ஒவ்வொரு பிரேமிலும் நடிக்கும் நடிப்பு அரக்கன்.. வில்லன், காமெடியன் என அனைத்திலும் பிளந்துகட்டிய கலாபவன் மணி பிறந்தநாள்..
தனக்கு கிடைக்கும் சின்ன கதாப்பாத்திரம் தொடங்கி, அனைத்திலும் தன் முத்திரையை பதித்த நடிப்பு அரக்கன் கலாபவண் மணியின் பிறந்தநாள் இன்று.
மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான விலல்ன் மற்றும் குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சால்ககுடியில் பிறந்து வளர்ந்தவர் கலாபவன் மணி. இவரது இயற்பெயர் குன்னிசேரி விட்டில் ராமன் மணி. ஊரில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த மணி, நடிக்க வருவதற்கு முன் மலையள நடகக் குழுவில் மிமிக்ரி கலைஞராகத் தான் பணியைத் தொடர்ந்துள்ளார்.
விஜயகாந்த் படத்தில் அறிமுகம்
மலையாள சினிமாவில் மணி அறிமுகமாகும் முன்னரே நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் பிரபாகரன் படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். இதன்பின் தான் அக்ஷரம் எனும் படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
கலாபவன் மணியின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த படம் தான் சல்லாபம். காரணம், இந்தப் படத்திற்கு பின் தான் அவர் திரைத்துறையில் காமெடியனாகவே அடி எடுத்து வைத்தார். அப்படியே மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியது.
மக்கள் நாயகனான கலாபவண் மணி
அந்த சமயத்தில் இவர் நடித்த வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் எனும் படத்தில் மணியின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இது தமிழில் வெளிவந்த காசி படம் தான். இந்தப் படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியதால் அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் 2 கேரள அரசின் விருதைப் பெற்றார்.
இந்த விருதுகள் கொடுத்த ஊக்கம் தான் அவரை காமெடியைத் தாண்டி குணச்சித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடிக்க வைத்தது. பின் இவற்றிலேயே பெரிதாக கவனம் செலுத்திய மணி நீண்ட நாட்களுக்கு பின்னர் தான் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
தமிழ் படங்கள்
இப்படி மலையாள சினிமாவில் பிஸியாக இருந்த கலாபவண் மணியின் முதல் தமிழ் படமாக அமைந்தது மறுமலர்ச்சி திரைப்படம் தான். மம்முட்டி கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் டிரைவராக நடித்திருப்பார். பின் படத்தின் கதையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்திருப்பார்.
இந்தப் படத்திற்கு பின் தான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் வடசென்னையை சேர்ந்த ரவுடி தேஜாவாக நடித்து அல்ல வாழ்ந்தே இருப்பார். இவரது உடல் அசைவுகளும், வசனங்களும், குரங்கு சேட்டைகளும் தமிழ் சினிமாவிற்கு அத்தனை புதிதாக இருந்தது. ஜெமினி படம் பற்றிய பேச்சு எழுந்தால் நிச்சயம் தேஜா நினைவுபடுத்தப்படுவார்.
பன்முக கலைஞன்
இதையடுத்து சிலம்பரசனுடன் குத்து. சூர்யாவுடன் லேலு, ஆறு, ஜெயம் ரவியுடன் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், ரஜினியுடன் எந்திரன், கமலுடன் பாபநாசம் என நடித்து அசத்தி இருப்பார். கதையில் தனக்கான இடம் மிகவும் சிறியதாக இருந்தாலும் திரையில் தோன்றும் இடங்களில் எல்லாம் மக்களை தன்வசம் ஈர்க்கும் திறமை பெற்றுள்ளார்.
இவர் திறமையான நடிகர் மட்டுமல்ல, மிமக்ரி கலைஞர், நாட்டுப்புற பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
மர்ம மரணம்
இத்தனை திறமைகளை தன்னுள் கொண்டிருந்த கலாபவன் மணி, கடந்த 2016ம் ஆண்டு ரத்த வாந்தி எடுத்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு உடலில் அதிகப்படியான மெத்தனால் இருந்ததே காரணம் என கூறப்படுகிறது.
இருப்பினும் இவரது உயிரிழப்பிற்கு சரியான காரணங்கள் வெளிவரவில்லை. அவர் இறப்பதற்கு முன் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார் என்றும், இதை அவராகவே எடுத்துக்கொண்டாரா அல்லது அவருக்கு யாரேனும் கொடுத்தார்களா என்பது குறித்த எந்தத் தகவலும். இல்லை.
மக்கள் கலைஞனுக்கு பிறந்தநாள்
இப்படி ஒரு கலைஞனின் மறைவு நிகழ்ந்ததை அடுத்து மக்கள் அனைவரும் இவரது நடிப்பை புகழ்ந்து வருந்தினர். கலாபவண் மணிக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இயக்குநர் வினயன் 2018ம் ஆண்டு சாலக்குடிகாரன் சங்கதி எனும் கலாபவண் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுத்து வெளியிட்டார்.
அவர் மறைந்தாலும் அவரது நடிப்பும், உடல் அசைவும் மொழியும் அவரை நினைவுபடுத்திக் கொன்டே தான் இருக்கும். அப்படிப்பட்ட மக்கள் போற்றும் கலைஞனுக்கு இன்று பிறந்தநாள்.