சத்தமில்லாமல் ஓடிடிக்கு பார்சலான தக் லைஃப்.. எங்கு, எப்போது பார்க்கலாம்! இதுவரையிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல்
கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில் சத்தமில்லாமல் ஓடிடியில் வந்துள்ளது. மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி ரசிகர்களை கவராமல் போன இந்தப் படம், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. படம் ஓடிடியில் ஐந்து மொழிகளில் ரிலீசாகியுள்ளது.

கடந்த 1987இல் வெளியான நாயகன் என்ற கல்ட் கிளாசிக் ஹிட் படத்துக்கு பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தக் லைஃப் திரைப்படம் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. ரசிகர்களை கவராமல் போன இந்த படம், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் தோல்வியடைந்துள்ளது. இதனால் படம் ரிலீசான ஒரு மாதத்துக்குள்ளாகவே ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்டுள்ளது. அதுவும், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், புதன்கிழமை (ஜூலை 2) நள்ளிரவுக்குப் பிறகு ஸ்ட்ரீமிங் தொடங்கியுள்ளது.
தக் லைஃப் ஓடிடி ரிலீஸ்
கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கும் தக் லைஃப் திரைப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. படம் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ஸ்ட்ரீம் ஆகிறது. நெட்ஃபிளிக்ஸ் செளத் தனது எக்ஸ் பக்கத்தில், "இது ரங்கராய சக்திவேலுக்கும், எமனுக்கும் இடையேயான போட்டி. தக் லைஃப் திரைப்படத்தை இப்போது நெட்ஃபிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் பாருங்கள்,” என்று படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது..
முன்னதாக, இந்த படம் ஜூலை 4ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று தகவல்கள் உலா வந்தன. ஆனால் படத்தை ஒரு நாள் முன்னதாகவே ஓடிடியில் ரிலீஸ் செய்திருப்பது யாரும் எதிர்பார்த்திராத டுவிஸ்டாக அமைந்துள்ளது.