36 Years of Sathya: எம்ஜிஆருக்காக டெடிகேட் செய்யப்பட்ட படம்! கமலை பிடிக்காதவர்களையும் பிடிக்க வைத்த சத்யா
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த படங்களில் அவரது தீவிர ரசிகர்களின் ஹிட் லிஸ்டில் இருக்கும் படங்களில் ஒன்றாக இருந்து வரும் படம் சத்யா. கமலை பலருக்கு பிடிப்பதற்கு காரணமாக இருந்த படமாகவே உள்ளது.

இந்தி ரீமேக் படமாக இருந்தாலும் ஒரிஜினலை விட கொண்டாடப்பட்டது இந்த படம். அதற்கு முக்கிய காரணமாக படத்தின் மேக்கிங் அமைந்திருந்தது. அத்துடன் கமலின் லுக், ஸ்டைல், நடிப்பு என அனைத்தும் மிகவும் ரசிக்கதக்க வகையில் இருந்ததும் தான்.
சன்னி தியோல் நடிப்பில் இந்தியில் வெளியான அர்ஜுன் என்ற படத்தை சீனுக்கு சீனுக்கு ரீமேக் செய்யாமல், படத்தின் மையக்கதையை மட்டும் வைத்து தமிழில் புதுமையாகவும், விறுவிறுப்பான காட்சிகளுடன் உருவாக்கினார் சத்யா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பின்னர் முன்னணி இயக்குநராக உருவெடுத்த சுரேஷ் கிருஷ்ணா.
இந்த படத்துக்கு கமல்ஹாசன், சுரேஷ் கிருஷ்ணா, மறைந்த இயக்குநர் கே. பாலசந்தர் உதவி இயக்குநரான அனந்து ஆகியோர் இணைந்து உருவாக்கினர். தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் கமல்ஹாசனே படத்தை தயாரித்தார். நாயகன் படத்தில் தாதாவாக தோன்றி தனக்கென்று ஒரு இமேஜ் உருவாக்கிய கமல், சத்யா படத்தில் அப்போதையை இளைஞர்களை பிரதிபலிக்கும் கேரக்டரில் தோன்றி அழட்டிக்கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
படத்தில் வேலையில்லா இளைஞனாக வரும் கமல் நட்புக்கு மரியாதை, சோகம், வலி, காதல், ஏமாற்றம் என அனைத்தையும் சந்திக்கும் கதாபாத்திரத்தில், அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்துபவராக தோன்றி நடிப்பில் ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார். ட்ரிம் செய்யப்பட்ட ஷார்ட் ஹேர், ட்ரிம் செய்யப்பட்ட மீசை மற்றும் தாடியுடன், கழுத்தில் கயிறு, கையில் காப்பு என கமலின் லுக்கே பார்ப்பவர்களை இம்ரஸ் செய்யும் விதமாக அமைந்திருக்கும். கமலின் இந்த தோற்றம் படம் ரிலீஸான சமயத்தில் இளைஞர்கள் மத்தியில் பேஷனாகவே மாறியது.
வேலை தேடிக் கொண்டிருக்கும் பட்டதாரி இளைஞன் தனது குடும்ப சிக்கல்கள் ஒரு புறம், சமூக சீர்கேடுகள் மறுபுறம் என தாங்கிக்கொள்ள முடியாமல் பொங்கி எழுவதும், அரசியல் சுயலாபத்தில் சிக்கி மீண்டு வருவதும்தான் படத்தின் ஒன்லைன்.
