Raja Paarvai: மாற்றுத்திறனாளி கமல்; மாதவி ரொமன்ஸ்.. மறக்க முடியா ராஜபார்வை படம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Raja Paarvai: மாற்றுத்திறனாளி கமல்; மாதவி ரொமன்ஸ்.. மறக்க முடியா ராஜபார்வை படம்!

Raja Paarvai: மாற்றுத்திறனாளி கமல்; மாதவி ரொமன்ஸ்.. மறக்க முடியா ராஜபார்வை படம்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 10, 2023 06:15 AM IST

கமலுக்கு இப்படம் படுதோல்வியை கொடுத்தது. இந்த படத்தின் தோல்வியால் கடும் நஷ்டமடைந்த கமல்ஹாசன், கிட்டத்தட்ட 5 வருடங்கள் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை மூடி வைத்திருந்தார்.

ராஜபார்வை
ராஜபார்வை

நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ரகு சிறு வயதிலேயே அம்மாவை இழந்து விடுகிறான். ரகுவின் மீது, அப்பா பாசத்தைக்கொட்டினாலும், சித்தியின் காழ்ப்புணர்வில் இருந்து ரகு தப்பமுடியவில்லை. அவனுக்கு ஒரே ஆறுதல் பாட்டி மட்டும்தான். ஒரு கட்டத்தில் பாட்டியும், அப்பாவும் இறந்து விட, பாசத்திற்காக ஏங்கும் ரகுவுக்கு டைஃபாய்டு வந்து விடுகிறது.

காய்ச்சலால் அவதிப்படும் ரகுவை சித்தி சரிவர கவனிக்காமல் போக, அவனுக்கு பார்வையும் பறிபோகி விடுகிறது. குருடனை வீட்டில் வைக்க முடியாது என்று நினைத்த ரகுவின் சித்தி அவனை பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்து விட, இசையின் பக்கம் சென்ற அவன் பின்னாளில் மிகப்பெரிய வயலின் கலைஞனாக வளர்ந்து நிற்கிறான். 

இதனிடையே சம்பவம் ஒன்றில் ரகுவை தவறாக புரிந்து கொள்ளும் நான்சி, அவனுக்கு பொதுமக்களிடம் அடி உதை வாங்கிகொடுக்கிறாள். ஆனால் அவன் பார்வையில்லாதவன் என தெரிந்த உடன் உண்மையை புரிந்து கொண்டு அவனிடம் பழக முற்படுகிறாள்.. பழக்கம் காதலாக மாறுகிறது.. காதலில் இருவரும் திளைக்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் காதல் விவகாரம் நான்சி வீட்டிற்கு தெரிய வர, குடும்பம் கிறிஸ்துவ மதத்தை காரணம் காட்டி அவர்களை பிரிக்க முயல்கிறது. இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா? என்பதே ராஜ பார்வை படத்தின் கதை.

1981ஆம் ஆண்டு இயக்குநர் சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான ராஜபார்வை திரைப்படம் கமல்ஹாசனின் 100 ஆவது திரைப்படமாக வெளியானது. இந்த திரைப்படத்தை தயாரித்ததோடு படத்தின் கதையையும் கமலே எழுதியிருந்தார். கண் தெரியாத பார்வையற்றவனாக ரகு இருந்தாலும், அந்த கதாபாத்திரம் சுயமரியாதை நிரம்பிய கதாபாத்திரமாக அமைக்கப்பட்டு இருக்கும். 

கிறிஸ்துவ பெண்ணாக வந்த நான்சி கதாபாத்திரத்தில் மாதவி நடித்திருந்தார். கமலுக்கும் மாதவிக்கும் இடையேயான ரொமன்ஸ் காட்சிகள் அவ்வளவு யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் காமெடிக்கு கமலின் நண்பராக வரும் ஒய் ஜி மகேந்திரனும்,   காட்சிகள் கேரண்டி. ‘அந்தி மழை பொழிகிறது’ ‘ அழகே அழகு’ உள்ளிட்ட இளையராஜாவின் பாடல்கள் படத்தின் பலே ஹிட் ரகம். இவ்வளவு இருந்தும் கமலுக்கு இப்படம் பெரும் தோல்வியை கொடுத்தது. இந்த படத்தின் தோல்வியால் நஷ்டமடைந்த கமல்ஹாசன், கிட்டத்தட்ட 5 வருடங்கள் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை மூடி வைத்திருந்தார்.