55 Years of Aayiram Poi: அந்த கால சிங்காரவேலன்..! பல பொய்கள் பேசி சிரிக்க வைத்த படம் ஆயிரம் பொய்
சிங்காரவேலன் ஒரிஜினல் வெர்ஷன் அல்லது அந்த கால சிங்காரவேலன் என்றே கூறும் வகையில் இந்த படமும், ஆயிரம் பொய் படத்தின் கதையும் பெருமளவில் ஒத்துப்போகும் விதமாக இருக்கும். டைட்லுக்கு ஏற்ப பல பொய்கள் சொல்லி சிரிக்க வைத்தமாக படமாகவும் உள்ளது.

திருமணம், ஆள்மாறாட்டம் வைத்து தமிழில் எத்தனையோ சினிமாக்கள் வந்துள்ளன. அந்த வகையில் திருமணத்துக்காக ஆள்மாறட்டம் செய்யும் செய்யும் கதையாகவும், டைட்டிலுக்கு பொருத்தமாக பல்வேறு பொய்களை சொல்லி நினைத்த காரியத்தை நடத்திக்கொள்ளும் கதைதான் ஆயிரம் பொய் திரைப்படம்.
ஜெய்ஷங்கர் கதையின் நாயகனாகவும், வாணி ஸ்ரீ கதையின் நாயகியாகவும் நடித்திருப்பார்கள். வி.கே.ராமசாமி, வி.எஸ். ராகவன், தேங்காய் சீனிவாசன் சோ. ராமசாமி, மனோரமா, எம்.ஆர்.ஆர். வாசு, செந்தாமரை உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள்.
யாரோ இவர் யாரோ என்ற பெயரில் சோ ராமசாமி அரங்கேற்றிய நாடகத்தின் தழுவலாக இந்த படம் உருவாகியிருக்கும். படத்தை முக்தா சீனிவாசன் இயக்கியிருப்பார்.
காமெடி கலட்டா
வி.கே. ராமசாமி, அவரது மச்சான் வி.எஸ்.ராகவன் இடையே குடும்ப தகராறு. இதற்கிடையே வி.எஸ். ராகவன் தனது மகன் ஜெய்ஷங்கரை, வி.கே.ராமசாமி பெண்ணான வாணி ஸ்ரீக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறார். வாணி ஸ்ரீயை திருமணம் செய்து கொள்வதற்கும், தந்தையின் ஆசைப்படி குடும்பம் ஒற்றுமை அடைவதற்கும் ஜெய்ஷங்கர் செய்யும் ஆள்மாறாட்டம், பித்தலாட்டம் செய்கிறார். இறுதியில் பல்வேறு பொய்களை சொல்லி அவர் தனது முறைப்பெண்ணை எப்படி கரம் பிடிக்கிறார் என்பதை முழு காமெடியுடன் ஆயிரம் பொய் படத்தை உருவாக்கியிருப்பார்கள்.
பிளாக் அண்ட் ஓயிட் படங்கள் பொதுவாகவே மெலோ டிராமா பாணியின் வசனங்கள் அதிகமாக அமைந்திருக்கும் விதமாக திரைகக்தை இருக்கும். அந்த வகையில் இந்த படமும் காமெடி படமாக இருந்தாலும் பாடி லாங்குவேஜ் காமெடியை காட்டிலும் வசனங்கள், நறுக் கவுண்டர்களால் சிரிக்க வைத்திருப்பார்கள். அதிலும் வி.கே. ராமசாமி பேசும் சில பஞ்ச்கள் வயிறை புண்ணாக்கும் விதமாக இருக்கும்.
ஜெய்ஷங்கர் - வாணி ஸ்ரீ இடையே ஆரம்பத்தில் மோதல் பின்னர் காதல் என ரசிக்கும்படியாக காட்சிகள் அமைந்திருக்கும். இடையில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் விதமாக எம்.ஆர்.ஆர். வாசு குரூப்பின் வைர நெக்லஸ் திருட்டு வேட்டை என காமெடி கலாட்டாவாகவே படம் அமைந்திருக்கும்.
அந்த கால சிங்காரவேலன்
கண்ணதாசன் பாடல் வரிகளில் வி. குமார் இசையில் படத்தின் பாடல்கள் அந்த காலகட்டத்தில் ஹிட்டாகின. அந்த கால மெட்ராஸின் கொள்ளை அழகை ஆங்காங்கே சில காட்சிகளில் அழகாக படம்பிடித்து காட்டியிருப்பார்கள், குறிப்பாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம், ரேஸ் கோர்ஸ் காட்சிகள் போன்றவை 60களின் காலகட்ட மெட்ராஸ், தற்போதைய சென்னையை கண் முன்னே நிறுத்தும் விதமாக இருக்கும்.
எவ்வித விரசமான காட்சிகள் இல்லாமல் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கூடிய முழு நீள காமெடி படமாக இருந்த இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
கமல்ஹாசனின் சிங்காரவேலன் படத்தில் குஷ்பூவை காதலிக்கவும், அவரை இம்பரஸ் செய்யவும் நண்பர்களுடன் பல முயற்சிகளை செய்வார். அதுபோல் இந்த படத்தில் ஜெயஷங்கர், வாணி ஸ்ரீயை காதலில் விழ வைக்க பல்வேறு விஷயங்களை செய்வார்.
சிங்காரவேலன் படத்தில் கமல் கோவையில் இருந்து சென்னைக்கு வருவதுபோல் , இந்த படத்திலும் ஜெய்ஷங்கர் தனது முறைப்பெண்ணை காதலித்து திருமணம் செய்ய சென்னை வருகிறார். அந்த வகையில் பார்த்தால் ஆயிரம் பொய் சிங்காரவேலன் ஒரிஜினல் வெர்ஷன் அல்லது அந்த கால சிங்காரவேலன் என்றே கூறலாம். ஜெய்ஷங்கர் திரை வாழ்க்கையில் ஹிட் படமாக அமைந்த ஆயிரம் பொய் வெளியாகி இன்றுடன் 55 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/

டாபிக்ஸ்