ஸ்டார் தேவையில்லை, கதைதான் முக்கியம்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் அப்புறம் தான்! எப்போதும் கெத்தாக இருக்கும் கோலிவுட் ரசிகர்கள்
கோலிவுட் சினிமாவில் 2024ஆம் ஆண்டு ஸ்டார் நடிகர்களை காட்டிலும், அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்து வரும் டயர் 2 ஹீரோக்களுக்கான ஆண்டாக அமைந்துள்ளது. அத்துடன் பாக்ஸ் ஆபிஸ் வசூலை காட்டிலும் கண்டென்ட்களுக்கு மதிப்பு அளிக்கும் கிங் எனவும் கோலிவுட் ரசிகர்கள் கெத்தாக மீண்டும் நிருபித்துள்ளனர்.
கடந்த ஆண்டை பொறுத்தவரை தளபதி விஜய்யின் லியோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் என இரு படங்களும் தலா ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்தன. இதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 ரூ. 300 கோடிக்கு மேலும் வாத்தி, மாவீரன் போன்ற படங்கள் கணிசமான வசூலையும் பெற்றது.
அத்துடன் விடுதலை முதல் பாகம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சித்தா, மாமன்னன் போன்ற படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்று ஹிட் படங்களாக மாறியது.
பாக்ஸ் ஆபிஸில் டாப்பில் இருக்கும் விஜய்
இந்த ஆண்டிலும் தமிழில் அதிக வசூலை பெற்ற படங்களில் தளபதி விஜய்யின் தி கோட் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த படம் ரூ. 450 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படமும் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. இந்த இரண்டு படங்களும் ஸ்டார் மதிப்பு மிக்க படங்களாக இருப்பதுடன், முந்தையா ஆண்டில் இவர்களின் படங்கள் பெற்ற வசூலை விட குறைவாக உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டில் அதிக வசூலை பெற்ற படமாக தி கோட் இருப்பதால், கோலிவுட் ஹீரோக்களில் விஜய் தான் டாப்பில் இருக்கிறார்.
கண்டென்ட் தான் கிங்
டாப் ஹீரோக்களுக்கு அடுத்த லெவலில் இருக்கும் முன்னணி ஹீரோக்களான தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோரின் 50வது படம் வெளியான ஆண்டு என்ற சிறப்பை 2024 பெற்றுள்ளனது. அதன்படி விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததோடு பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளியது. ஓடிடியில் வெளியாகி பிற மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்படும் படமாக மாறியது. சமீபத்தில் சீனாவில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம் கோடிகளில் வசூலை அள்ளி வருகிறது. வெறும் ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த படம் தற்போது ரூ. 180 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தீபாவளி ரிலீஸ் ஆக சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் அனைத்து தரப்பு ரசகிர்களையும் வெகுவாக கவர்ந்தது. ராணுவத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 325 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த இரு படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக படத்தின் அழுத்தமான கதை, திரைக்கதை மற்றும் கண்டென்ட் முக்கிய காரணமாக இருந்தது.
நல்ல கதையமச்த்துடன் வெளியாகி வசூலை அள்ளிய மற்ற தமிழ் படங்களின் வரிசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் மாதம் வெளியான வாழை, அக்டோபர் மாதம் வெளியான லப்பர் பந்து ஆகிய படங்களும் உள்ளன. நடிகை நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வெளியான வாழை படம் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ. 40 கோடி வரை வசூலை ஈட்டியது. அதேபோல் ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா உள்பட பலர் நடித்து வெளியான லப்பர் பந்து ரூ. 42 கோடிக்கு மேல் வசூலை பெற்றது.
இந்த படங்களை வைத்து பார்க்கையில் நல்ல கதையம்சம் உள்ல படங்கள் நல்ல வரவேற்புடன், வசூலை பெறும் என்பது நிருபணம் ஆகியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய மற்ற படங்கள்
தனுஷின் 50வது படமாக அவர் நடித்து, இயக்கிய ராயன் படம் ஏ சர்டிபிக்கெட்டை பெற்றிருந்த போதிலும் ரசிகர்களை கவர்ந்து ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்தது. படத்தின் கதை, திரைக்கதையுடன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. இதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4, கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் உள்பட சில படங்கள் ரசிகர்களை கவர்ந்ததோடு நல்ல வசூலையும் பெற்றது.
சொதப்பிய டாப் ஹீரோக்கள்
கோலிவுட்டில் இந்த ஆண்டில் சொதப்பிய டாப் ஹீரோக்கள் லிஸ்டில் உலகநாயகன் கமல்ஹாசன் இருந்து வருகிறார். அவரது இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில் ரூ. 150 கோடி மட்டுமே வசூலித்தது. இந்த வரிசையில் சூர்யாவின் கங்குவா ரூ. 120 கோடியும், விக்ரமின் தங்கலான் ரூ. 90 கோடியும் வசூலித்தது. அந்த வகையில் முன்னணி ஹீரோக்களான இவர்கள் இந்த ஆண்டில் சொதப்பலான ஸ்டார்கள் ஆகியுள்ளனர்.