Jigarthanda: தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கேங்ஸ்டர் படம்..! ஜிகர்தண்டா படம் பற்றி அறிந்திடாத விஷயங்கள்
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கேங்ஸ்டர் படமாகவும், திரைக்கதை, நடிப்பு, டெக்கினிக்கல் மற்றும் மேக்கிங்கில் புதிய அனுபவத்தை தந்த படமாகவும் இருக்கும் ஜிகர்தண்டா படம் பற்றி அறிந்திடாத விஷயங்கள் பார்க்கலாம்
தமிழ் சினிமா ரசிகர்களால் என்றைக்கும் மறக்க முடியாத மியூசிக்கல் கேங்ஸ்ட்ஸ்டர் படமாக கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா படம் இருந்து வருகிறது. இதற்கு காரணமாக படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை மட்டுமல்லாமல் நடிகர்களின் நடிப்பில், மேக்கிங் உள்பட இதர டெக்கினிக்கல் விஷயங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்து தான்.
ரசிகர்களை கவர்ந்த நடிகர்கள் நடிப்பு, டெக்னிக்கல் விஷயங்கள்
படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், செளந்தரராஜா, வினேதினி வைத்தியநாதன், அம்பிகா, சங்கிலி முருகன் என பலர் நடித்திருப்பார்கள். இதில் தோன்றிய அனைவருக்கும் முக்கியமான காட்சிகள் இடம்பிடித்திருக்கும். இதில் தங்களது அபார நடிப்பால் படத்துக்கு அனைவரும் வலு சேர்த்திருப்பார்கள்.
திரைக்கு பின்னால் ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை இயக்கம், ஸ்டண்ட் போன்ற டெக்னிக்கல் விஷயங்களும் தமிழ் சினிமாவுக்கு புதுவித மேக்கிங் ஸ்டைலை உருவாக்கி கொடுத்தன. குறிப்பாக படத்தின் இசை கதைக்கு முக்கிய ஜீவ நாடியாகவே முதல் ப்ரேம் முதல் கடைசி வரை அமைந்திருக்கும்.
ஜிகர்தண்டா படம் பற்றி அறிந்திடாத சில விஷயங்கள்
ஜிகர்தண்டா கதையைத்தான் கார்த்திக் சுப்புராஜ் முதல் படமாக எடுக்க நினைத்தாராம். ஆனால் அறிமுக இயக்குநருக்காக எந்த தயாரிப்பாளரும் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய தயங்கிய நிலையில், குறைவான பட்ஜெட்டில் பீட்சா படத்தை உருவாக்கி வெற்றி கண்டார்.
அதன் பின்னர் ஜிகர்தண்டா படத்தை பிரமாண்டமாக உருவாக்கி தமிழ் சினிமாவின் தனக்கென தனியொரு இடத்தை பிடித்தார்.
படத்தின் முக்கிய சேதுவுக்கு முதலில் தேர்வானது யார்
என்னதான் படத்தின் ஹீரோவாக சித்தார்த்தாக இருந்தாலும், வில்லனாக வரும் சேது கதாபாத்திரம் தான் கதையின் நாயகன் போல் திரைக்கதை முழுவதிலும் ஆக்கிரமித்திருப்பார்.
இந்த கதாபாத்திரத்தில் சிறப்பான, தரமான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் வென்றார். ஆனால் இந்த கேரக்டருக்கு கார்த்திக்கின் முதல் சாய்ஸ் நடிகர் பார்த்திபன் தான். பின்னர் விஜய் சேதுபதியையும் நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றுள்ளது. அப்போது பல படங்களில் பிஸியாக இருந்ததால் அவரால் இதில் நடிக்க முடியாமல் போயுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினி, ஜிகர்தண்டா படத்தை வெகுவாக பாராட்டியதோடு, சேது கதாபாத்திரம் தனக்கு கொடுத்திருந்தால் கூட நடித்திருப்பேன் என கூறினார்.
தெறிக்கவிட்ட இசை
சந்தோஷ் நாரயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி வரவேற்பை பெற்றது. ஆனால் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. ஒவ்வொரு காட்சியையம் பீக் லெவலில் உயர்த்தும் விதமாக படத்தின் பின்னணி இசை அமைந்தது.
பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
தனுஷின் வேலையில்லா பட்டதாரி படம் வெற்றிகரமாக ஓடியதால் திட்டமிட்ட தேதியில் இருந்து தள்ளி ரிலீசான ஜிகர்தண்டா ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்தது. 2006இல் வெளியான தென் கொரியா திரைப்படமான ஏ டர்ட்டி கார்னிவல் படத்தின் சாயல் இதில் அதிகமாக இருந்தது. இருப்பினும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மதுரை பின்னணியில் அமைந்த திரைக்கதை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டைய கிளப்பிய ஜிகர்தண்டா தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட தமிழ் படமாக உள்ளது.
எத்தனை மொழிகளில் வந்தாலும் தமிழில் இருக்கும் ஜீவன், எமோஷன் காரணமாக கொண்டாடப்படும், மனதுக்கு நெருக்கமான படமாக இருக்கும் ஜிகர்தண்டா ஒரு தசாப்தத்தை எட்டியிருப்பதோடு, இன்றுடன் படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்