பெரிய ஸ்டார்கள் இல்லை.. இந்த ஆண்டில் ரசிகர்கள் மனதை கவர்ந்து கவனம் ஈர்த்த கோலிவுட் படங்களின் லிஸ்ட்
Kollywood Rewind 2024: பெரிய ஸ்டார்கள் இல்லாவிட்டாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்து, விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றதுடன் கணிசமான வசூலை பெற்ற சில படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்துள்ளன. அந்த வகையில் கோலிவுட்டில் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக வந்த படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
2024, ஜனவரி 5 தொடங்கி டிசம்பர் 27 வரை சுமார் 200க்கும் மேற்பட்ட படங்கள் கோலிவுட்டில் இந்த ஆண்டில் வெளியாகியுள்ளன. இதில் 10 முதல் 15 படங்கள் வரை மட்டுமே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் கையை கடிக்காமல் நல்ல லாபத்தை பெற்று தந்த படங்களாக இருக்கின்றன. அதன் இந்த இண்டஸ்ட்ரி ஹிட் லிஸ்டில் டாப் ஹீரோக்கள், அவர்களுக்கு அடுத்த லெவலில் இருக்கும் ஹீரோக்கள் படங்கள் தான் உள்ளன. இருப்பினும் புதுமுகங்கள் நடித்த படங்கள், நல்ல கதையம்சம் உள்ள படங்கள் சில விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றதுடன், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது.
அந்த வகையில் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தமிழில் வெளியான படங்களில் ரசிகர்கள் மனதை கவர்ந்து, விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற கவனம் ஈர்த்த படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
ப்ளூஸ்டார்
அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி ஜனவரி 25இல் வெளியான படம் ப்ளூஸ்டார். இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்திருந்த இந்த படத்தில் அசோக் செல்வன், ஷாந்தனு பாக்கியராஜ், ப்ருத்வி ராஜன், கீர்த்தி பாண்டியன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள், கிரிக்கெட் விளையாட்டில் நிலவும் சாதிய தீண்டாமை, இரு ஊர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னையை கூறும் விதமாக இருந்த இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றது, ரசிகர்களுக்கும் பிடித்த படமாக மாறியது. இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.
லவ்வர்
அறிமுக இயக்குநர் பிரபுராம் வயாஸ் இயக்கத்தில் ரெமாண்டிக் படமாக உருவாகியிருந்த இந்த படத்தில் மணிகண்டன், ஸ்ரீ கெளரி ப்ரியா ஆகியோர் நடித்திருப்பார்கள். டாக்சிக் காதல் என்ற புதியதொரு கான்செப்டில் உருவாகி தமிழ் சினிமாவின் காதல் படங்களில் புதிய பரிணாமத்தை எடுத்த காட்டிய லவ்வர் படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்ததோடு நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. காதலர் தினம் ஸ்பெஷலாக பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகியிருந்த இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் உள்ளது.
ஜெ பேபி
இயக்குநர் பா. ரஞ்சித் உதவியாளர் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா மனோகரன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, உண்மை கதையை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த இந்த படம் விமர்சக ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது. ஊர்வசி தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டதாகவும் விமர்சிக்கப்பட்டது. ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்ற நல்ல வசூலையும் குவித்த ஜெ பேபி படம் மார்ச் 8ஆம் தேதி வெளியான நிலையில், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.
ஸ்டார்
கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் மே மாதம் 10ஆம் தேதி வெளியான ரெமாண்டிக் ட்ராமா படம் ஸ்டார். லால், அதீதி போகன்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்பட பலர் நடித்திருந்த இந்த படம் நேர்மறையான விமர்சனங்களுடன் ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள், பின்னணி இசை என இரண்டும் ரசிகர்களை கவர்ந்தன. ரூ. 20 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை பெற்ற இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.
கருடன்
ஆர். எஸ். துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, மலையாள நடிகர் உன்னி முகுந்தன், சசிக்குமார், ஷ்ஷிவிதா, ரோஷினி ஹரிப்பிரியன் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்த படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. சூரியின் அபாரமான நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அத்துடன் படமும் ரூ. 30 கோடிக்கு மேல் வசூலை பெற்ற நல்ல லாபத்தை பெற்று தந்தது. மே மாதம் 31 தேதி வெளியான கருடன் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.
ரகுதாத்தா
கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடிக்க அரசியல் காமெடி படமாக உருவாகியிருந்த ரகுதாத்தா படத்தை சுமந்த் குமார் இயக்கியுள்ளார். ரவீந்திரா விஜய், எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுக்கும் கதையம்சத்தில் அமைந்திருந்தது. விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் அமைந்திக்கும் ரகு தாத்தா நல்ல லாபத்தையும் பெற்று தந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது
கொட்டுக்காளி
சூரி, அன்னா பென் நடிப்பில் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கொட்டுக்காளி. தமிழ் சினிமா வரலாற்றில் இசையமைப்பாளரே இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற கொட்டுக்காளி படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வந்த விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றது. இந்த படத்திலும் சூரியின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது
நந்தன்
சசிக்குமார், ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்து இரா. சரவணன் இயக்கத்தில் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான படம் நந்தன். மக்களால் தேர்வு செய்யப்படும் ஊர் பஞ்சாயத்து தலைவர்களுக்கு எதிராக நிகழும் சாதிய பாகுபாடு பற்றி பேசும் விதமாக கதையமசத்தில் அமைந்திருந்து இந்த படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் வெளிவந்தன. அத்துடன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நந்தன் படம் கணிசமான வசூலையும் குவித்தது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்த படம் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது.
மேற்கூறப்பட்டிருக்கும் இந்த படங்கள் தவிர, இந்த ஆண்டில் வெளியான வாழை, லப்பர் பந்து உள்பட மேலும் சில படங்களும் மக்களை கவர்ந்ததுடன், விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்றன.
டாபிக்ஸ்