45 Years of Kalyanaraman: ரஜினி - கமல் பிரிவுக்கு பின் வெளிவந்து ஹிட்! தமிழில் Part 2 படங்களுக்கு விதை போட்ட கல்யாணராமன்
ரஜினி - கமல் பிரிவுக்கு பின் வெளிவந்து ஹிட் அடித்த படமான கல்யாணராமன், தமிழில் Part 2 படங்களுக்கு விதை போட்ட படமாகவும் உள்ளது. அத்துடன் கமல் பேயாக நடித்த முதல் படமும் இதுதான்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த முதல் பேய் படம் என்றே கல்யாணராமன் படத்தை கூறலாம். பேய் படம் என்றாலும் திகில் காட்சிகளைவிட காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் அளித்து படத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். தமிழ் சினிமாவில் பேயாக வரும் கதாபாத்திரம், ஹீரோவுக்கு உதவுவது போன்ற கதையமைப்பில் உருவான படமாகவும் இது அமைந்திருந்தது.
பழிக்கு பழி கதை
வழக்கமான பழிக்கு பழி கதையாக இருந்தாலும் ஆவியாக ஹீரோ தோன்றி இன்னொரு ஹீரோவுக்கு உதவுவது ரசிகர்களுக்கு புதுமையான விஷயமாக இருந்தது. பணக்கார குடும்பத்தை சேர்ந்த விஎஸ் ராகவனுக்கு இரண்டு பிள்ளைகள். அதில் ஒன்று தன்னிடமும், இன்னொரு பிள்ளை அவரது மனைவியிடமும் வளர்கிறது.
விஎஸ் ராகவனின் கணக்குபிள்ளையாக வரும் மேஜர் சுந்தர்ராஜன் அவரது சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்கிறார். அத்துடன் விஎஸ் ராகவனின் மகனையும் கொன்றுவிடுகிறார்.
இறந்த பின்னர் ஆவியாக மாறி தாயிடம் வளரும் பிள்ளையை சந்தித்து நடந்த விஷயத்தை கூற, தனது தந்தை, சகோதரனை கொன்ற மேஜர் சுந்தர்ராஜனை பழிவாங்குவது தான் படத்தின் கதை. இதில் விஎஸ் ராகவன் இரு பிள்ளைகளாக கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.
இறந்து போன கமலுடன் நெருங்கி பழகும் தோழியாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். தேங்காய் சீனிவாசன், விகே ராமசாமி, மனோரமா, செந்தாமரை உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
ரசிகர்களை கவர்ந்த கமலின் எத்துப்பல்
விஎஸ் ராகவனிடம் வளரும் கமல்ஹாசன் வெகுளியாகவும், விளையாட்டு குணம் உள்ளவராகவும் இருப்பார். இந்த கேரக்டருக்கு கமல்ஹாசன் எத்துப்பல், கர்லி ஹேர் ஸ்டைலுடன் தோன்றியிருப்பார். கமலின் கெட்டப் ரசிக்கும் விதமாக இருந்தது. அத்துடன் படத்தில் கமல் - ஸ்ரீதேவி இடையிலான மோதல், காதல் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்ததோடு, நல்ல கெமிஸ்ட்ரி மிக்க ஜோடியாக பேச வைத்தது.
ரஜினி - கமல் பிரிவுக்கு பின் வந்த படம்
கல்யாணராமன் படத்துக்கு முன்னர் ரஜினி - கமல் இணைந்து பல படங்களில் ஒன்றாக நடித்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்தன.
இந்த சூழ்நிலையில் தனி தனி பாதையில் சென்று பயணிக்கலாம் என இருவரும் பேசி முடிவு செய்தனர். அப்போது இருவரின் கால்ஷீட்டையும் பெற்றிருந்த திரைக்கதை ஆசிரியர் பஞ்சு அருணாச்சலம் இந்த படத்தை உருவாக்க நினைத்தார்.
ஆனால் ரஜினி, கமல் இணைந்து நடிக்க மறுப்பு தெரிவிக்க, அதே கால்ஷீட்டில் தனியாக படம் நடிக்க சம்மதித்தனர். இதையடுத்து ரஜினிக்காக ஆறிலிருந்து அறுபதுவரை, கமலுக்காக கல்யாணராமன் படத்தை தயாரித்தார் பஞ்சு அருணாச்சலம். இந்த இரு படங்களுக்கும் அவரே கதை, திரைக்கதை எழுதினார். ஆறிலிருந்து அறுபதுவரை படத்தை எஸ்.பி. முத்துராமனும், கல்யாணராமன் படத்தை எஸ்.பி. முத்துராமன் உதவியாளரான ஜ.என். ரங்கராஜனும் இயக்கினார்கள். இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாகின.
கல்யாண ராமன் ஹிட்டுக்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து ஜப்பானில் கல்யாணராமன் என இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் வெளியான முதல் பார்ட் 2 படம் இதுதான்.
பாடல்கள் ஹிட்
கல்யாணராமன் படத்துக்கு பஞ்சு அருணாச்சலம் பாடல்கள் எழுத இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. காதல் வந்துடுச்சு பாடல் சிறந்த கிளாசிக் பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
கல்யாணராமன் படமே 1948இல் வெளியான இது நிஜமா என்ற படத்தை தழுவி உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரசிகர்களை கவர்ந்ததோடு, விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்ற இந்த படம் பின்னர் இந்தி. கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. கமலுக்கு சி செண்டரிலும் ரசிகர்களை ஏற்படுத்தி தந்த கமர்ஷியல் சக்ஸஸ் படமாக இருக்கும் கல்யாண ராமன் வெளியாகி இன்றுடன் 45 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்