தமிழ் சினிமா ரீவைண்ட்: கமலின் இந்தியன்.. விஜய்யின் லவ் டுடே.. மே 9 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தமிழ் சினிமா ரீவைண்ட்: கமலின் இந்தியன்.. விஜய்யின் லவ் டுடே.. மே 9 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

தமிழ் சினிமா ரீவைண்ட்: கமலின் இந்தியன்.. விஜய்யின் லவ் டுடே.. மே 9 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 09, 2025 05:30 AM IST

மே 9ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், நவரச நாயகன் கார்த்திக் ஆகிய ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது. இதுதவிர திகில் கலந்த காமெடி படம் ஒன்றும் ரிலீசாகியுள்ளது. ரசிகர்களின் கவனம் ஈரத்த படங்கள் இந்த படங்கள் பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

கமலின் இந்தியன்..  விஜய்யின் லவ் டுடே.. மே 9 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
கமலின் இந்தியன்.. விஜய்யின் லவ் டுடே.. மே 9 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

இந்தியன்

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மட்னோகர், கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்து ஆக்சன் த்ரில்லர் படமாக 1996இல் வெளியாகி மெகா ஹிட்டான படம் இந்தியன். கமல்ஹாசனுக்கு மெகா ஹிட்டுடன், 90ஸ் காலகட்டத்தில் கோடிகளில் வசூலை அள்ளிய படமாக இந்தியன் உள்ளது.

தந்தை,மகன் என இரு வேடங்களில் நடித்திருக்கும் கமல்ஹாசன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின் வீரர், சுதந்திரபோராட்ட தியாகி, இந்தியன் தாத்தாவாக ஒரு கெட்டப்பும், ஆர்டிஓ ஆபிசராக இன்னொரு கெட்டப்பிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இந்த படத்தின் கதையை முதலில் பெரியமனுஷன் என்ற பெயரில் ரஜினிகாந்திடம் சொல்லப்படடது. ஆனால் அவர் நடிக்க மறுக்க கமல்ஹாசனிடம் கதை சென்றது. 1977இல் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நான் பிறந்த மண் படத்தின் கதை போல் இருப்பதாக முதலில் தயக்கம் காட்டிய கமல்ஹாசன், பின்னர் நடித்தார். அந்த காலகட்டத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான இந்த படம் அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையும் பெற்றது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. ரஜினிகாந்துக்கு பாட்ஷா படம் போல், கமல்ஹாசனுக்கு இந்தியன் படம் மாஸ் ஹிட்டாக அமைந்தது.

லவ் டுடே

பாலசேகரன் இயக்கத்தில் விஜய், சுவலட்சுமி, மந்த்ரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உருவாகி 1997இல் ரிலீசான படம் லவ் டுடே. வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்து வந்த விஜய்க்கு பிரேக் கொடுத்த படமாக உள்ளது. விஜய்யின் க்யூட் லுக், எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

காதல் பாடமாக இருந்தாலும், அதில் நல்ல கருத்தை சொன்ன படமாக இருந்த லவ் டுடே விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்றது. 175 நாள்கள் திரையரங்கில் ஓடி வெள்ளி விழா கண்ட படமாகவும் உள்ளது. இந்த படத்தில் முதலில் அஜித்குமாரை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் பூவே உனக்காக படம் பெற்ற வெற்றியால் விஜய்க்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. சிவா இசையமைப்பில் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டான நிலையில், லவ் டுடே படம் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது அங்கும் வரவேற்பை பெற்றது

பிஸ்தா

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கார்த்திக், நக்மா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி ட்ராமா பாணியில் உருவாகி லவ் டுடே படத்துடன் போட்டியாக 1997இல் ரிலீசான படம் பிஸ்தா. சுவாரஸ்யம் மிக்க காட்சிகளுடன், விறுவிறுப்பான திரைக்கதை, திருப்பங்கள் நிறைந்திருந்த இந்த படம் கமர்ஷியல் ஹிட்டானது. கார்த்திக், நக்மா ஆகியோரின் நடிப்பு பாராட்டுகளை பெற்றன. கார்த்திக்குக்கு ஹிட் படமாக அமைந்த பிஸ்தா, கன்னடாவில் ரீமேக் செய்யப்பட்டது.

யாமிருக்க பயமே

டிகே இயக்கத்தில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணாகரன், யோகி பாபு நடிப்பில் திகில் கலந்த காமெடி படமாக உருவாகி 2014இல் ரிலீசான படம் யாமிருக்க பயமே. பேய் படமாக இருந்தாலும் காமெடி காட்சிகளுடன் அமைந்திருந்த படத்தின் திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

யோகி பாபுவின் "வாடா வாடா பன்னி மூஞ்சி வாயா" என்ற காமெடி மிகவும் பேமஸ் ஆனது. ஓவியா கவர்ச்சி விருந்து படைத்திருப்பார். தமிழில் பேய்ப்படங்கள் ட்ரெண்டாகி இருந்தபோது வெளியான இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்று நல்ல வசூலையும் குவித்தது.