Tamil Movies: விஜயகாந்தின் சூப்பர் ஹிட், சரத்குமார் கேரியரில் முக்கிய படம்..இன்றைய நாளில் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்
Tamil Movies Released On Sep 18: கமல்ஹாசன் நடிப்பில் தீவிரவாதம் பற்றி அனல் பறக்கும் வசனங்களுடன் பேசிய உன்னைப்போல் ஒருவன், விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படமான சாதிக்கொரு நீதி, சரத்குமார் சினிமா கேரியரில் முக்கிய படங்களாக அமைந்த சாமுண்டி,மூன்றாவது கண் உள்பட இன்றைய நாளில் வெளியான படங்கள் பற்றி பார்க்கலாம்
தமிழ் சினிமாவில் செப்டம்பர் 18ஆம் தேதியான இன்று பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார் போன்ற ஹீரோக்களின் ஹிட் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இன்றைய நாளில் வெளியான முக்கியமான தமிழ் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
பூம்புகார்
ப. நீலகண்டன் இயக்கத்தில் கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதி 1964இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பூம்புகார். தமிழில் உள்ள பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம் ஒன்றான சிலப்பதிகாரத்தை மையப்படுத்திய கதையில் உருவாகியிருந்த இந்த படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரன், சி.ஆர். விஜயகுமாரி, ராஜஸ்ரீ, கே.பி. சுந்தாராம்பாள் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தமிழில் வெளியான சிறந்த கிளாசிக் பிளாக் அண்ட் ஒயிட் படமாக இருந்து வரும் பூம்புகார் வெளியாகி இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிறது
சாதிக்கொரு நீதி
விஜயகாந்த், ஸ்வப்னா, நாகேஷ், எஸ்.எஸ். சந்திரன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்ஷன் ட்ராமா பாணியில் வெளியான படம் சாதிக்கொரு நீதி. எஸ். சங்கரன் இயக்கியிருக்கும் இந்த படம் கோமல் சுவாமிநாதனின் செக்கு மாடுகள் என்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். ரசிகர்கள் மத்தியல் வரவேற்பை பெற்ற இந்த படம் சிறப்பான வசனங்களுக்காக பேசப்பட்டது. விஜயகாந்தின் ஹிட் படமான சாதிக்கொரு நீதி வெளியாகி இன்றுடன் 43 ஆண்டுகள் ஆகிறது.
சாமுண்டி
வில்லனாக நடித்து வந்த சரத்குமார், ஹீரோவாக புரொமோட் செய்த படங்களில் ஒன்றாக சாமுண்டி இருந்தது. 1992இல் வெளியான இந்த படத்தை ஆர்.மனோஜ் குமார் இயக்கியுள்ளார். சரத்குமார், கனகா, மீரா, சங்கீதா, கவுண்டமணி, மன்சூர் அலிகான் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். தேவா இசையமைப்பில் மண்ணை தொட்டு, முத்து நகை, கதவ சாத்து போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. ரசிகர்களை கவர்ந்து ஹிட்டான சாமுண்டி வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகிறது.
மூன்றாவது கண்
மறைந்த இயக்குநர், நடிகர் மணிவண்ணன் இயக்கத்தில் த்ரில்லர் படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது மூன்றாவது கண். ஹாலிவுட் இயக்குநர் ஆல்ப்ரட் ஹிட்ச்காக்கின் ரியட் விண்டோ படத்தின் கதையால் ஈர்க்கப்பட்டு உருவான மூன்றாவது கண் படத்தில் சரத்குமார், நிழல்கள் ரவி, ராஜா, மோனிஷா, மன்சூர்அலிகான் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கொலையை பின்னணியாக வைத்து விறுவிறுப்பான் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்தது. சரத்குமார் சினிமா கேரியரில் முக்கிய படமாக அமைந்த மூன்றாவது கண் வெளியாகி இன்றுடன் 31 ஆண்டுகள் ஆகிறது.
உன்னைப்போல் ஒருவன்
பாலிவுட்டில் நஸ்ருதீன் ஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஏ வெட்ணஸ்டே படத்தின் தமிழ் ரீமேக் தான் உன்னைப்போல் ஒருவன். கமல்ஹாசன், மோகன்லால் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஹீரோயின் கிடையாது. அனுஜா ஐயர், பூனம் கெளர் கதையின் நாயகிகளாக நடித்திருப்பார்கள்.
இந்த படம் ஒரே நேரத்தில் தமிழுடன், தெலுங்கிலும் உருவானது. தெலுங்கு பதிப்பில் கமல்ஹாசனுடன் இணைந்து வெங்கடேஷ் நடித்திருப்பார். சாக்ரி டோலட்டி இயக்கியிருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படம் மூலம் நடிகை ஸ்ருதி ஹாசன் இசையமைப்பாளராக அறிமுகமானார். தீவிரவாதத்தை பற்றி சிந்திக்க வைக்கும், அனல் பறக்கும் வசனங்களுடன் பேசிய இந்த படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்