Kakki Sattai: காக்கி சட்டை 39 ஆண்டுகள் கடந்தும் கொஞ்சமும் மவுசு குறையாத மிடுக்கு.. கமலின் பிளாக் பஸ்ட்டர் ஹிட் படம்!
Kamal Haasan : காக்கி சட்டை திரைப்படத்தில் கமலின் நடிப்பு, நடனம் , சத்யராஜின் ஸ்டைலிஷ் வில்லத்தனம், பரபரப்பூட்டும் சண்டை மற்றும் சேஸிங் காட்சிகள், இளையராஜாவின் ஐந்து ஹிட் பாடல்கள், தகடூ தகடூ வசனங்கள் எல்லாம் சேர்ந்து இன்றும் காக்கிச்சட்டை யின் மிடுக்கும் தோரணையும் குறையாமல் பார்த்து கொள்கிறது.

காக்கி சட்டை-1985
தமிழ் சினிமாவில் எப்போதும் பரிட்சார்த்தமாக முயற்சி செய்து வரும் கமல்ஹாசனின் முழு நீள மசாலா கமர்ஷியல் படமாக அமைந்து பிளாக் பஸ்ட்டர் ஹிட் அடித்த படம். அதிரிபுதிரியான கமர்ஷியல் படம். படத்தில் பாடல்கள், காமெடி, அதிரடி சண்டை காட்சிகள், சேசிங் சீன்கள் என்று மாறி மாறி வரும் வகையில் சரியான விகிதத்தில் கலந்து ஹிட் அடித்த வெள்ளிவிழா கண்ட இந்த படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார். இந்த ஆக்சன் மசாலா பேக்கேஜ் இன்று 39 ஆண்டுகளை நிறைவுசெய்தும் நெடியும் காரமும் குறையாத படம்.
சத்யா மூவிஸ் தயாரிப்பில் வந்த படம். கமல்ஹாசன், அம்பிகா ஆகியோர் கதையின் நாயகர்களாக முரளிதரன், உமா என்ற பாத்திரத்திலும் சத்யராஜ் வில்லனாக விக்கி என்ற பாத்திரத்திலும், மாதவி அனிதாவாகவும், இவர்களுடன் தேங்காய் சீனிவாசன், கோபாலகிருஷ்ணன், தவக்களை, கல்லாபெட்டி சிங்காரம், ராஜிவ், செந்தாமரை, ரிச்சர்ட், செல்ல துரை ஆகியோர் நடித்துள்ளனர்.
காவல் துறை அதிகாரி ஆவதே தனது வாழ்வின் லட்சியமாக கருதி கடுமையான முயற்சி செய்யும் இளைஞர்தான் கதையின் ஹீரோ முரளிதரன். அவரின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் உமா இவரின் காதலி. ஒவ்வொரு முயற்சிக்கும் உறுதுணையாக இருக்கும் சக தோழி. டெம்ப்ளேட் கதைப்படி போலிஸ் தேர்வுக்கு செல்லும் போதெல்லாம் நிராகரிக்கப்பட்ட ஹீரோ லோக்கல் ரவுடி ஆவதும், கடத்தல் கும்பல் ஒன்றில் வேலைக்கு சேருவதும் அங்கு வில்லன் சத்யராஜ் ஆல் கவரப்பட்டு போலிஸ் துறையில் இருப்பவர்களுக்கே கண்ணாமூச்சி விளையாட்டு காட்டும் வகையில் கமலுக்கு கில்லாடி பாத்திரம்.
கடத்தல் தொழில் செய்து வரும் ஆனந்த் மற்றும் விக்கி என இரண்டு குரூப். அவர்களுக்குள் உள்ள தொழில் போட்டி, ஒருவரையொருவர் அழிக்க மேற்கொள்ளும் முயற்சிகள், விக்கி குருப்பில் சேர்ந்த முரளியின் செயல்பாடுகள் என்று ஒவ்வொரு முடிச்சுகளாய் விரியும் போது நல்ல கமர்ஷியல் சினிமாவுக்கான இலக்கணம் புரியும். இந்த படத்தில் தான் சத்யராஜ் க்கு வில்லனாக பெரிய அளவில் புரமோஷன் என்றே கூறலாம். இந்த படத்துக்கு பிறகு ஹீரோவுக்கு மிகவும் இணையான வில்லன் வேடங்கள் தொடர்ந்து கிடைக்க உதவின.
அதிலும் இந்த படத்தில் வில்லனுக்கென்று புதிய உச்சரிப்பையே உருவாக்கி புகழ் பெற்றார் என்றே சொல்லலாம். அதிலும் படத்தில் முக்கிய வசனமான தகடு ஒன்று கானாமல் போகும் போது சத்யராஜ் அது குறித்து விசாரிக்கும் போது சத்யராஜ் உச்சரித்த "தகடூ...தகடூ... " என்று கேட்கும் போது வில்லத்தனம் புதிய உச்சம் பெறும். இன்னும் சினிமா ரசிகர்கள் மனதில் சத்யராஜ் பேசிய "தகடூ...தகடூ..." எதிரொலிக்கத்தான் செய்கிறது.
அதேபோல் ஒரு மசாலா படம் கமர்ஷியல் ஹிட் அடிக்க இரண்டு மூன்று பாடல்கள் ஆவது ஹிட் அடிக்க வேண்டும். இந்த படத்தின் இசை இளையராஜா. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வெரைட்டி யில்.
"வானிலே தேனிலா.. ஆடுதே பாடுதே".. என்று இளஞ்ஜோடிகள் கொண்டாட்டம்.
"நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு".. என்று இறங்கி அடிக்கும் குத்தாட்டம்.
"கண்மணியே பேசு" என்ற மெல்லிசையிலும் சரி.
"பட்டுக்கன்னம் தொட்டு கொள்ள" .. கொஞ்சலாகட்டும்.
"பூப்போட்ட தாவணி".... என்ற துள்ளலும் உற்சாகமாவுமாக ஐந்து பாடல்களும் ஹிட் அடித்தன. சண்டை காட்சிகள் சேசிங் காட்சிகளில் எல்லாம் பின்னணி இசையில் இளையராஜா தனக்கே உரிய தனி முத்திரையை பதித்திருபபார்.
இந்த படத்தில் கிடைத்த வெற்றி பெரிய வசூலை அள்ளியது. தெலுங்கு மொழியிலும் வெளியானது. 1989 ல் ஹிந்தி மொழியில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
மொத்தத்தில் கமலின் நடிப்பு, நடனம் , சத்யராஜின் ஸ்டைலிஷ் வில்லத்தனம், பரபரப்பூட்டும் சண்டை மற்றும் சேஸிங் காட்சிகள், இளையராஜாவின் ஐந்து ஹிட் பாடல்கள், தகடூ தகடூ வசனங்கள் எல்லாம் சேர்ந்து இன்றும் காக்கிச்சட்டை யின் மிடுக்கும் தோரணையும் குறையாமல் பார்த்து கொள்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்