Indian 2 Review: இந்தியன் தாத்தா கதற விட்டாரா.. இல்ல... ஷங்கர் கம் பேக் ஆனாரா? - இந்தியன் 2 எப்படி இருக்கு?
Indian 2 Review: ரசிகர்களின் பெறும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் 2 படம் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

Indian 2 Review: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர்கள் கமல், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், விவேக், பிரியா பவானி ஷங்கர், மனோபாலா உள்ளிட்ட பலரது நடிப்பில், இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் முதல் பாகத்தின் ஏகோபித்த வெற்றி, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி இருந்த நிலையில், இன்று இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
கதையின் கரு
இந்தியன் முதல் பாகத்தில், லஞ்சம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும், இந்தியன் தாத்தா கொல்வதை மைய கருவாக வைத்து கதை சொல்லி இருந்தார் இயக்குநர் ஷங்கர். தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாம் பாகத்திலும், அதுதான் மையக்கரு. ஒரே வித்தியாசம், தற்போதைய தலைமுறையில் லஞ்சத்தால் ஏற்படும் பிரச்சினைகளை கருவாக எடுத்து காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார் அவ்வளவுதான்.
அந்த பிரச்சினை சம்பந்தமான காட்சிகளை சித்தார்த்தையும், அவர் நடத்தி வரும் யூ- டியூப் சேனல் மூலமாகவும் நகர்த்தி இருக்கும் ஷங்கர், அதன் மூலமாக, பல்லாண்டுகளுக்கு முன்னதாக தாய்பேய்க்கு சென்ற இந்தியன் தாத்தாவிற்கு, சோசியல் மீடியா வழியாக அழைப்பு விடுகிறார்.