லட்சுமிக்கு வந்த நாட்டாமை வாய்ப்பு.. ஷூட்டிங் வந்த ரவிக்குமார்.. குறுக்கே புகுந்து வாய்ப்பை தட்டிப்பறித்த குஷ்பு
நாட்டாமை படத்தில் இவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை, குஷ்பு- விற்கு கொடுத்ததின் காரணமாகவே அவர் என் மீது கோபத்தில் இருக்கிறாரோ... அதனால்தான் என்னுடைய திரைப்படங்களில் நடிக்க மறுக்கிறாரோ என்பது - ரவிக்குமார்
பழம்பெரும் நடிகையான லட்சுமிக்கு அவள் விகடன் பத்திரிகை அண்மையில் விருது கொடுத்தது. இந்த விருதை நடிகை நிர்மலா, தேவயாணி மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கொடுத்தனர். அப்போது நாட்டாமை படத்தில் குஷ்பு கதாபாத்திரத்தில் லட்சுமி நடிக்க இருந்தது குறித்து ரவிக்குமார் பேசினார்.
எனக்கு சந்தேகம் இருக்கு
இது குறித்து பேசும் போது, ‘லட்சுமி அம்மாளும், நானும் இரண்டு படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றி இருக்கிறோம். ஒன்று, பெரிய குடும்பம், இன்னொன்று படையப்பா. சிறு வயதில் இருந்தே என்னுடைய குடும்பத்தோடு அவர் நெருங்கியவராக இருந்திருக்கிறார்.
என்னுடைய சகோதரி படித்த அதே பள்ளியில் தான் லட்சுமி அம்மாளும் படித்தார். நான் இப்போதும் அவரது வீட்டின் எதிரே தான் இருக்கிறேன். நான் நிறைய படங்களுக்கு அவரை நடிக்க கூப்பிட்டு இருக்கிறேன்.ஆனால், அவர் பிசியாக இருந்த காரணத்தால், அவரால் நடிக்க முடியாமல் போனது. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது.
வாய்ப்பை பறித்த குஷ்பு
அது, நாட்டாமை படத்தில் இவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை, குஷ்புவிற்கு கொடுத்ததின் காரணமாகவே அவர் என் மீது கோபத்தில் இருக்கிறாரோ... அதனால்தான் என்னுடைய திரைப்படங்களில் நடிக்க மறுக்கிறாரோ என்பது; அந்தக் கோபம் அவருக்கு இன்னும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
நாட்டாமை படத்தில் குஷ்பு நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் லட்சுமி அம்மாளை கேட்க வேண்டும் என்று கூறி, அவரை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தேன்; செல்லும் வழியில், ராஜேந்திர பிரசாத்தை சந்தித்து விட்டு செல்லலாமே என்று அவரை சந்திக்க அவர் இருந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று இருந்தேன்.
அங்கு குஷ்பு என்னை பார்த்து விட்டார். நான் ஏற்கனவே அவருடன் புருஷ லட்சணம் படத்தில் பணியாற்றியிருந்தேன்.இந்த நிலையில் நானும் அவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க, என்ன இந்த பக்கம் வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்; நான் லட்சுமி அம்மாளை நாட்டாமை படத்தில் நடிக்க கேட்பதற்காக சென்று கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன் உடனே அவர் அந்த கதாபாத்திரம் குறித்து கேட்டார். கதாபாத்திரம் குறித்து சொன்னேன்.
உடனே அவர், அந்த கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன் என்று சொன்னார். உடனே நான் அது ஃபிளாஷ்பேக்கிலும் வருகிறது; வயதான தோற்றத்திலும் வருகிறது. இரண்டிலும் நீ பொருந்துவாயா என்பது சந்தேகம்தான் என்று கூறினேன். உடனே அவர் நான் அண்ணாமலை படத்தில் கூட, வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறேன். அதனால் நான் நடித்துக்கொடுக்கிறேன். என்னை கமிட் செய்யுங்கள் என்றார்.
தயாரிப்பாளர் கொடுத்த கிரீன் சிக்னல்
உடனே நான் அந்த படத்தின் தயாரிப்பாளர் சௌத்ரியிடம் சென்று விஷயத்தை சொன்னேன்; இதைக்கேட்ட அவர் ஏற்கனவே அந்த பெண் உன்னுடைய படத்தில் நடித்திருக்கிறது. அந்த பெண்ணிற்கு நல்ல மார்க்கெட்டும் இருக்கிறது; பின்னர் என்ன? அவரையே கமிட் செய்து விடு என்று சொன்னார் இதனையடுத்து தான் நான் குஷ்புவை கமிட் செய்து, கொட்ட பாக்கு பாடல் வைத்து படத்தை வேறு மாதிரியாக மாற்றினேன். உண்மையில் அந்தக்கதாபாத்திரத்தை லட்சுமி அம்மாள்தான் செய்திருக்க வேண்டும்.’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்