தயாரிப்பாளர் மனைவி மரணம்.. கங்குவா ரிலீஸில் சிக்கல்.. அம்மா ஆசையில் சமந்தா; அல்லு போட்ட ஸ்கெட்ச் - இன்றைய டாப் 10 சினிமா
கங்குவா படத்திற்கு எழுந்த சிக்கல்.. பிரபல தயாரிப்பாளர் மனைவி உயிரிழப்பு.. தேசிய விருது வாங்க இருந்த மோட்டிவேஷன் என இன்று கோலிவுட் வட்டாரத்தை கலக்கிய கோலிவுட் செய்திகளை பார்க்கலாம்.
1.இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், நடிகர்கள் ஜோ சல்டானா மற்றும் சாம் வொர்திங்டன் முன்னிலையில் அவதார் 3 பாகத்தின் தலைப்பு இன்று வெளியானது. அதன்படி, இந்த படத்திற்கு "அவதார்: பயர் அண்ட் ஆஷ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அவதார் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு 3 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகமான 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாரானது. இந்தப்படம் ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு இந்தி, கன்னடம், மலையாளம் உட்பட உலகம் முழுவதிலும் 160 மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
100 கோடி வசூலை எட்டிய லக்கி பாஸ்கர்
2. தனுஷ் வாத்தி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி பொருளாதார குற்றப் பின்னணியை மையமாக வைத்து இயக்கிய படம் லக்கி பாஸ்கர். இந்தப் படத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி, சச்சின் கடேக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப்படம் தற்போது 100 கோடி வசூலை எட்டி இருக்கிறது.
3. அண்மையில் சமந்தா, வருண்தவான் இணைந்து நடித்த சிட்டாடல் வெப் சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. அந்த சீரிஸில் சீக்ரெட் ஏஜண்டாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் சமந்தா நடித்திருக்கிறார். இந்த நிலையில், அண்மையில் டைம்ஸ் நவ் இணையதளத்திற்கு பேட்டிக்கொடுத்த சமந்தா, குழந்தைக்கு தாயாக நடித்தது குறித்தும், அதை தன்னுடைய நிஜ வாழ்க்கையில் ஒப்பிட்டும் பேசி இருக்கிறார்.
அம்மாவாக மாற வேண்டும்
இது குறித்து அவர் பேசும் போது, “ இப்போது ஒன்றும் அவ்வளவு காலதாமதமாகிவிட வில்லை. எனக்கும் அம்மாவாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. எனக்கு தாயாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நான் எப்போதுமே ஒரு தாயாக மாற வேண்டும் எண்ணிக்கொண்டே இருந்திருக்கிறேன். அது மிகவும் அழகான அனுபவம். அதை நான் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் மக்கள் பெரும்பாலும் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். வாழ்க்கையில் நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் தாயாக மாற முடியும் என்று நினைக்கிறேன்” என்று பேசினார்.
4. கட்டா குஸ்தி திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குநரான செல்லா அய்யாவு தனுஷூடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகின. அவர் சொன்ன கதை தனுஷூக்கு பிடித்திருந்தாலும், கதையில் பல்வேறு மாற்றங்களை செய்ய சொல்லி இருக்கிறார் தனுஷ். அதனை அவர் செய்து வந்த போதும் தனுஷூக்கு அதில் உடன்பாடு ஏற்படவில்லையாம். இறுதியில் தனுஷ் மற்றும் செல்லா அய்யாவு இணைவதாக இருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
5. உலக நாயகன் பட்டம் வேண்டாம் என்று கமல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
சினிமா கலையின் மாணவன் நான்
சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது, அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது. கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது.
அடைமொழியைத் துறக்கிறேன்
அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பதுஎன்பதே அது.
எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோகுறிப்பிட்டால் போதுமானது என்று KH கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
6. தேசிய விருது வென்றது குறித்து அல்லு அர்ஜூன் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “தேசிய விருது பெற்ற நடிகர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, அதில் ஒரு போதும் ஒரு தெலுங்கு நடிகரின் பெயர் இருந்ததில்லை. இந்த விஷயம் எனது மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதனை ரவுண்டப் செய்தேன். என் மனதில் ஆழமாக பதிந்த விஷயம் புஷ்பா படத்தில் இடம் பெற்ற புஷ்பராஜ் கதாபாத்திரம் மூலமாக நிறைவேறியது. எனக்கு தேசிய விருதும் கிடைத்தது. " என்று பேசினார்
7. மும்பை பாந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் ஷாருக்கான் 50 லட்சம் தர வேண்டும். இல்லையென்றால் அவரை நான் கொன்று விடுவேன் என்று அடையாளம் தெரியாத நபர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தார். விசாரணையில் ராய்பூர் பகுதியிலிருக்கும் ஃபைசல் என்பவர்தான் இந்த கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார் என்பதை தெரியவந்தது.
8. அமரன் திரைப்படத்தில் முகுந்தின் அடையாளம் காண்பிக்கப்படவில்லை, விக்ரம் சிங் சொன்ன வார்த்தை வேறு மாதிரியாக இருந்தது என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் அந்தப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “ `போல் பஜ்ரங் பாலி கி ஜே' என்பது ராஜ்புட் ரெஜிமென்ட்டின் 44 RR பெட்டாலியனின் போர்க்குரல். அதை நான் வேறு மாதிரி மாற்றி எடுக்க முடியாது. அதை மாற்றி எடுத்தால் பிழையாகி விடும்.
இது, என்னுடைய அரசியல் பார்வை, சொந்த கருத்துகளை கொண்டு எடுத்த திரைப்படம் இல்லை. எனக்கும் நிறையக் கருத்துகள் இருக்கும். அதை என்னுடைய கதாபாத்திரங்கள் மூலமாகத் திணிக்கக் கூடாது என்பதில் இயக்குநராக நான் தெளிவாக இருக்கிறேன்.” என்று பேசினார்.
9. ரோமியோ ஜூலியட், கத்திசண்டை , 96 போன்ற படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் அவர்களின் மனைவி திருமதி N.அமுதா அவர்கள் இன்று மாலை இறைவனடி சேர்ந்தார். அம்மையாரது உடல் No.54,வேலாயுதம் காலணி இரண்டாவது தெரு, சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அஞ்சலிக்காக நாளை காலை வைக்கப்படுகிறது.
10. ரூபாய் 20 கோடியை வரும் 13 ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் கங்குவா திரைப்படத்தை வெளியிடக் கூடாது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், கங்குவார் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்