HT Exclusive: ‘அப்பா சின்ன வயசுலயே தவறிட்டார்.. வீட்ல 4 பொண்ணுங்க.. அம்மாதான் ’ - கார்த்திகை தீபம் ஆர்த்திகா பேட்டி!
HT Exclusive: சின்ன வயசுலயே, என்னோட அப்பா எங்கள விட்டு போயிட்டாரு.. எங்க வீட்ல 4 பொண்ணுங்க.. அதனால, எங்க அம்மா எங்கள வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க.. அவங்க அடிக்கடி சொல்றது ஒன்னே ஒன்னுதான்.. கெட்ட பேர் ரொம்ப சீக்கிரமா வந்திரும்.. - ‘கார்த்திகை தீபம்’ ஆர்த்திகா பேட்டி!

HT Exclusive: சினிமா, வெற்றி எனும் மேடையை, அதை விரும்பும் எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக அமைத்துக்கொடுத்து விடாது; அதற்கான காத்திருப்பும், அதை கைகொள்ள நாம் எடுக்கும் முயற்சிகளும் ஒரு தவத்தினை போன்றது. அதில் கிடைக்கும் அத்தனை அனுபவங்களும், நமக்கு பெரும் பாடங்கள். இதில் சிலர் அந்த காத்திருப்பில் இருக்கும் போதே, ஜொலிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையைச் சேர்ந்தவர்தான் கார்த்திகை தீபம் சீரியல் ஆர்த்திகா.
அந்த சீரியலில் இவர் நடித்து வரும் தீபா கேரக்டருக்கு, மக்களிடம் ஏக வரவேற்பு கிடைத்து வருகிறது. ரீல் லைஃபில் கனகச்சிதமாக வெற்றியை பிடித்திருக்கும் இவர், ரியல் லைஃபில், தான் 6 வருடங்களாக ஆசை, ஆசையாய் காதலித்த காதலன் கார்த்திக் ராஜையும் கரம் பிடித்து இருக்கிறார். அவருடன் உரையாடினேன்.
கார்த்திகை தீபம் தீபாவிடம் இருந்து, ஆர்த்திகா கத்துக்கிட்டது என்ன?
கார்த்திகை தீபம் சீரியல் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேல ஆகப்போது. சீரியல்ல வர்ற தீபா ரொம்ப அமைதியான கேரக்டர். ஆனா, நான் அப்படி கிடையாது. எதுக்கும் சட்டுன்னு ரியாக்ட் பண்ணிடுவேன்.
ஆனா, அந்த குணத்த தீபா கேரக்டர் கொஞ்சம் மாத்திருக்கு. நம்ம வாழ்க்கையில வரக்கூடிய சூழ்நிலைகளுக்கு, நாம உடனே ரியாக்ட் பண்ணாம, கொஞ்சம் நிதானிச்சு, யோசிச்சு அப்புறமா ரியாக்ட் பண்றது, பல நெகட்டிவான விஷயங்கள தள்ளி வச்சுரும். இத தீபா எனக்கு சொல்லி கொடுத்துருக்கா...
இன்னமும் கூட, நெகட்டிவ் கமெண்டுகள் வருதே? எப்படி மனச பத்திரமா பாத்துக்குறீங்க?
நாம என்ன பண்ணாலும், நெகட்டிவிட்டி இருந்துகிட்டேதான் இருக்கும். முன்னாடியெல்லாம், என்ன பத்தி ஏதாவது நெகட்டிவான கமெண்டுகள் வரும் போது.. அய்யோ நம்ம லைஃப் அவ்வளவுதான்னு நினைச்சிருக்கேன். உண்மைய சொல்லணும்னா, நாம அப்படி உடைஞ்சி உட்காரனும்-ன்னுதான் அவங்க அப்படி பண்றாங்க. அது நடக்கும் போது, அவங்க ஜெயிச்சிருவாங்க..
