வழக்கமாக எந்தப் படம் வெளியானாலும் வெளியான 30 நாட்களுக்குள், ஓடிடியில் நுழைந்துவிடும். அதன்படி, லக்கி பாஸ்கர் திரைப்படமும் விரைவில் ஓடிடியில் வரும் என்று சினிமா ரசிகர்கள் காத்திருந்தனர். படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த நாளில் ஒளிபரப்பாகும் என்பது குறித்து எந்த வார்த்தையும் இல்லை.
ஸ்ட்ரீமிங்கான லக்கி பாஸ்கர்:
இருப்பினும், இரண்டு நாட்களுக்கு முன்பு, தயாரிப்பாளர்களும் நெட்ஃபிளிக்ஸும் தங்கள் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் லக்கி பாஸ்கர் நவம்பர் 28 முதல் ஒளிபரப்பப்படும் என்று அறிவித்தனர். அதன்படி, இன்று லக்கி பாஸ்கர் காலை முதல் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. துல்கர் சல்மானின் ரசிகர்கள் படத்தை பார்க்க உற்சாகம் காட்டி வருகின்றனர். இந்த லக்கி பாஸ்கர் திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் பேனரின்கீழ் சூர்யதேவரா நாகவன்ஷி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோருடன் இணைந்து சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளது. வெங்கி அட்லூரி கதை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார். ராம்கி, சூர்யா ஸ்ரீனிவாஸ், சச்சின் கேடேகர், சாய் குமார், சுதா, ரகு பாபு, ஹைப்பர் ஆதி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
லக்கி பாஸ்கர் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. கன்னடத்தில் ரூ.6.5 கோடியும், தெலுங்கில் ரூ.15 கோடியும், மலையாளத்தில் ரூ.22 கோடியும், தமிழில் ரூ.16 கோடியும், வெளிநாடுகளில் ரூ.15 கோடியும் இப்படம் வசூல் செய்துள்ளது. இது டிஜிட்டல் மற்றும் செயற்கைக்கோள் உரிமைகள் மூலம் பெரும் லாபத்தை ஈட்டியுள்ளது.
லக்கி பாஸ்கர் படத்தின் கதை என்ன?:
படத்தின் நாயகன் பாஸ்கர் குமார் ஒரு சாதாரண வங்கி ஊழியர். குடும்பப் பிரச்னை காரணமாக கடன் வலையில் சிக்கிக் கொள்கிறார். அவர் பணத்திற்காக ஆண்டனி என்ற நபருடன் கைகோர்த்து சட்டவிரோத பரிவர்த்தனைகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாயைச் சம்பாதிக்கிறார். குறிப்பாக, வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பாஸ்கர் ஊழல்கள் அம்பலமாகுமா? பாஸ்கர் பணம் சம்பாதித்து குடும்பத்தை புறக்கணித்ததன் விளைவு என்ன? பாஸ்கர் எப்படி எல்லா பிரச்னைகளிலும் இருந்து மீண்டு வருகிறார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் இப்படத்தில் இருக்கிறது.
மகாநதி, சீதாராமம் ஆகியப் படங்களுக்குப் பிறகு துல்கர் சல்மான் தமிழில் லக்கி பாஸ்கர் திரைப்படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் அடித்தார். தற்போது தெலுங்கில் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் துல்கர் சல்மான் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மலையாள படங்களைவிட டோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.