Singer Malaysia Vasudevan Memorial Day: அற்புத பாடல்களால் உலக தமிழர்களை தாளம் போட வைத்தவர்..! நினைவில் நீங்கா கலைஞன்
பாடகராக மட்டுமில்லாமல் நடிகராகவும் குணச்சித்திரம், வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றி முத்திரை பதித்தவர் மலேசியா வாசுதேவன்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மலேசியா வாசுதேவன் குடும்பம், பிரிட்டீஷ் காலத்திலேயே மலேசியாவில் செட்டிலானது. அங்குதான் மலேசியா வாசுதேவன் பிறந்து வளர்ந்தார். அவர் குடும்பம் வசித்த பகுதி தமிழர்கள் அதிகம் நிறைந்திருந்த நிலையில் தாயமொழியான மலையாளத்தை விட தமிழ் இவரிடம் ஒட்டிக்கொண்டது.
தனது தந்தை, சகோதரரிடம் இசையை கற்றுக்கொண்ட இவர் 8 வயது முதலே மேடைகளில் பாடல்கள் பாட தொடங்கியுள்ளார். அதேபோல் வளர்ந்த பின்பு தமிழ் நாடக குழுவுடன் தன்னை இணைத்து கொண்ட இவர் பாடல் பாடுவதிலும், நடிப்பிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
இந்தியாவுக்கு வந்த மலேசியா வாசுதேவன் இசைஞானி இளையராஜாவின் பாவலர் ட்ரூப்ஸில் இணைந்தார். இதன் பிறகு பிரபல தயாரிப்பாளர் பொள்ளாச்சி ரத்னம் நட்பு கிடைக்க, அவர் அளித்த வாய்ப்பால் ஜெய்சங்கர் நடித்த டெல்லி டூ மெட்ராஸ் படத்தில் பாலு விக்கிர பத்மா என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார். இதன் பின்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாரத விலாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு சில விநாடிகள் குரல் கொடுத்தார்.
மலேசியா வாசுதேவன் குரல் கவனிக்கப்பட்டது இளையராஜா இசைமயமைப்பில் பாரதிராஜா இயக்கிய 16 வயதினேலே படத்தில் இடம்படித்த ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் அமைந்தது. பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டான இந்த பாடலுக்கு பின்னர் மலேசியா வாசுதேவன் குரல் பல படங்களில் ஒலிக்க தொடங்கியது.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சுமார் 8 ஆயிரம் பாடல்கள் இவர் பாடியுள்ளார். இவரது பெயரை கேட்டதும் நினைவுக்கு வரும் விதமாக மிஸ்டர் பாரத் படத்தில் என்னம்மா கண்ணு, கோழி கூவுது படத்தில் பூவே இளைய பூவே, தர்மயுத்தம் படத்தில் வரும் ஒரு தங்க ரதத்தில், புதுக்கவிதை பட வா வா வசந்தமே போன்ற ஏராளமான பாடல்களை லிஸ்டில் சேர்க்கலாம்
ரஜினிகாந்துக்கு எஸ்பி பாலசுப்ரமணியம்க்கு அடுத்தபடியாக ஏராளமான பாடல்களை பாடியவராக மலேசியா வாசுதேவன் உள்ளார். ரஜினிக்காக மெலடி முதல் குத்து பாடல் வரை இவர் பாடியிருக்கிறார். அந்த வகையில் ரஜினியின் மாஸ் பாடலாக இருந்து வரும் ‘முரட்டுக்காளை’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என்ற பாடல், ஒலித்த உடனே திரையரங்குகளில் தீப்பிடித்து எறியும் அளவுக்கு கரகோஷங்கள் ஒலித்தன. இன்றும் அந்த வைப்ரேஷன் இந்த பாடலை கேட்கும்போது குறையாமலேயே இருக்கிறது எனலாம்.
பாடகராக மட்டுமில்லாமல் நடிகராகவும் முத்திரை பதித்திருக்கிறார் மலேசியா வாசுதேவன். குணச்சித்திரம், வில்லன், காமெடி என அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். ஊமைவிழிகள், கதாநாயகன், திருடா திருடா, பூவே உனக்காக என பல்வேறு படங்கள் இவரது நடிப்புக்கு சான்றாக அமைந்திருக்கின்றன. கடல் கடந்து வந்து மக்களை மகிழ்வித்த கலைஞன் சிறந்த பாடல்களால் நம்மை தாளம்போட வைத்ததோடு மட்டுமல்லாமல் கிட்டதட்ட 85க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து நடிப்பிலும் ரசிகர்களில் மனதில் குடிபுகுந்துள்ளார்.
பாடல்களும், இசையும் மனிதர்களின் உணர்வுகளோடு பயணிக்கும் என்பார்கள். அதைப்போல் ஒரு பாடலை உணர்வோடு மக்களிடத்தில் கடத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. அந்த வித்தை தெரிந்த பாடகர்கள் ஒரு சிலர் மட்டுமே. அதில் ஒருவர் தான் மலேசியா வாசுதேவன். எந்த சூழ்நிலை கொண்ட பாடலாக இருந்தாலும் அதனை எளிதாக ஆழ்மனதில் மக்களிடத்தில் ஊடுருவச் செய்திருக்கிறார் மலேசியா வாசுதேவன் நினைவு நாள் இன்று.

டாபிக்ஸ்