‘சாவுன்னு வார்த்தை வந்தாலே; இனி ஹீரோவாதான் நடிப்பேன்; விடாமுயற்சியால எவ்வளவு படங்கள் பாருங்க’- கொந்தளித்த மெட்ராஸ் கலை
‘சாவுன்னு வார்த்தை வந்தாலே என்னோட பேரை எழுதிவிடுகிறார்கள்; இனி ஹீரோவாதான் நடிப்பேன்; விடாமுயற்சியால எவ்வளவு படங்கள் பாருங்க’ - கொந்தளித்த மெட்ராஸ் கலை
இனி வரும் காலங்களில் ஹீரோவாக மட்டுமே தான் நடிப்பேன் என்று நடிகர் கலையரசன் பேசி இருக்கிறார்.
நந்தலாலா, அட்டக்கத்தி, முகமூடி, மதயானைக்கூட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் கலையரசன். மெட்ராஸ் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த அன்பு கதாபாத்திரம் இவரை மிகப்பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது; அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்த இவர், மெட்ராஸ்க்காரன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தை வாலி மோகன் தாஸ் இயக்கி இருக்கிறார்.
என்றுமே மறக்க மாட்டேன்
பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வரும் இந்தப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அதில் கலையரசன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
அவர் பேசும் போது, ‘நான் இதன் பிறகு நிறைய துணை கதாபாத்திரங்களில் நடிக்கப்போவது இல்லை.. இங்கு அது ஆரோக்கியமாக இல்லை. நான் துணை கதாபாத்திரங்களில் நடித்ததால்தான் இன்று சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருக்கிறேன்; அதனால் அதை நான் என்றுமே மறக்க மாட்டேன். மலையாள சினிமாவில் சில பெரிய நடிகர்கள், சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சாவு என்ற வார்த்தை
இன்னொரு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள். அவர்களை கதாநாயகனாக வைத்து படம் எடுப்பதற்கும் இங்கு கலைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், இங்கு அப்படி இல்லை; துணை கதாபாத்திரத்தில் நடித்தால், அதே போன்ற கதாபாத்திரங்களில் மீண்டும் மீண்டும் நடிக்க கூப்பிடுகிறார்கள்; சாவு என்ற வார்த்தை வந்தாலே, என் பெயர் எழுதி விடுகிறார்கள்.
அது பஞ்சாயத்தாகவும் இருக்கிறது; அதை நான் வரவேற்கிறேன்; நன்றாக நடித்தால் பாராட்டுகிறார்கள்; அப்படி இருக்கும் பொழுது விமர்சனம் செய்தால், அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஏதாவது ஒரு படம் எடுத்தால் அதில் யார் வேண்டுமென்றாலும் ஹீரோவாக நடிக்கலாம் என்று இருந்தால் கூட, அதில் என்னை இரண்டாம் கட்டத்தில் தான் வைக்கிறார்கள்.’ என்று பேசினார்.
விடாமுயற்சி திரைப்படம்
மேலும் பேசிய அவர் ‘பெரிய படங்கள் சின்ன படங்களை அப்படியே அமுக்கி விடுகின்றன. நானும் மகிழ்திருமேனி மற்றும் அஜித்தின் உடைய ரசிகன் தான். அந்த படம் கடைசி நேரத்தில் வரவில்லை என்று சொன்னதில், எனக்கும் வருத்தம் இருக்கிறது. ஆனால், விடாமுயற்சி திரைப்படம் தள்ளிப்போனதின் காரணமாக நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் பொங்கல் ரைசில் களமிறங்கி இருக்கின்றன.
திரையரங்கங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் வரும்பொழுது, அதற்கு அதிகமான திரையரங்குகளை கொடுக்காமல், அந்தப் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான திரையரங்கங்களை ஒதுக்கி, அதற்கடுத்தபடியாக மீடியம் பட்ஜெட் படங்களுக்கு திரையரங்கங்களை ஒதுக்கி, அதற்கடுத்தபடியாக, சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்களை ஒதுக்கலாம். அப்படி ஒதுக்கும் பட்சத்தில் நிறைய புது இயக்குநர்கள் ஜெயிப்பார்கள்; அதன் மூலமாக புதிய நடிகர் நடிகைகள் இந்த திரை உலகத்திற்குள் வருவார்கள்; தற்போது படங்களை அறிவிக்கும் பொழுதே பான் இந்தியா, பான் வேர்ல்டு
என்று படத்தை அறிவிக்கிறார்கள். நீங்கள் நேர்மையாக ஒரு படத்தை உருவாக்குங்கள் அந்த படம் முடிவு செய்யட்டும். அது என்ன மாதிரியான படம் என்று... மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படத்தை அவர்கள் மிக நேர்மையாக உருவாக்கினார்கள். அந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
டாபிக்ஸ்