இந்து முறைப்படி கீர்த்தி சுரேஷ் திருமணம்.. தந்தை மடியில் அமர்ந்து தாலி கட்டும் வைபோகம் - வைரலாகும் திருமண கிளிக்ஸ்
காதலர் ஆண்டனி தட்டிலை மணம் முடித்த கீர்த்தி சுரேஷ் திருமதி ஆகியுள்ளார். சிவப்பு சேலை அணிந்து, பாரம்பரிய நகைகள் அணிந்து கீர்த்தி சுரேஷ் மணப்பெண்ணாக இருக்கும் புகைப்படம் வைரலாக வருகிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் பறவைகளாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் ஆகியோருக்கு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் மணமக்கள் ஆகியுள்ளனர். கோவாவில் நடைபெற்ற இவர்களின் திருமண வைபோகத்தில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். இதையடுத்து தனது இன்ஸ்டாவில் திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.
இந்து முறைப்படி திருமணம்
கீர்த்தியின் திருமணம் இந்து முறைப்படி நடந்துள்ளது. பிராமணர்கள் சடங்குகளின்படி தந்தை சுரேஷ் குமார் மடியில் கீர்த்தி அமர்ந்திருக்க, மணமகன் ஆண்டனி தட்டில் அவருக்கு தாலி கட்டியுள்ளார். மணமக்கள் கழுத்து நிறைய மாலைகள் அணிய, கீர்த்தி சுரேஷ் சிவப்பு நிற சேலை, பாரம்பரிய ஆபரணங்கள் அணிந்து திருமண கோலத்தில் இருந்தார்.
புரோகிதர்கள் மந்திரம் ஓத கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் இனிதே நடைபெற்று முடிந்த நிலையில், பின்னர் திருமணம் தொடர்பான சடங்குகளும் நடந்துள்ளன. தாலி கட்டியது முதல், சடங்குகளில் பங்கேற்றது வரை திருமண புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்திருப்பதோடு, தனது க்யூட்டான வளர்ப்பு நாய் மற்றும் கணவர் ஆண்டனி தட்டிலுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தையும் #ForTheLoveOfNyke என்ற ஹேஷ்டாக்குடன் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் வாழ்த்து மழை
"உங்கள் இருவருக்காகவும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்", "மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்", இருவரும் "ஒன்றாக சேர்ந்து வாழ வாழ்த்துகள்", "இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும்" என ரசிகர்களும், பிரபலங்களும் புதுமண தம்பதிகளை வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் தனது தந்தை சுரேஷ் குமார், தாயாரும் முன்னாள் நடிகையுமான மேனாகவுடன் இணைந்து திருப்பதி சென்றிருந்த கீர்த்தி சுரேஷ், தனது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக இருக்க போகும் திருமணம், பாலிவுட் என்ட்ரி சிறப்பாக இருக்க வேண்டும் என ஆசி பெற்றதாக தெரிவித்தார்.
கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் பேபி ஜான் திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது. தமிழில் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெறி படத்தின் ரீமேக்காக பேபி ஜான் உருவாகியுள்ளது. இந்த படத்தில் வருண் தவான் ஹீரோவாகவும், சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தில் சிங்கிளாக நைன் மடாக்கா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன், சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டானது. இதுவரை இல்லாத அளவில் இந்த பாடலில் கவர்ச்சி தரிசனத்தை வெளிப்படுத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதனால் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தின் ட்ரெய்லரும் கடந்த இரு நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கீர்த்தி சுரேஷ் படங்கள்
இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷுக்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது. இவர் கதையின் நாயகியாக நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ரகு தாத்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் உச்ச நடிகையாக இருக்கும்போது திருமணம் செய்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பாரா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.