எம்ஜிஆருக்காக வேலையை விட்ட கவிஞர்.. அடேங்கப்பா.. இவ்வளவு ஹிட் பாடல்களா.. பாடலாசிரியர் முத்துலிங்கம் பிறந்தநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எம்ஜிஆருக்காக வேலையை விட்ட கவிஞர்.. அடேங்கப்பா.. இவ்வளவு ஹிட் பாடல்களா.. பாடலாசிரியர் முத்துலிங்கம் பிறந்தநாள் இன்று!

எம்ஜிஆருக்காக வேலையை விட்ட கவிஞர்.. அடேங்கப்பா.. இவ்வளவு ஹிட் பாடல்களா.. பாடலாசிரியர் முத்துலிங்கம் பிறந்தநாள் இன்று!

Divya Sekar HT Tamil
Mar 21, 2024 06:50 PM IST

HBD lyricist Muthulingam : முரசொலி இதழில் உதவி ஆசிரியராக இருந்த பாடலாசிரியர் முத்துலிங்கம் எம்ஜிஆர் மீது கொண்ட ஈடுபாட்டால் திமுகவிலிருந்து எம்ஜிஆர் விலகியதும் முரசொலியில் உதவி ஆசிரியராக பார்த்து வந்த பணியை விட்டு விலகினார்.

பாடலாசிரியர் முத்துலிங்கம் பிறந்தநாள் இன்று
பாடலாசிரியர் முத்துலிங்கம் பிறந்தநாள் இன்று

பாடல்கள் மூலம் வாழ்க்கையின் அடிப்படை தத்துவத்தைக் கூறியது தமிழ் சினிமா. அதில் பல கவிஞர்களுக்குப் பங்கு இருந்தாலும் முக்கியமான இடத்தில் இருப்பவர்களில் ஒருவர்தான் கவிஞர் முத்துலிங்கம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை இவர் 1500க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். அதேபோல பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். அவற்றில் சில கலைமாமணி விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகும். அதேபோல பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

அரசவைக் கவிஞராக இருந்துள்ளார். மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தான் இவரின் பூர்வீகம். இவர் தனது 15 வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கி விட்டார். முரசொலி இதழில் உதவி ஆசிரியராக இருந்த இவர் எம்ஜிஆர் மீது கொண்ட ஈடுபாட்டால் திமுகவிலிருந்து எம்ஜிஆர் விலகியதும் முரசொலியில் உதவி ஆசிரியராக பார்த்து வந்த பணியை விட்டு விலகினார்.இதனால் முத்துலிங்கள் முரசொலியிலிருந்து விலகி அலையோசை என்ற பத்திரிகையில் சேர்ந்தார்.

அலையோசை பத்திரிக்கையில் பணிசெய்யும் போது முத்துலிங்கத்திற்கு இயக்குனர் பி.மாதவனின் அறிமுகம் கிடைத்ததுள்ளது. இந்த அறிமுகம் தான் அவரை சினிமா துறைக்கு அழைத்து வந்தது. 1973ஆம் ஆண்டு மாதவன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் பொண்ணுக்கு தங்க மனசு. இந்த படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூர் சீமையிலே என்ற பாடலை முத்துலிங்கம் எழுதியிருப்பார். இதுதான் இவர் எழுதிய முதல் பாடல். இந்த பாடலை எஸ். ஜானகி, பி. ௭ஸ். சசிரேகா, பூரணி, சீர்காழி எஸ். கோவிந்தராஜன் ஆகியோர் பாடி இருப்பார்கள். இங்கு இருந்து தான் அவரின் திரைப்பயணம் தொடங்கியது.

அதன்பிறகு எம்.ஜி.ஆர் தான் நடித்த படங்களில் எல்லாம் பாட்டு எழுதுவதற்கு முத்துலிங்கத்திற்கு வாய்ப்பு கொடுத்தார். 1976 ஆம் ஆண்டு வெளியான் ஊருக்கு உழைப்பவன் படத்தில் இடம்பெற்ற பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் என்ற பாடலில் தொடங்கி பல வெற்றி பாடல்களை கொடுத்து மக்கள் மனதை வென்று இருப்பார்.உழைக்கும் கரங்கள், இன்றுபோல் என்றும் வாழ்க, ஊருக்கு உழைப்பவன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், மீனவ நண்பன், கிழக்கே போகும் ரயில்,புதிய வார்ப்புகள், பாமா ருக்மணி என பல படங்களுக்குப் பாட்டு எழுதி உள்ளார் முத்துலிங்கம்.

இவர் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதில் சிலவற்றை பார்க்கலாம். உழைக்கும் கரங்கள் படத்தில் இடம்பெற்ற கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து, மீனவ நண்பன் திரைப்படத்தில் இடம்பெற்ற தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற தாயகத்தின் சுதந்திரமே,கிழக்கே போகும் ரயில் படத்தில் இடம்பெற்ற மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ,புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் இடம்பெற்ற இதயம் போகுதே இணைந்தே, ௭ங்க ஊரு ராசாத்தி படத்தில் இடபெற்ற பொன்மானத் தேடி நானும் போன்ற பல வெற்றி பாடல்களை கொடுத்துள்ளார் முத்துலிங்கம்.

அதுமட்டும் இல்லை, பூவிழி வாசலிலே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சின்ன சின்ன ரோஜா பூவே செல்லக் கண்ணே நீ யாரு தப்பி வந்த சிப்பி முத்தே,காக்கிச்சட்டை திரைப்படத்தில் இடம்பெற்ற பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ஒட்டிக் கொள்ளும், தூறல் நின்னு போச்சு திரைப்படத்தில் இடம்பெற்ற பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்,மௌன கீதங்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற டாடி டாடி ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே,புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் இடம்பெற்ற கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்,முந்தானை முடிச்சு படத்தில் இடம்பெற்ற சின்னஞ்சிறு கிளியே சித்திர பூ விழியே, முதல் வசந்தம் படத்தில் இடம்பெற்ற ஆறு அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல ஆழம் எது அய்யா போன்ற ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இன்னும் ஆச்சரியப்படும் அளவிற்குப் பல ஹிட் பாடல்களை இவர் எழுதியுள்ளார். இப்படிப்பட்ட ஆகச் சிறந்த பாடல்களைக் கொடுத்து தமிழ் சினிமாவை கொடிகட்டிப் பறக்க வைத்த இந்த கவிஞனின் 82வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தமிழ் கவிஞனுக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.