எத்தனை முறை சிகரெட் அடித்தேன் என்பதை கவனித்துக் கொண்டே இருப்பார்.. சூர்யா குறித்து இயக்குநர் பாலா சொன்ன விஷயம்!
சூர்யாவோடு பணியாற்றும் பொழுது ஒரு நடிகரோடு பணியாற்றுவது போல் இருக்காது என் தம்பியோடு பணியாற்றுவது போல் இருக்கும் என இயக்குநர் பாலா கூறியுள்ளார்.
இயக்குநர் பாலா இப்போது வணங்கான் படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார். படமானது ஜனவரி மாதம் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க நேற்று வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும்; பாலா திரையுலகுக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி பாலா 25 விழாவும் கொண்டாடப்பட்டது. இதில் சூர்யா, சிவகார்த்திகேயன், சமுத்திரகனி, மாரி செல்வராஜ், ஜிவி பிரகாஷ், மிஷ்கின், அருண் விஜய் என ஏகப்பட்டோர் கலந்துகொண்டார்கள். இதில் இயக்குநர் பாலா சூர்யா குறித்து உருக்கமாக பேசினார்.
என் தம்பியோடு பணியாற்றுவது போல் இருக்கும்
மேடையில் பேசிய இயக்குநர் பாலா, ”சூர்யாவை முதன் முறையாக பார்த்த பொழுது உங்களுக்கு என்ன தோன்றியது என்ற கேள்விக்கு? பாண்டி பஜாரில் இருந்து திரைப்பட விழா ஒன்றுக்கு சூர்யாவிடம் என்னை அழைத்துச் செல்லும்படி கேட்டேன், அந்த பயணத்தின் போது தான் என்னுடைய அடுத்த படத்திற்கு கதாநாயகராக அவரை முடிவு செய்தேன்.ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் அதை அவரிடம் தெரிவித்தேன்.
சூர்யாவோடு பணியாற்றும் பொழுது ஒரு நடிகரோடு பணியாற்றுவது போல் இருக்காது என் தம்பியோடு பணியாற்றுவது போல் இருக்கும். சூர்யா என்னிடம் வெளிப்படையாக இருப்பார். அவர் நான் இயக்கிய அவர் நடிக்காத படத்தில் கூட அண்ணா இந்த படம் நீங்கள் எடுத்தது போல இல்லை என்று வெளிப்படையாக கூறுவார்.
சூர்யா மட்டும்தான் வருத்தப்படுவார்
சூர்யா இருக்கும்பொழுது நான் புகை பிடிக்க மாட்டேன். அதற்குக் காரணம் சிகரெட் பிடிக்கும் பொழுது அதை பார்க்கும் மற்றவர்கள் அட்வைஸ் தான் செய்வார்கள் ஆனால் சூர்யா மட்டும்தான் வருத்தப்படுவார். ஒரு நடிகரால் வருத்தப்பட முடியாது தம்பியாக இருந்தால் மட்டுமே வருத்தப்பட முடியும். அப்படியும் அவன் இவன் திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வந்த பொழுது அவருக்கு தெரியாமல் பெரிய மானிட்டர் பின்பு சிகரெட் அடித்துக் கொண்டிருந்தேன் அதனையும் சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் போதே கண்டுபிடித்து விட்டார்.
அந்த சிறப்பு காட்சியை நடித்து முடித்ததற்கு பிறகு நான் சிகரெட் பிடிப்பதை குறைத்து விட்டேன் என கூறும் பொழுது இல்லை அண்ணா நீங்கள் இந்த காட்சியை எடுக்கும் பொழுது எட்டு முறை சிகரெட் அடித்தீர்கள் என கூறினார். காத்துக் கொண்டிருக்கும் பொழுதே எத்தனை முறை சிகரெட் அடித்தேன் என்பதை கவனித்துக் கொண்டே இருப்பார்” எனக் கூறினார்.
முதல் முதல் புகை பிடிக்க வைத்தது இயக்குனர் பாலா
முன்னதாக பேசிய சூர்யா, “என்னை முதல் முதல் புகை பிடிக்க வைத்தது இயக்குனர் பாலா தான். நந்தா படத்தில் எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாது. ஆனால் முதல் நாள் முதல் காட்சியை நான் படிக்கட்டில் இறங்கி சிகரெட் பிடிக்க வேண்டும் முதல் முதலில் ஒரு மிகப்பெரிய பட வாய்ப்பு அத்தனை பேர் இருக்கிறார்கள் ஆனால் எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லை என அவர்களிடம் கூற கூச்சமாக இருந்தது. இருப்பினும் அதனை தெரிவித்தேன். ஒட்டுமொத்த லைட் யூனிட்டும் கீழே இறங்கி விட்டார்கள் எனக்கு அவமானமாக இருந்தது. உடனடியாக அதை கற்றுக்கொள்வதற்காக 300 தீக்குச்சியை நான் செலவழித்து மாடியில் ஏறி இறங்கி அதனை கற்றுக் கொண்டேன் அதன் பிறகு அது ரோலக்ஸ் படத்திற்கு தான் உதவியாக இருந்தது” என கூறியிருந்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்