அதுக்கு நாம இடம் கொடுக்கக்கூடாது. இங்க எதுவும் உடனே மாறப்போறதும் இல்ல.. எதுவும், எப்போதும் மாறம இருக்கப்போறதும் இல்ல.. அதனால, நாம நமக்கு என்ன வேணுமோ, அதுல மட்டும் கவனம் வச்சி, போயிகிட்டே இருந்தா போதும்.
இந்த உலகத்துல, நார்மலான மனுஷனா வாழ்றது ரொம்ப கஷ்டம். பிரச்சினைகள சந்திக்க, ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்க வேண்டியது இருக்கு.. அதுக்கு நம்ம ஃபேமிலி சப்போர்ட்டும் ரொம்ப முக்கியம். அது இருந்தா தைரியம் தானா வந்திரும். அது எனக்கு நிறையவே இருக்கு
குடும்பத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பீங்க போல?
நான் இன்னைக்கு இந்த இடத்துல இருக்குறதுக்கு ஒரே காரணம் என்னோட ஃபேமிலிதான். சின்ன வயசுலயே, என்னோட அப்பா எங்கள விட்டு போயிட்டாரு.. எங்க வீட்ல 4 பொண்ணுங்க.. அதனால, எங்க அம்மா எங்கள வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க.. அவங்க அடிக்கடி சொல்றது ஒன்னே ஒன்னுதான்.. கெட்ட பேர் ரொம்ப சீக்கிரமா வந்திரும்..
ஆனா, நல்ல பேர் எடுக்க நேரம் பிடிக்கும். அது எப்போதுமே என்னோட மைண்ட்ல இருக்கும். அவங்க, அவ்வளவு கஷ்டங்களை தாங்கி இருக்காங்க… நானும் நிறைய பாத்துட்டேன். அந்த அனுபவங்கள் எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்துருக்கு.. அத என்னைக்குமே நான் மறக்க மாட்டேன்.
கார்த்திக் ராஜ்கிட்ட அப்படி என்ன பிடிச்சது?
நானும், கார்த்திக்கும் கிட்டத்தட்ட 6 வருஷம் லவ் பண்ணோம். இதுக்கிடையில சினிமா, சீரியல்ன்னு என்னோட வாழ்க்கை பாதையும் மாறிடுச்சு.. இந்த காலத்துல, நான் நிறைய பேர சந்திச்சு இருக்கேன். சிலர் என்கிட்ட லவ் ப்ரொபோஸூம் பண்ணிருக்காங்க…
ஆனா, கார்த்திக் என்ன புரிஞ்சி நடந்துகிட்ட மாதிரி, வேற யாரும் என்கிட்ட நடந்துக்கல.. என் கணவர் எனக்கு அவ்வளவு சப்போர்ட்டா இருக்கார். காதல்ல எல்லாத்தையும் விடவும், இருவருக்குமான புரிதல் ரொம்ப முக்கியம்.. அது நல்லா இருந்தாலே, நம்பிக்கை தானா வந்துரும். வார்த்தையால இல்லாம, உண்மையாவே ஒருத்தருக்கொருத்தர் மரியாதை கொடுத்துக்குறதும், ரொம்ப முக்கியமான விஷயம்னு நினைக்கிறேன்.
சினிமாவுக்கு போகணும்னு ஆசை இருக்கா?
சினிமாவில் இருந்துதான் சீரியலுக்கு வந்தேன். சீரியல்ல இருந்து சினிமாவுக்கு போகணும்னு நிச்சயமா ஆசை இருக்கு..ஆனா அழுத்தமான கதைகள்ல, கதாபாத்திரங்ள்ல நடிக்கணும்னு நினைக்கிறேன். அந்த மாதிரியான வாய்ப்புகள் இன்னும் வரல. வாய்ப்புகள் வரும் போது, நிச்சயமா நான் நடிப்பேன். அதுக்கு என்னோட குடும்பத்துலயும் முழு சப்போர்ட் இருக்கு...” என்று சொல்லி விடை பெற்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்