Jani Master: மனரீதியாக டார்ச்சர்..பல முறை மிரட்டல்! பாலியல் புகார் அளித்த பெண் குறித்து ஜானி மாஸ்டர்
திருமணம் செய்ய சொல்லி மனரீதியாக டார்ச்சர் செய்ததோடு, பல முறை மிரட்டல் விடுத்ததாக தன் மீது பாலியல் புகார் அளித்த பெண் குறித்து ஜானி மாஸ்டர் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தென்னிந்திய சினிமாக்களில் பல்வேறு ஹிட் பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக செயல்பட்டவர் ஜானி. ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் இவர் 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாலியல் ரீதியாக் துன்புறுத்தியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை கைது செய்தனர். இதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து ஜானி மாஸ்டருக்கு நான்கு நாள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு, அடிப்படை ஆதரமற்றது எனவும் கூறியுள்ளாராம்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு
இதுதொடர்பாக தெலுங்கில் வெளியாகும் பிரபல பத்திரிகையான சித்ரா ஜோதியில், "என்னால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக பெண் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. அவள் ஒரு நிகழ்ச்சி மூலம் எனக்கு அறிமுகமானார்.
மைனராக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவர் பொய் சொல்கிறார். அவருடைய திறமையை அடையாளம் கண்டு எனக்கு உதவி நடன இயக்குநராக சேர்த்துக்கொண்டேன்.
மனரீதியாக டார்ச்சர்
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாதிக்கப்பட்ட பெண் என்னை மனரீதியாக டார்ச்சர் செய்தார். பலமுறை மிரட்டலும் விடுத்தார்.
எனக்கு எதிராக சதி நடக்கிறது. யாரோ பின்னால் இருந்து எனக்கு எதிராக சதி வேலை செய்கிறார்கள். எனது வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாமல் இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளார்கள்" என விசாரணையின் போது அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா இயக்குநருக்கு தெரியும்
இந்த விவகாரம் தொடர்பாக புஷ்பா பட இயக்குநர் சுகுமாரிடம் தெரிவித்ததாகவும், அவரும் அந்த பெண்ணை அழைத்து பேசினார் எனவும் ஜானி மாஸ்டர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த பெண்ணிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என ஜானி மாஸ்டர் கூறியுள்ளாராம்.
ஜானி மாஸ்டர் கைது
ஜானி மாஸ்டரின் உதவியாளர் புகாரை தொடர்ந்து அவர் மீது ஹைதராபாத்தில் உள்ள ராய்துர்கம் போலீசார் ஐபிசி சட்டப்பிரிவு 376. 506, 323 (2) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கோவாவில் தலைமறைவாகி இருந்த ஜானி மாஸ்டரை கைது செய்து ஹைதாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். தற்போது அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜானி மாஸ்டர் மனைவி ஆவேசம்
தன் கணவர் மீதான பெண் ஒருவரின் இந்த புகாருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜானி மாஸ்டர் மனைவி ஆயிஷா. இதுதொடர்பாக பிரபல ஊடகமான டிவி9க்கு அவர் அளித்த பேட்டியில், "அந்தப் பெண் 16 வயதில் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அருவருப்பானது. அதில் உண்மை இல்லை. பாதிக்கப்பட்ட அவர் உரிய ஆதாரத்தை வெளிப்படுத்தினால் கணவரை விட்டு பிரிந்துவிடுவேன்" என்று கூறினார்.
ஜானி மாஸ்டர் ஹிட் பாடல்கள்
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் ட்ரெண்டிங் ஆன ஏராளமான பாடல்களுக்கு நடன் இயக்குநராக ஜானி மாஸ்டர் செயல்பட்டுள்ளார். தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல்களான பீஸ்ட் படத்தில் அரபி குத்து, வாரிசு படத்தில் ரஞ்சிதமே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல், புஷ்பா படத்தில் ஏ சாமி போன்ற பல ஹிட் பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பிடித்த மேகம் கருக்காதா பாடலுக்கு சிறப்பாக நடனம் அமைத்ததற்காக தேசிய விருதும் இந்த ஆண்டில் வென்றிருந்தார் ஜானி மாஸ்டர்.
டாபிக்ஸ்