கமல் ஜோடியாக அமலா நடித்திருப்பார். நாசர், ஜி.எம். சுந்தர், ஆனந்த், வடிவுக்கரசி, ஜனகராஜ் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். ராஜேஷ், கிட்டி வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார்கள். அரசியல்வாதியாக வரும் கிட்டி அமைதியாக வில்லனிசம் செய்து, பிரம்மாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
பக்கா கமர்ஷியல் படமாக இருந்தாலும் அதை உருவாக்கிய விதத்தில் தனித்துவம் இருந்த இந்த படம், தமிழ் சினிமாவுக்கு புதுமையான ட்ரெண்டை உருவாக்கியது. படத்தில் மலையாள பெண்ணாக வரும் அமலாவுடனான காதல் காட்சிகளில் அழகாக ஜொலித்திருக்கும் கமல், தன்னை சுற்றி நடக்கும் அவலங்களை கண்டு பொங்குவதிலும், நண்பனை கொன்றவர்களை பழிவாங்குவதில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியிருப்பார்.
படத்தில் ஆக்ஷன் காட்சிகள் எதார்த்தம் மீறாமலும், புதுவித ஒலியமைப்புடனும் இடம்பிடித்திருக்கும். விக்ரம் தர்மா சண்டைகாட்சிகளை அமைத்திருப்பார். குறிப்பாக காவல் நிலையம் கேட் அருகில் ரவுடி கூட்டத்தை பார்த்து முதலில் அவர்களை தாக்க அங்கிருக்கும் செங்கலை எடுக்கும் கமல், அந்த நேரத்தில் சைக்கிள் கேரியரில் உருட்டுக்கட்டைகளுடன் செல்பவரிடம் இரண்டு கட்டைகளை உருவி, ரவுடிகளை பந்தாடுவார். இந்த காட்சி மிகவும் எதாராத்தமாக வருவதற்காக ஷூட்டிங் என்பது தெரியாமலேயே எடுக்கப்பட்டது.
கேமராக்களை மாடியில் மறைத்து வைத்தும், காரில் வைத்தும் எடுத்துள்ளனர். மிகவும் மெனக்கெட்டு எடுக்கப்பட்ட இந்த சீன் ஒரு தெருச்சண்டை எபெக்ட்டை கொண்டதாக இருப்பதுடன், சண்டைக்காட்சிகளில் முன் மாதிரியாக இருந்துள்ளது.
அதேபோல் பொதுமக்கள் முன்னிலையில் நண்பன் கொல்லப்பட்டதை அறிந்த பின்னர், சாட்சி சொல்ல வருமாறு அந்த பகுதியினரிடம் கமல் மன்றாடும் காட்சியும் கவனிக்கதகுந்த வகையில் இருக்கும்.
1987 டிசம்பரில் எம்ஜிஆர் இறந்து போனார். அதன் பின்னர் ஜனவரி மாதத்தில் வெளிவந்த இந்த படத்தை எம்ஜிஆருக்கு சமர்ப்பணம் என்றே டைட்டில் கார்டில் எம்ஜிஆர் புகைப்படத்தை காட்டி தொடங்கயிருப்பார் கமல்ஹாசன்.
படத்துக்கு இசை இளையராஜா. அனைத்து பாடல்களையும் வாலி எழுத, அவரது பாடல் வரிகளில் மறைந்த பாடகர் எஸ்பிபி - பாடகி லதா மங்கேஷ்கர் பாடிய வளையோசை பாடல் யுனிவர்செல் ஹிட்டாக இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதை காட்சிப்படுத்திய விதமும் கண்களில் காதல் வயப்பட வைக்கும் விதமாக இருக்கும். காட்சியின் உணர்வுகளை வசனத்தை காட்டிலும் இசையால் நிரப்பி ராஜாங்கம் செய்திருப்பார் இளையராஜா.
ரஜினியின் சூப்பர் ஹிட் படமாக இருந்து வரும் பாட்ஷாவை இயக்கியது சுரேஷ் கிருஷ்ணா என்பதால் அதில் இடம்பிடித்திருக்கும் செட், சில காட்சிகள் என சத்யா படத்தின் ரெபரென்ஸ் மறைமுகமாவே இருக்கும். கமலின் சினிமா க்களில் அவரது தீவிர ரசிகர்களை மட்டுமில்லாமல், அவரது ரசிகர்களாக இல்லாதவர்களையும் ரசிக்க வைத்த சத்யா வெளியாகி 36 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்