HBD Director Mahendran: தமிழ் சினிமாவில் எதார்த்தத்தை புகுத்திய இயக்குநர்! படைப்பாளிகளாலும் போற்றப்படும் கலைஞன்
தமிழ் சினிமாவில் எதார்த்தத்தை புகுத்திய இயக்குநர்களில் முக்கியமானவராகவும், சினிமா ரசிகர்களால் மட்டுமல்லாமல் படைப்பாளிகளாலும் போற்றப்படும் கலைஞனாக இருந்தவர் இயக்குநர் மகேந்திரன்.

தமிழ் சினிமாவில் எழுத்தாளர், இயக்குநர், நடிகராக இருந்து ரசிகர்களின் மனதை தனது படைப்புகளால் கவரந்தவர் மறைந்த இயக்குநர் மகேந்திரன். சினிமாவில் வருவதற்கு முன்பு நாடக ஆசிரியராக தன் வாழ்நாளில் சிறந்த பல படைப்புகளை உருவாக்கினார். எதார்த்தமான திரைக்கதை, வசனங்கள் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர்களில் முக்கியமானவர் மகேந்திரன்.
திரைக்கதை, இயக்கம் என மொத்தமாக 25க்கும் மேற்பட்ட படங்களின் உருவாக்கித்தில் இருந்த மகேந்திரன், ஒவ்வொரு படைப்பிலும் தனது பெயர் சொல்லும் விஷயங்களை செய்தவராகவே திகழ்ந்துள்ளார்.
ரஜினியின் மாறுபட்ட முகத்தை காட்டிய முள்ளும் மலரும்
மகேந்திரன் இயக்கிய முதல் திரைப்படம் முள்ளும், மலரும். ஸ்டைல் மன்னனாக தமிழ் சினிமாவில் உருவெடுத்து வந்த ரஜினிக்குள் இருக்கும் நடிப்பை அரக்கனை வெளிக்காட்டிய படமாக இது அமைந்தது. காளி என்கிற கதாபாத்திரத்தில் தங்கைக்கு அண்ணனாக ரஜினி கொட்டிய எதார்த்த நடிப்பு மாறுபட்ட முகத்தை காட்டியது. இன்றளவும் முள்ளும் மலரும் ரஜினியின் நடிப்புக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தமிழ் சினிமாவில் எதார்த்தத்தை புகுத்தியதில் இயக்குநர் மகேந்திரனின் பங்கு அளபரியது.
மகேந்திரன் பிறப்பு, படிப்பு
இயக்குநர் மகேந்திரன் 1939ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பிறந்து அங்கு பள்ளிப்படிப்பை முடித்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியேட் படிப்பை முடித்தார். பள்ளி காலத்தில் மேடை நாடகங்களில் சிறந்து விளங்கினார்.
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தார். பின்னர் சென்னை சென்று சட்டம் படிக்க முயன்ற அவர், பொருளாதார சிக்கல்களால் அதை தொடர முடியவில்லை. பின்னர் அவர் இனமுழக்கம் பத்திரிக்கையில் செய்தியாளராக பணியாற்றினார்.
பள்ளி, கல்லூரிகளில் சராசரி மாணவர், தமிழ், ஆங்கில இலக்கியங்களை வாசிப்பதில் வல்லவராக இருந்தார்.
பள்ளி காலங்களில் லட்டு என்ற தமிழ் இதழை பதிப்பித்தார். பேச்சு, கட்டுரை போட்டிகளில் துடிப்பாக கலந்துகொண்டார். இவர் பிசிராந்தையார் குறித்து எழுதி, தனியாக நடித்தது, தாகூரின் கீதாஞ்சலி விருதை வென்றது.
அவரது மாமா மூலம் அவர் நல்ல சினிமாக்களை பார்க்க தொடங்கினார். மூத்த இயக்குநர் பி.என்.ரெட்டி அவருக்கு காண்பித்த சத்தியஜித்ரேவின் தீன் கன்யா படம் அவருக்கு நல்ல படங்களை இயக்க உத்வேகப்படுத்தியது.
சினிமா பயணம்
நாம் மூவர் படத்தில் திரைக்கதாசிரியராக அறிமுகமானார். தங்கப்பதக்கம் மற்றும் புலி ஆட்டம் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார். பின்னர் 1978ஆம் ஆண்டு முதல் படம் முள்ளும் மலரும் இயக்கினார். இவர் 12 படங்களை இயக்கினார். 2006ஆம் ஆண்டு இயக்கிய சாசனம், இவரது கடைசி படமாகும். அதன் பின்னர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேல் இடைவெளிக்கு பின் 2016ஆம் ஆண்டு தெறி படத்தில் நடிகராக மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து நிமிர், பேட்ட, சீதக்காதி, தெலுங்கில் கட்டமராயுடு போன்ற படங்கலில் நடித்தார்.
மூன்று தேசிய விருதுகள்
1981ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியாக ஒரு ஆண்டுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய நெஞ்சத்தை கிள்ளாதே படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றார். இந்த படம் சிறந்த ஆடியோகிராபி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றது.
1978ஆம் ஆண்டு உதிரிப்பூக்கள் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். 1978ம் ஆண்டு தமிழ்நாடு மாநில அரசின் திரைப்பட விருதை முள்ளும் மலரும் படத்துக்காக வாங்கினார். இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
சினிமா பிரபலங்களால் போற்றப்படும் கலைஞன்
இவரது கல்லூரிக்கு எம்ஜிஆர் வந்தபோது தமிழ் சினிமாவில் உள்ள வணிகம் குறித்து இவர் பேசிய பேச்சை எம்ஜிஆர் வியந்து பாராட்டியதுடன், அவர் சிறந்த விமர்சகராக முடியும் என்று பாராட்டினார்.
பின்னர் பத்திரிக்கையாளரானவுடன் அவரை சந்தித்த எம்ஜிஆர், மகேந்திரனை பொன்னியின் செல்வன் நாவலுக்கு திரைக்கதை எழுத கேட்டுக்கொண்டார். அது ஏனோ தாமதமானது.
இளையராஜாவுக்கும், மகேந்திரனுக்கும் இடையே சிறப்பான நட்பு உண்டு. அவர்கள் இருவரும் பல படங்களில் ஒன்றாக பணிபுரிந்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகேந்திரன் அவரது ஆரம்ப காலங்களில் நல்ல வழிகாட்டியாக இருந்துள்ளார். பல இடங்களில் ரஜினிகாந்த், தனது வெற்றிக்கு காரணமாக மகேந்திரனை கூறியுள்ளார்.
மணிரத்னம், ஷங்கர் உள்ளட்ட பல்வேறு இயக்குநர்களை ஈர்த்த ஒரு இயக்குனராக இருந்தார். சினிமா குறித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘சினிமா எனக்கு கட்டாய திருமணம் போன்றது. ஆனால் அதில்தான் நான் வாழவேண்டும். ஒரு சில நேரங்களில் அது எனக்கு ஒரு பிரார்த்தனையாகவும், சில நேரங்களில் உடலுறவைப்போலும் இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் மட்டுமல்லாமல் படைப்பாளிகளாலும் போற்றப்படும் கலைஞனாக இருந்த இயக்குநர் மகேந்திரன் பிறந்தநாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/

டாபிக்ஸ்