Kamal Haasan Donated 1 crore Rupees: நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்கு ரூ.1 கோடி வழங்கிய கமல்ஹாசன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kamal Haasan Donated 1 Crore Rupees: நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்கு ரூ.1 கோடி வழங்கிய கமல்ஹாசன்

Kamal Haasan Donated 1 crore Rupees: நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்கு ரூ.1 கோடி வழங்கிய கமல்ஹாசன்

Marimuthu M HT Tamil
Updated Mar 09, 2024 05:12 PM IST

Kamal Haasan donated ₹1 crore: தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்காக ரூ.1 கோடி வைப்பு நிதியை கமல்ஹாசன் வழங்கினார்.

நடிகர் சங்கம் கட்ட ரூ.1 கோடி நிதியுதவி அளித்த கமல்ஹாசன்
நடிகர் சங்கம் கட்ட ரூ.1 கோடி நிதியுதவி அளித்த கமல்ஹாசன்

தென்னிந்திய நடிகர் சங்கம் 1952ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கி வருகிறது. இதன் தலைவராக நாசர் செயல்பட்டுவருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தி சிவகுமாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர்களாக பூச்சி முருகனும், கருணாஸும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்த சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக குஷ்பூ, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்னம், பசுபதி, சிபிராஜ், லதா சேதுபதி, விக்னேஷ், சோனியா, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம் குமார், ஸ்ரீநிவாச ரெட்டி, ஜெரால்டு மில்டன், ரத்தின சபாபதி, ரத்தினப்பா, எம்.ஏ.பிரகாஷ், வி.கே.வாசுதேவன், ஆர். ஹேமச்சந்திரன், எஸ்.எம். காளிமுத்து ஆகிய சினிமா மற்றும் நாடகக் கலைஞர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் தமிழ்த்திரைப்படத்துறையில் பணியாற்றும் பணியாற்றத்துடிக்கும் நடிகர், நடிகைகள், இந்த சங்கத்தின் உறுப்பினர்களாக இருப்பர்.

குறிப்பாக, திரைப்படத்துறையில் நடிகர்களுக்கும் திரைப்படத்துறை தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகள், ஃபெப்சி தொழிலாளர்களுக்கும் நடிகர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகள், விநியோகஸ்தர்கள் மற்றும் நடிகர்களுக்கு இடையே பட ரிலீஸின்போது ஏற்படும் பிரச்னைகள் போன்ற பலவற்ற தென்னிந்திய நடிகர் சங்கம் தலையிட்டு, நடிகர் மற்றும் நடிகைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திருக்கிறது.

இந்த சங்கத்தில் இதுவரை மூன்றாயிரத்துக்கும் அதிகமான திரைத்துறை நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.

இந்த சங்கத்தின் நிறுவனர் சங்கத்தலைவராக டி.வி.சுந்தரம் இருந்தார். துணைத்தலைவராக எம்.ஜி.ஆர், எஸ்.டி.சுப்புலட்சுமி, எஸ்.டி.சுந்தரம், கே.வேம்பு ஆகியோர் இருந்தனர். 1954ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர்களாக எம்.ஜி.ராமச்சந்திரன், எஸ்.எஸ். ராஜேந்திரன், கே.ஆர்.ராமசுவாமி, சிவாஜிகணேசன் ஆகியோர் பதவி வகித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக சிவாஜி கணேசன் இருந்தபோது, சங்கராதாஸ் சுவாமிகள் அரங்கம் கட்டப்பட்டது.

அதன்பின், 1987ஆம் ஆண்டு, தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை பதியப்பட்டு, நலிந்த நடிகர்- நடிகைகளின் குடும்பத்தினரின் கல்வி, மருத்துவம் மற்றும் பிற பண உதவியை செய்வதை இந்த சங்கம் உறுதிசெய்தது.

அதன்பின், நடிகர் சங்கத்தலைவராக 2000ஆம் ஆண்டு விஜயகாந்த் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தலைமையிலான நிர்வாகக்குழு, மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு நடிகர் மற்றும் நடிகைகளை அழைத்துச் சென்று,அதன்மூலம் வருவாய் ஈட்டி ரூ. 2கோடிக்கும் அதிகமான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தது.

விஜயகாந்த் 2006ஆம் ஆண்டு அரசியல் பிரவேசம் செய்தபின், சரத் குமார் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு, 2015ஆம் ஆண்டு வரை நீடித்தார். பின், பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதுகட்டடம் கட்ட சரத்குமார் முனைந்தபோது, அதில் இருக்கும் குளறுபடிகள் குறித்து நாசர் தலைமையிலான அணி கேள்வி எழுப்பியது.

அதன்பின், அடுத்து நடந்த தேர்தலில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தைக் கட்டுவோம் என்னும் உறுதிமொழியோடு, தேர்தலில் வென்றார், நாசர்.

அப்போது இருந்து தற்போது வரை, இன்னும் அந்த கட்டடப்பணி இன்னும் நிறைவடையவில்லை. 

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர், மூத்த நடிகர் கமல்ஹாசன் இன்று (09.03.24) அவரது சென்னை - ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரிடம் நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.