31 Years of Maharasan: முறுக்கு மீசை லுக்கில் மெட்ராஸ் பாஷை..! நட்புக்காக சம்பளம் வாங்காமல் கமல்ஹாசன் நடித்த படம்
சம்பளமே வாங்காமல் கமல்ஹாசன் நடித்திருந்த மகாராசன் படம் சூப்பர் ஹிட்டானதுடன் நல்ல வசூலையும் பெற்று தந்தது.
கமல்ஹாசன் நடிப்பில் காமெடி படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததுடன், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை ஈட்டிய படம் மகாராசன். இந்த படம் முழுவதிலும் முறுக்கு மீசையுடன் , வரும் கமல், கசாப்பு கடைக்காரர் வேடத்தில் நடித்திருப்பார். அத்துடன் படத்தில் மெட்ராஸ் பாஷை பேசி அசத்தியிருப்பார். அவருக்கு ஜோடியாக பானுப்பிரியா நடித்திருப்பார்.
ராமேஷ் அரவிந்த், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, வி.கே. ராமசாமி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். ஜி. என். ரங்கராஜன் படத்தை தயாரித்து இயக்கியிருப்பார்.
கமலை வைத்து கல்யாணராமன், எல்லாம் இன்பமயம், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா என ஹிட் படங்களை கொடுத்தவர் ஜி.என். ரங்கராஜன். 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் மகாராசன் படத்துக்காக இணைந்தது. கடன் பிரச்னையால சிக்கிய இவருக்கு உதவும் விதமாக இந்த படத்தில் சம்பளமே வாங்காமல் கமல்ஹாசன் நடித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
காமெடி படமாக இருந்தாலும் தங்கை சென்டிமெண்ட்டை பின்புலமாக கொண்டு பக்கா கமர்ஷியல் பாணியில் படம் உருவாக்கப்பட்டிருக்கும். கவுண்டமணி - செந்திலின் காராகாட்டகாரன் வாழைப்பழ காமெடி போல் இந்த படத்திலும் கசாப்பு கடை வைத்திருக்கும் கமல் கவுண்டமணியிடம் கோழி காண்பித்து "பெருசா இருக்கசொல வெட்னது, சிறுசா இருக்கசொல வெட்னது" என்று சொல்லும் காமெடி மிகவும் பிரபலமானது.
வாலி பாடல் வரிகள் எழுத இளையராஜா இசையமைப்பில் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.
அரச்சி அரச்சி, ராக்கோழி கூவும் பாடல்கள் சிறந்த மெலடி பாடலாக அமைந்துள்ளன.
இந்த படத்துக்கு முன்னர் கடும் நிதி நெருக்கடியால் தனது வீடு உள்பட அனைத்தையும் இயக்குநர் ஜி. என். ரங்கராஜன் அடகு வைத்ததாக கூறப்படும் நிலையில், மகாராசன் படம் வெற்றியால் கடன் அனைத்தையும் சரி செய்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக கமல் சம்பளம் பெறாமல் நடித்ததற்கு நன்றி செலுத்தும் விதமாக இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் தனது வீட்டுக்கு கமல் இல்லம் என பெயர் வைத்தாராம். அதே சமயம் இந்த படம்தான் அவருக்கு கடைசி படமாகவும் அமைந்தது. இந்த படத்துக்கு பின் அவர் திரைப்படங்கள் இயக்கவில்லை.
கமலின் சிறந்த காமெடி படங்களில் ஒன்றாகவும், சிறந்த டைம்பாஸ் படமாகவும் இருந்து வரும் மகாராசன் வெளியாகி இன்றுடன் 31 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்