தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Last Interview Of Late Director And Actor E. Ramdoss

RIP E.Ramdoss: ‘ஒரு லவ் லெட்டரால் எண்ட்ரி ஆனேன்’ -மறைந்த ராமதாஸின் கடைசி பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 24, 2023 09:03 AM IST

‘‘சங்கமம் நான் எழுதி படம். சங்கமம் எனக்கு திருப்தி கொடுக்கவில்லை, திமிரையே கொடுத்துவிட்டது. இவன் என்னோட பிள்ளை என்பதைப் போல, சங்கமம் என்னோட படம் என திமிராக சொல்ல முடியும்’’ -இ.ராமதாஸ்!

காலமான இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகருமான இ.ராமதாஸ்.
காலமான இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகருமான இ.ராமதாஸ்.

ட்ரெண்டிங் செய்திகள்

நிறைய பேர் சினிமாவிற்குள் வந்ததும், பணக்காரன் ஆகிடலாம், பங்களா வாங்கிடலாம், ஒரு ஹீரோயினை பிடிச்சோம்னா தோட்டம் வாங்கிடலாம் என்ற நினைப்பில் வருகிறார்கள். சினிமாவை லவ் பண்ணனும், பழைய சினிமாவை லவ் பண்ணனும். 

நிறைய படிக்கணும். இந்த கால இளைஞர்கள் வேகமாக இருக்கிறார்கள், ஆனால் படிக்கிறார்களா என தெரியவில்லை. நாவலை படிக்கும் வெற்றி மாறன் மட்டும் வெற்றியடைகிறார். அதற்கு காரணம், அதன் வீரியமே வேறு.

வெற்றி மாறனின் ப்ரேம் பார்த்தாலே, வெற்றி மாறனின் திறமை தெரியும். சினிமா சித்தன் என அவருக்கு பெயர் வைத்திருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது ஏதாவது ஒரு பெண்ணை பார்த்ததும் ஒரு வேகம் வரும். அப்படி தான் எனக்கும் வந்தது. ஒரு கடிதம் எழுதி, அதை  பள்ளிக்கே கடிதத்தை அனுப்பிவிட்டேன். அது தலைமை ஆசிரியருக்கு போகும் என எனக்கு தெரியாது.

‘உன் மார்போடு அணைத்து செல்லும் புத்தகங்களாக நான் இருக்க கூடாதா?’ என்று நான் எழுதிய அந்த புத்தகம், தலைமை ஆசிரியருக்கு சென்றது. அவர் என்னை அழைத்து வரிகளுக்காக பாராட்டினார். இதை நண்பர்களிடம் பகிர்ந்த போது, அவர்கள் தான், ‘டே நல்லா இருக்கு… நீ சினிமாவில் முயற்சி செய்’ என்று கூறினார்கள்.

அடுத்து கவிக்கோ கல்லூரிக்கு போனேன். கவிஞர்கள் வருகிறார்கள், அவர்கள் அருகில் அமர்ந்து, கேட்டு, பார்த்து, எழுத்து மீது காதல் வருகிறது. டிகிரி முடித்தேன், நேரா சினிமாவுக்கு வந்தேன். இங்கு யாரையும் தெரியாது. சரி, நாமே டைரக்ட் பண்ணுவோம் என முடிவு செய்தேன். ‘உதவியாளராக இருந்து தான் டைரக்டர் ஆக வேண்டும்’ என்று மனோபாலா கூறினார். ‘சரி யாரிடமாவது சேர்த்துவிடுங்க’ என்று மனோபாலாவிடம் கேட்டேன். 

பாரதி ராஜாவிடம் போனால் அங்கு ஒரே கூட்டம். நமக்கு கூட்டம் ஆகாது. நிவாஸ் இடம் போய் சேர்ந்தேன். அவருக்கு தமிழ் தெரியாது. என்ன டைட்டில் என கேட்டார், எனக்காக காத்திரு என்று கூறினேன். உடனே அட்வான்ஸ் கொடுத்தார். 

மணிவண்ணனிடம் நான் வேலை கேட்கவில்லை. கோபுரங்கள் சாய்வதில்லை டப்பிங் நடக்கிறது. மனோபாலா அவரை பார்க்க போனார். நானும் கூட போனேன். நானாக போய் உட்கார்ந்து, கரெக்‌ஷன் சொல்லிக்கொண்டிருந்தேன். ‘யார்ரா… இவன்’ என என்னை மணிவண்ணன் பார்த்துக் கொண்டிருந்தார். ‘நம்ம பய தான்’ என மனோபாலா கூற, நான் படித்தவன் என்பதால், அதற்கு மதிப்பளிப்பவர் என்கிற முறையில் என்னை மணிவண்ணன் அனுமதித்தார். அப்படி தான் அவரிடம் இணைந்தேன்.

மதர்லாண்ட் பிக்சர்ஸில் 7 படம் வெள்ளிவிழா படம். அதில் அனைத்திலும் நான் உதவி இயக்குனர். அதனால் தயாரிப்பாளர் கோவை தம்பிக்கு என் மீது நம்பிக்கை. அப்படி  தான் ஆயிரம் பூக்கள் மலரட்டும் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. அந்த நேரம் பார்த்து கோவை தம்பிக்கும் இளையராஜாவுக்கும் மனஸ்தாபம். அதனால் வேறு இசையமைப்பாளரை போட வேண்டியதாகிவிட்டது. இளையராஜா இருந்திருந்தால் இன்னும் பெரிய ஹிட் ஆகியிருக்கும். எனக்கும் இளையராஜாவுக்கும் நல்ல நெருக்கம் உண்டு. அதனால் தான் இரண்டாவது படத்தில் இளையராஜா உடன் இணைந்தேன். 

சங்கமம் நான் எழுதி படம். சங்கமம் எனக்கு திருப்தி கொடுக்கவில்லை, திமிரையே கொடுத்துவிட்டது. இவன் என்னோட பிள்ளை என்பதைப் போல, இது என்னோட படம் என திமிராக சொல்ல முடியும். ஏ.ஆர்.ரஹ்மான் பிச்சிட்டாரு. இயக்குனர் சரண் எனக்கு நண்பரானார். அவர் நட்பில், வசூல் ராஜா படத்தில்  நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். அதன் முன் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் வந்திருக்கிறேன். ஒரே கேரக்டராக வசூல் ராஜா தான் எனக்கு முதல் படம். கமல் சாரே என்னை பாராட்டினார்,’’

என்று அந்த பேட்டியில் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் மறைந்திருப்பது தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு!

IPL_Entry_Point

டாபிக்ஸ்