'வெற்றிமாறன் ஒரு ஆம்பள.. அதுனால தான் இப்படி ஒரு விஷயத்த அவரால பண்ண முடிஞ்சது'- சேகுவேரா
வெற்றிமாறன் ஒரு ஆம்பள. அதனால் தான் தைரியமாக தமிழ் தேசிய போராளி பற்றிய கதையை படமாக எடுக்க முடிந்தது என பத்திரிகையாளர் சேகுவேரா கூறியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் அதன் முதல் பாகத்தில் நடித்த சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். அடுத்ததாக மஞ்சு வாரியர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், அரசியல் வசனங்கள், மூலக்கதை விவகாரம் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், விடுதலை படம் குறித்து பத்திரிகையாளர் சேகுவேரா BBT Cinema எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
படம் எடுத்தாலே பிரச்சனை தான்
அந்தப் பேட்டியில், "விடுதலை பாகம் 2 என் கதை உன் கதை என பேச்சுகள் வந்த வண்ணமே உள்ளது. தமிழ் சினிமாவில் இதுதான் பெரிய பிரச்சனை. ஒரு புரட்சியாளருடைய வரலாற்று படத்தை இங்கு எடுப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்று. அப்படி எடுத்தா அது சாதி வளையத்தில் போய் சிக்கி விடும். அப்படி இல்லை என்றால் அது பாசிஸ்ட், மாவோயிஸ்ட் வட்டத்தில் சிக்கிக் கொள்ளும்.
ஒரு படைப்பாளிக்கு சுதந்திரம் என்பது ரொம்ப அவசியம். ஒரு படம் ஓடுமா ஓடாதா என்ற பிரச்சனை எல்லாம் போய், அந்தப் படத்தில் பெரிய ஹீரோ யாராவது நடித்தால் தான் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் எல்லாம் அதிகமாகி, படத்தின் கதை பற்றிய பிரச்சனையே வருகிறது. அதற்கான உரிமை கோரி பலரும் வருகின்றனர்.
இருட்டடிப்பு செய்யவில்லை
விடுதலை படம் அடிப்படையில் தமிழ் தேசிய போராளி கலியப் பெருமாள் பற்றிய படம் தான். இதை வெற்றிமாறன் நேரடியாக சொல்லவில்லை என்றாலும் படத்தின் கதையை வைத்துப் பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது.
அவரது பெயரை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யவில்லை. அவருடைய பெயரை நேரடியாக பயன்படுத்தினால் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படும் என நினைத்து தான் அப்படி வெற்றிமாறன் செய்துள்ளார்.
வெற்றிமாறன் ஆம்பள
வேறு யாருடைய படத்தை வேண்டுமானாலும் நாம் எடுத்துவிடலாம். ஆனால், கலியபெருமாளின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல. அவருடைய படத்தை ஒரு ஆம்பளையால் மட்டும் தான் எடுக்க முடியும். அதை வெற்றிமாறன் செய்துள்ளார். விடுதலை படத்தை எடுத்த குழு மொத்தமும் ஆம்பளைகளால் சூழப்பட்டது.
இந்தப்படத்தை தங்கம் என்ற நபர் என்னுடைய கதை என உரிமை கோரி வருகிறார். இவர் யார் என்பதே நமக்கு தெரியாது. ஆனால், வெற்றிமாறன் யார் எப்பேர்பட்ட படைப்பாளி என்பது அனைவருக்கும் தெரியும்.
பிரச்சனை இதுதான்
தங்கம் என்பவர் காடு மேடு திரிந்து கதை எழுதியதாகவும் அதில் குறிப்பிட்ட சில பகுதியை மட்டும் வெற்றிமாறன் படத்திற்காக பயன்படுத்தியதாக கூறியதாக சொல்கிறார், இங்கு பிரச்சனை அவர் பெயரை குறிப்பிடாதது அல்ல. ஜெயமோகனின் பெயருக்கு அடுத்து இவரது பெயர் இடம்பெற்றது தான். நாம் ஒரு உயரத்திற்கு செல்லும் போது நமக்கான அங்கிகாரம் கிடைக்கிறதா என்தை தான் பார்க்க வேண்டும். அதைவிடுத்துவிட்டு தன் பெயரை முதலில் போடவில்லை என்பதை பிரச்சனையாக கொண்டு வரக்கூடாது" என்றார்.
விஜய்க்கு எதிரான வசனம்?
முன்னதாக, தத்துவமில்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவாங்க என்கிற விடுதலை 2 ட்ரெய்லரில் வரும் வசனம் தற்போது அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்யை குறிப்பிடும் படி உள்ளதாக பல விமர்சனங்கள் எழுந்தது.
இதை மறுத்த விஜய் சேதுபதி, இது தன்னுடன் பேசும் தோழருக்கு நான் அளிக்கும் பதில், இதனை தவறாக திரிக்க வேண்டாம். அந்த தோழர் என்னை வந்து பார்க்கையில் ஒரு ரசிகர் மனநிலையில் வந்து பார்க்கக்கூடாது என்பது தான். நாங்கள் சொல்றது, நீயும் தலைவர் தான். உன்கிட்ட ஒரு சித்தாந்தம் இருக்கும்போது உங்களிடம் இருந்து ஒரு தலைவன் வருவான். என்னை அப்படி பார்க்காதீங்கன்னு வாத்தியார் சொல்றது தான் அது. படமாக பார்க்கும்போது இதற்குண்டான பதில் புரியும் என விளக்கமளித்திருந்தனர்.
டாபிக்ஸ்