‘ என்னோட ’சுயமரியாதைய எங்கேயும் ' - ஆண்டாள் கோயில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா
எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. - இளையராஜா
ஆண்டாள் கோயில் கருவறை வெளியே உள்ள மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியே அனுப்பட்டதாக கூறி சர்ச்சை எழுந்த நிலையில், அது குறித்து இளையராஜா பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்தப் பதிவில், ' என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி, டிசம்பர் 15ஆம் தேதி நேற்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் இசைக்கப்பட்ட திவ்யபிரபந்த பாசுரங்களுக்கு ஏற்ப பரதம் படித்தவர்கள் தங்களது பரத நாட்டியத்தை அரங்கேற்றம் செய்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா இசையமைத்த திவ்யபிரபந்தங்கள் தான் ஒலிபரப்பப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த இசையமைப்பாளர் இளையராஜாவை ஸ்ரீஸ்ரீஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆண்டாள் ரெங்கமன்னார் ஆலயத்துக்கு தரிசனம் செய்ய அழைத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது அங்கு சுவாமி தரிசனம் செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா நுழைய முயன்றபோது, அங்கு இருக்கும் அந்தணர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார், இளையராஜா. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது. சமூக வலைதள வாசிகள், இளையராஜா ஒரு தலித் என்பதால் அந்தணர்கள் அவரை மண்டபத்திற்குள் அனுமதிக்கவில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் இளையராஜா தற்போது இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
திரைத்துறையில் 50ஆவது ஆண்டை நெருங்கும் இளையராஜா:
திரைத்துறையில் 50ஆவது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இளையராஜா, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசையில் நல்ல பண்டிதம் பெற்றவர். ’தாய் மூகாம்பிகை’ திரைப்படத்தில் இவர் பாடிய ஜனனி ஜனனி ஜகம் நீ பாடலை, யாரும் அவ்வளவு உயிரோட்டமாகப் பாடமுடியாது. அப்படிப்பட்டவரை பிரமாணர் அல்லாதவர் என்னும் வட்டத்தில் சுருக்கி, அவரை அர்த்த மண்டபத்துக்குள் நுழைய அனுமதி மறுத்திருக்கின்றனர்.
முன்னதாக, மூதறிஞர் ராஜாஜி அவர்கள் ஆண்டாள் பற்றி பேசிய கருத்தை கவிஞர் வைரமுத்து சொன்னபோது, கவிஞர் வைரமுத்து பிரமாணர் அல்லாதவர் என்பதால், அவரை மன்னிப்புக்கேட்கச் சொல்லி ஆண்டாள் கோயிலின் ஜீயர்கள் பிரச்னை செய்தனர். இந்நிலையில்,தற்போது பிராமணர் அல்லாத இளையராஜாவுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தேறியிருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கிறது.
டாபிக்ஸ்