KamalHaasan: ‘சென்னை சொந்தம்.. இந்தியன் 2 அப்படி இருக்கும்.. தோனியிட்ட பிடிச்ச விஷயம் இது..’: கமல்ஹாசன் சொன்ன சீக்ரெட்
KamalHaasan: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசனும், இயக்குநர் ஷங்கரும் கலந்துகொண்டனர்.

Kamal Hassan: கமல்ஹாசன் சென்னை தங்களுக்கு சொந்தமானது என்றும்; தோனியிடம் அவரது சமமாகப் பார்க்கும் குணம் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியன் படம் எப்படிப்பட்டது?:
லஞ்சம் கொடுக்காத ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் சந்திக்கும் பிரச்னைகளையும், சமூகத்தை மாற்ற முனையும் அக்கறையையும் கொண்டு 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், இந்தியன். மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த இப்படம், அப்போதே 30 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டித்தந்தது.
பின்னர் இயக்குநர் ஷங்கரும், கமல்ஹாசனும் மீண்டும் இணையவே இல்லை. வெவ்வேறு படங்களிலும் வெவ்வேறு இயக்குநர்களுடன் பணியாற்றினர். எந்திரனில் முதலில் கமல்ஹாசனை நடிக்கவைக்க மும்முரம் காட்டினார், ஷங்கர். அதற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டைத் தாண்டி, கமல்ஹாசனும் இயக்குநர் ஷங்கரும் மீண்டும் இணையவில்லை.
இந்நிலையில், அதன் தொடர்ச்சியான இந்தியன் 2 திரைப்படம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கமல்ஹாசனை வைத்து மீண்டும் உருவாகிறது என அறிவிக்கப்பட்டது. அதன்பின், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, சென்னை, ராஜமுந்திரி, போபால், குவாலியர் போன்ற பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. இதன் படப்பிடிப்புக்கு மத்தியில், பிப்ரவரி 2020ல் படக்குழுவில் ராட்சத கிரேன் விழுந்ததில் சிலர் உயிரிழந்தனர்.
அதன்பின், சூட்டிங் தொடங்கினாலும் கோவிட் பிரச்னை தலைவிரித்தாடியது. இதனால் ஒட்டுமொத்தமாக, இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதன்பின் சமீபத்தில் 2024 மார்ச்சில் அதன்பிடிப்பு முடிவடைந்தது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தோன்றிய கமல்ஹாசன்:
இந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோர் இணைந்து,ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நாக்அவுட் மேட்ச்சாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியினை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமத்திற்கு இடையில் தோன்றி இந்தியன் 2 படத்துக்கான புரோமோஷனில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய கமல்ஹாசன், ‘’சரித்திரப்படி பார்த்தால் கிரிக்கெட்டே முதலில் சென்னையில் தான் விளையாடியிருப்பாங்கன்னு தோணுது. மெட்ராஸ்னு கூப்பிட்டுக் கொண்டிருந்த ஊரை 'சென்னை'ன்னு கூப்பிடச் சொல்லி பேரு வைத்த தலைமுறை எங்களுடையது. சென்னை எங்களுடையது என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள்.
வழக்கத்துக்கு வருமா இந்த வார்த்தை, இன்னும் மெட்ராஸ்னே கூப்பிட்டுட்டு இருக்காங்கன்னு சொல்லும்போது, இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ்னு அணி வந்திருக்கு. கண்டிப்பாக, எங்களுடைய சப்போர்ட் சென்னை அணிக்குத் தான் இருக்கும். விராட் கோலி செய்த சாதனைகளுக்கு அவருக்கும் பரிசும் கோப்பையும் வேணும். அது அடுத்த கோப்பையாக இருக்கட்டும். இந்தக் கோப்பை எங்கள் இது’’ என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், ‘’ இந்தியன் 2 படத்தினை ஒப்புக்கொள்ள காரணம், ஷங்கர் அதன் மூன்றாம் பாகத்துக்கான கதையையும் சேர்த்து கூறினார் என்பதால் தான். இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் ரிலீஸாகிறது. அடுத்த ஆறு மாதங்கள் கழித்து இந்தியன் 3 திரைப்படமும் வெளியாகும்’’ என்றார்.
தோனியின் திறனைப் பாராட்டிய கமல்ஹாசன்:
அதேபோல் மகேந்திரசிங் தோனி குறித்து பணம் திறந்துபேசிய கமல்ஹாசன், ’’நட்சத்திரம் என்பதை மறந்து விடுங்கள். அவர் வந்து பெரிய பணக்கார வீட்டு கல்லூரி பையன் கிடையாது. நான் அந்த காலத்தில் இருந்ததை சொல்றேன். நவாப் பட்டோடி காலத்தில் நிறைய கிரிக்கெட் வீரர்கள் இன்ஜினியராக இருந்தனர். பணக்கார வீட்டுப்பிள்ளைகளாக இருந்தனர். ஆனால், எம்.எஸ். தோனி, எங்கோ இருக்கும் ஒரு சின்ன நகரில் பிறந்தவர். நான் அதைப் பாராட்டுகிறேன். விளையாட்டின்போது அழுத்தம் ஆட்கொண்டாலும், எந்த ஒரு சூழ்நிலையையும் சரிசமமாகப் பாவிக்கும் தோனியின் திறன் பாராட்டுக்குரியது. அது சாதாரணமானது அல்ல. எனக்கு ஒரு இயக்குநர் ஆக்ஷன் என்று சொல்லிவிட்டு, அந்த நொடியில் நான் அனைத்தையும் சரிசெய்து நடிக்கவேண்டும்’’ என்றார்.
மேலும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ஆம் தேதி நடக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கமல்ஹாசன் தவிர, இந்தியன் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், நெடுமுடி வேணு, காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

டாபிக்ஸ்