கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய ஹீரோக்கள் யாரெல்லாம் தெரியுமா? மோசமான படம் கொடுத்த பிளாப் ஹீரோக்கள் இவர்கள் தான்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய ஹீரோக்கள் யாரெல்லாம் தெரியுமா? மோசமான படம் கொடுத்த பிளாப் ஹீரோக்கள் இவர்கள் தான்

கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய ஹீரோக்கள் யாரெல்லாம் தெரியுமா? மோசமான படம் கொடுத்த பிளாப் ஹீரோக்கள் இவர்கள் தான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 27, 2024 07:00 AM IST

2024ஆம் ஆண்டில் கோலிவுட் சினிமாவின் டாப் ஹீரோக்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் ஆகியோர் நல்ல வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ளனர். அதேசமயம் இந்த லிஸ்டில் இரண்டாம் லெவல் முன்னணி ஹீரோக்களாக இருந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் வசூல் மன்னர்களாக மாறியுள்ளனர்.

கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய ஹீரோக்கள் யாரெல்லாம் தெரியுமா?
கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய ஹீரோக்கள் யாரெல்லாம் தெரியுமா?

அந்த வகையில் இந்தியாவில் அதிக பார்வையாளர்களை கொண்டிருக்கும் சினிமாக்களாக இந்தி மொழியில் வெளியாகும் பாலிவுட் சினிமாக்கள் இருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக தென்னிந்திய சினிமாக்களில் தெலுங்கு மொழி படங்களான டோலிவுட், கோலிவுட் போன்ற சினிமாக்கள் இருக்கின்றன.

கனவாக இருக்கும் ஆயிரம் கோடி வசூல்

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்ற மைல்கல்லை பாலிவுட், டோலிவுட் சினிமாக்கள் எட்டிவிட்டன. சர்ப்ரைஸாக தென்னிந்திய சினிமாக்களில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லாத சாண்டல்வுட் என்ற கன்னட மொழி சினிமாக்களில் கேஜிஎஃப் 2 படம் கூட பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி வசூலை பெற்று சாதனை புரிந்துள்ளது. ஆனால் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களையும், ஜனரஞ்சக அம்சங்களை கொண்ட பொழுதுபோக்கு படங்களையும் கலவையாக கொடுத்து வரும் கோலிவுட் சினிமாக்களுக்கு ஆயிரம் கோடி வசூல் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. ஆனால் இதற்கான முயற்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிலும் அது நிறைவேறாமல் போயுள்ளது.

இருப்பினும் கோலிவுட்டில் வழக்கம் போல் இந்த ஆண்டில் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களும், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக ஜனரஞ்சக படங்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டாகி, பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ளன. அத்துடன் சில முன்னணி ஹீரோக்களின் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படங்களும் அட்டர் பிளாப் ஆக ரசிகர்களை கவராமல் ஏமாற்றியுள்ளது.

2024இல் கோலிவுட்டின் ஹிட் ஹீரோக்கள்

2024இல் கோலிவுட் சினிமாவின் ஹிட் ஹீரோக்களாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரப்படி தளபதி விஜய், சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி ஆகியோர் உள்ளார்கள். கடந்த 2023ஆம் ஆண்டிலும் லியோ படத்தின் வெற்றியால் தளபதி விஜய் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்தார்.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டில் தளபதி விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த செப்டம்பரில் வெளியான தி கோட் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. படத்தில் டபுள் ஆக்டிங்கில் நடித்திருக்கும் விஜய், இளமையான விஜய் தோற்றத்தில் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் நடித்திருப்பார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள், பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 450 கோடிக்கு மேல் வசூலை பெற்றது. இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக வசூலை பெற்ற படமாக தி கோட் படமும், வசூல் மன்னன் என்ற பெருமையை தளபதி விஜய்யும் பெற்றுள்ளார்.

விஜய்க்கு அடுத்தபடியாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டில் பொங்கல் ரிலீஸாக அயலான், தீபாவளி ரிலீஸாக அமரன் படங்கள் வெளியாகின. இதில் அயலான் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டானதுடன் ரூ. 80 கோடிக்கு மேல் வசூலை பெற்றது. அதேசமயம் ராணுவத்தில் வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து வெளியான அமரன் படம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. படத்தில் ஹீரோயினாக நடித்த சாய் பல்லவி நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அத்துடன் சிவகார்த்திகேயனும் படத்துக்கு சிறப்பான உழைப்பை வெளிப்படுத்தியிருப்பதாக பாராட்டுகளை பெற்றார். தீபாவளி ரேஸில் வெற்றி பெற்ற அமரன் ரூ. 330 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது

