Thengai Srinivasan : தமிழ் சினிமா பன்முக கலைஞன்.. பெயரில் தேங்காய் என்ற அடைமொழி வந்ததன் சுவாரஸ்ய பின்னணி
Thengai Srinivasan name Reason: தமிழ் சினிமாவில் பன்முக கலைஞன் என்ற பெயரெடுத்தவர் நடிகர் தேங்காய் சீனிவாசன். சினிமாவில் கொடூர முகத்தையும், குழந்தை முகத்தையும் காட்டி கைதட்டல்களை அள்ளிய இவரது பெயருக்கு பின்னர் தேங்காய் என்ற அடைமொழி வந்ததன் சுவாரஸ்ய பின்னணி பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ஹீரோ, காமெடி, வில்லன், குணச்சித்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்கள் மனதில் குடிபுகுந்தவர் மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசன். சொல்லப்போனால் சினிமாவில் கொடூர முகத்தையும், குழந்தை முகத்தையும் காட்டி கைதட்டல்களை அள்ளிய மிக சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
ரயில்வேதுறையில் இருந்த வந்த நடிகர்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் நாகேஷுக்கு பிறகு ரயில்வே துறையில் இருந்து வந்த நடிகராக தேங்காய் சீனிவாசன் இருந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தான் அவர் பிறந்த ஊர். இவரது தந்தை ராஜவேலு முதலியாரும் நடிகர் தான். அவர் எழுதிய கலாட்ட கல்யாணம் நாடகத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். தனது தந்தை சாதிக்க முடியாததை சினிமாவில் செய்து காட்டினார் தேங்காய் சீனிவாசன்.
பள்ளி படிப்பை முடித்து சென்னஐ ஐசிஎஃப்பில் பணிபுரிந்த இவரது கலை தாகத்துக்கு தீனி போட்டது ரயில் துறையில் இயங்கி வந்த நாடகக்குழு. ரயில்வே துறை சார்பில் அரங்கேற்றப்பட்ட நாடகங்களில் நடித்தி தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். ரயில்வே துறை நாடகங்கள் தான் அவரது நடிப்பு பசிக்கு தீனி போட்டது
தேங்காய் பட்டம் இணைந்தது எப்படி
தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து கே. கண்ணன் நாடக குழுவில் இணைந்தார் சீனிவாசன். இது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
கண்ணன் நாடககுழுவில் அரங்கேற்றப்பட்ட கல்மனம் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக வந்து அரங்கத்தை தனது அற்புதமான நகைச்சுவையால் குலுங்க வைத்தார் தேங்காய் சீனிவாசன். சீரியஸான இந்த நாடகத்தில் சீனிவாசனின் நடிப்பு பார்வையாளர்களை இலகுவாக்கி அவரது பெயருக்கு பின்னால் தேங்காய் என்ற அடைமொழி ஒட்டிக்கொள்ள காரணமாக அமைந்தது.
அதுமட்டுமல்லாமல் இந்த நாடக்கத்தை அப்போது பார்க்க வந்த மூத்த நடிகர் தங்கவேலு, சீனிவாசன் நடிப்பை வெகுவாக பாராட்டியதோடு, அவரது பெயருக்கு பின்னர் தேங்காய் என்ற அடைமொழியோடு அழைக்கலாம் என்று பட்டம் சூட்டினார். இப்படிதான் சீனிவாசனின் பெயருக்கு பின்னர் தேங்காய் ஒட்டிக்கொண்டு தேங்காய் சீனிவாசன் ஆனது.
முதல் படத்திலேயே சிஐடி கதாபாத்திரம்
ஜெய்ஷங்கர் அறிமுகமான இரவும் பகலும் படத்தில் தேங்காய் சீனிவாசன் அறிமுகமாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பு அமையவில்லை.
ஆனால் அதே ஆண்டில் வெளியான த்ரில்லர் படமான ஒரு விரல் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் தேங்காய் சீனிவாசன். இந்த படத்தில் சிஐடி கதாபாத்திரத்தில் தோன்றி கொலை செய்த கொலையாளியை கண்டறியும் வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் வாய்ப்பையும் அவருக்கு நாடகத்தில் பெயர் வாங்கி கொடுத்த கே. கண்ணன் தான் வாங்கி கொடுத்தார்.
சினிமாவில் 1965இல் தொடங்கிய தேங்காய் சீனிவாசன் நடிப்பு பயணம் 1987இல் அவர் இறக்கும் வரை நீடித்தது.
பன்முக கலைஞன்
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தோன்றி முத்திரை பதித்த நடிகராக இருப்பவர் தேங்காய் சீனிவாசன். இவர் நடித்த படங்களில் முக்கால்வாசி வரை ஜெய்சங்கருடன் இணைந்து நடித்துள்ளார்.
தில்லு முல்லு படத்தில் இவர் நடித்த குணச்சித்திர கதாபாத்திரம், இந்திய சினிமாவின் சிறந்த 25 நடிப்புகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. அதேபோல் காசேதான் கடவுளடா படத்தில் சாமியராக இவரது நடிப்பு பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனது. போர்டர் பொன்னுசாமி, கலியுக கண்ணன், நான் குடித்து கொண்டே இருப்பேன் போன்ற சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். மொத்தம் 900த்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பன்முக கலைஞனாக தோன்றி பாராட்டுகளை குவந்த நடிகராக இருந்தவர் தேங்காய் சீனிவாசன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்