Shihan Hussaini: இஸ்லாமிய முறைப்படி இறுதி அஞ்சலி.. சொந்த ஊரில் ஹுசைனி உடல் நல்லடக்கம்
Shihan Hussaini: இஸ்லாமிய முறைப்படி இறுதி கராத்தே மாஸ்டர் ஹுசைனிக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், சொந்த ஊரான மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே காஜிமார் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.

Shihan Hussaini: கராத்தே, வில்வித்தை பயிற்சியாளரும், நடிகருமான ஷிகான் ஹுசைனி அரிய வகை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 1.45 மணியளவில் ஹுசைனி உயிர் பிரிந்தது. ஹுசைனி இறந்த தகவலை அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இவரது கராத்தே, வில்வித்தை உள்பட தற்காப்பு கலை வீரர்கள், திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹுசைனி மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ஹுசைனி உடல் நல்லடக்கம்
உயிரிழந்த காரத்தே மாஸ்டரான ஷிகான் ஹுசைனி உடல் சொந்த ஊரான மதுரைக்கு இன்று காலை ஆம்பூலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய காஜிமார் தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் ஹுசைனியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஏராளாமான கராத்தே, வில்வித்தை வீரர்கள், உறவினர்கள், பொதுமக்கள் பலரும் ஹுசைனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர் காஜிமார் பள்ளிவாசலுக்கு உறவினர்களால் சுமந்து செல்லப்பட்ட ஹுசைனி உடலானது, இஸ்லாமிய மத முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்டது.
புற்று நோய் பாதிப்பு
ரத்த புற்று நோய் மற்றும் அப்லாஸ்டிக் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹுசைனி தற்போது அதற்கான சிகிச்சை பெற்று வருந்தார. இதையடுத்து இன்னும் சில நாட்கள் மட்டுமே தான் உயிருடன் இருக்கப்போவதாக உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், தான் ஒரு நாள் உயிர் வாழ வேண்டுமானாலும் கூட இரு பாட்டில் ரத்தத்தை ஏற்ற வேண்டும் என்ற நிலையில், மிகவும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார் ஹுசைனி. மருத்துவர்களும் ஒன்றும் செய்ய முடியாது என கைவிட்டுவிட்டதாகவும் கூறிய அவர், மேலும் தனது நாள்களை எண்ணிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனாலும் தான் எதை பற்றியும் பயப்படவில்லை, தைரியமாக போராடுவதாக கூறியிருந்தார்.
உடல் உறுப்புகள் தானம்
கடந்த 20 நாள்களுக்கும் மேலாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த வந்தார். தான் இறப்பதற்கு முன்னதாக ஹுசைனி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருந்தார்.
ஷிஹான் ஹுசைனி தனது சமீபத்திய சமூக ஊடகப் பதிவின் மூலம் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்யும் முடிவை அறிவித்தார். தான் மறைந்த மூன்று நாள்களுக்குப் பிறகு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்க வேண்டும். அந்த கல்லூரியின் நிறுவனர் ராமசாமி உடையார், தனது கராத்தே சங்கத்தின் நீண்டகால வழிகாட்டியாக இருந்ததாகவும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தன் உடலை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார்.
மேலும், தனது கராத்தே மற்றும் வில்வித்தை மாணவர்களிடம் தனது இதயத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார், இது அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆழமான பிணைப்பைக் குறிக்கிறது. ஒரு வழிகாட்டி, பயிற்சியாளர் மற்றும் போராளியாக எனது மரபு வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று கூறினார்.
ஹுசைனிக்கு நிதியுதவி
கராத்தே ஹுசைனியின் உடல் நிலை பற்றி அறிந்த திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் அவரை நேரில் சென்று சந்தித்து வருகிறார்கள்.உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ள வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி, தனக்கு உதவக்கோரி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
பாலசந்தரால் அறிமுகம்
கராத்தே ஹுசைனி என்று அழைக்கப்படும் ஷிஹான் ஹுசைனி, தமிழ் சினிமாவில் சில படங்களில் நடிகராக தோன்றியுள்ளார். கராத்தே மாஸ்டர், வில்வித்தை பயிற்சியாளராக இருந்து வரும் இவர் தற்காப்பு கலைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவர்களில் ஒருவராக திகழ்கிறார்.
மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, விஜய் என தமிழ் சினிமாவில் பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். கடைசியாக விஜய்சேதுபதியுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.
பவண் கல்யாணுக்கு ஆசிரியர்
தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரும், ஆந்திர துணை முதலமைச்சராக இருந்து வரும் பவன் கல்யாண், ஹுசைனியின் மாணவராக இருந்துள்ளார். ஹுசைனி கராத்தே மட்டுமல்லாமல், வில்வித்தை, சமையல் கலை போன்ற துறைகளிலும் பிரபலமானவராக இருந்துள்ளார் ஹுசைனி.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மற்றும் தளபதி விஜய் தன்னை வந்து சந்தித்து விட்டு செல்ல வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார். தனது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், இந்தத் துறைகளை மேம்படுத்துவதிலும் அவர்களின் ஆதரவை நாடுகிறேன். விளையாட்டு மீதான அவரது அசைக்க முடியாத ஆர்வம் அவரது மாணவர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று கூறியிருந்தார்.

டாபிக்ஸ்