இந்த ஆண்டின் சக்ஸஸ் ஹீரோக்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விஜய், சிவகார்த்திகேயனுக்கு அடுத்தபடியாக உள்ளார். இவரது ஆக்‌ஷ்ன் த்ரில்லர் படமான வேட்டையன் கமர்ஷியல் ஹிட்டாகி வசூல் வேட்டையும் நடத்தியது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக ரஜினியின் நடிப்பு, ஸ்டைல் என அனைவரையும் வெகுவாக கவர்ந்த வேட்டையன் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்தது

இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி தனது 50வது படமான மகாராஜா மூலம் பான் இந்தியா அளவில் பேமஸ் ஆனார். த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றதுடன், வணிக ரீதியாகவும் வெற்றியை பெற்றது. படம் தற்போது சீன மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு சீனாவிலும் வெளியாகி

இருக்கும் நிலையில், அங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ரூ. 190 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூலை பெற்றுள்ளது.

சிறுபட்ஜெட் ஹீரோக்கள்

இவர்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டில் கேப்டன் மில்லர், ராயன் ஆகிய படங்கள் வெளியானது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. கேப்டன் மில்லர் படம் வசூலில் கோட்டை விட்டாலும், ராயன் படம் தனுஷின் 50வது படமாக அவரது இயக்கத்திலேயே வெளியாக பட்டையை கிளப்பியது. ஏ சர்ட்டிபிக்கேட் பெற்றிருந்த இந்த படம் ரூ. 150 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றிருக்கிறது. இது தனித்துவ சாதனையாகவும் அமைந்துள்ளது.

தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம்
தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம்

இந்த வரிசையில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் இல்லாவிட்டாலும் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி நல்ல லாபத்தை பெற்று தந்த படங்களில் நடித்த ஹீரோக்களாக அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி ரூ. 80 கோடி, கார்த்தி நடித்த மெய்யழகன், ரூ. 50 கோடி, ஹரீஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடித்த லப்பர் பந்து, ரூ. 42 கோடி வசூல் செய்த படங்களாக உள்ளன. மேலும் ஹீரோ கதாபாத்திரம் இல்லாமல் வெளியாக கதையே படத்தின் ஹீரோவாக இருந்த வாழை படமும் ரூ. 40 கோடிக்கு மேல் வசூலை பெற்று இந்த லிஸ்டில் உள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் லாபத்தை அள்ளிக்கொடுத்த ஹீரோக்கள்
குறைந்த பட்ஜெட்டில் லாபத்தை அள்ளிக்கொடுத்த ஹீரோக்கள்

பிளாப் ஹீரோக்கள்

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான சில முன்னணி ஹீரோக்களின் படங்கள், கடுமையான விமர்சனங்களால் துவைக்கப்பட்டதோடு பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சொதப்பியது. இந்த படங்களை உருவாக்க செலவழிக்கப்பட்ட பட்ஜெட்டை காட்டிலும் குறைவான வசூலையை பெற்று படத்தின் ஹீரோக்களை ஆண்டின் பிளாப் ஹீரோக்கள் ஆக்கியுள்ளது.

இந்த லிஸ்டில் சுமார் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி பல மொழிகளில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரூ. 120 கோடி வசூலை கூட தாண்டவில்லை என கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் ஓராண்டு இடைவெளிக்கு பின் வெளியான இந்த படம் அவரது சினிமா கேரியரில் படுதோல்வியை சந்தித்தது.

2024ஆம் ஆண்டின் பிளாப் ஹீரோக்கள்
2024ஆம் ஆண்டின் பிளாப் ஹீரோக்கள்

இதற்கு அடுத்தபடியாக ரூ. 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி, உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்த இந்தியன் 2 படம் ரூ. 150 கோடி வசூலை மட்டுமே பெற்றது. படத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது வசூலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த ஆண்டில் ரூ. 150 கோடி வசூலை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலில் டாப் 10 இடத்தை பிடித்துள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பீரியட் த்ரில்லர் படமாக வெளியான தங்கலான் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் படத்தின் ரிலீசுக்கு பின் ரசிகர்களை கவாரமல் போனதுடன் வசூலிலும் தடுமாறியது. ரூ. 100க்கு கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகி இருந்த படம் ரூ. 80 கோடி வரை மட்டும் வசூலித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் படத்தில் விக்ரம், மாளிவிகா மோகனன், பார்வதி ஆகியோரின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இருந்து வரும் கமல்ஹாசன், சூர்யா, விக்ரம் ஆகியோருக்கு இந்த ஆண்டு சோதனை மிக்கதாக அமைந்துள்ளது.

இதையடுத்து, கமல்ஹாசனுக்கு தக் லைஃப், விக்ரமுக்கு வீர தீர சூரன், சூர்யாவுக்கு ரெட்ரோ ஆகிய படங்கள் அடுத்து வெளியாக இருக்கின்றன. இந்த படங்களில் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் எதிர்பார்ப்பில் இந்த ஹீரோக்கள் காத்திருக்கிறார்கள்.

 

Whats_app_banner