Jailer2Announcement: அலப்பறை கிளப்புறோம்.. பொங்கலில் தீ பொங்க ஜெயிலர் 2 அறிவிப்பு.. அதே குழுவுடன் இணைந்த ரஜினி!
Jailer2Announcement: அலப்பறை கிளப்புறோம்.. பொங்கலில் தீ பொங்க ஜெயிலர் 2 அறிவிப்பு.. அதே குழுவுடன் இணைந்த ரஜினி குறித்துப் பார்க்கலாம்.

Jailer2Announcement: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், 2023ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம், ஜெயிலர். இப்படத்தில் மோகன் லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, விநாயகன் உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் ஆகியவை பெரியளவில் ஹிட் ஆகின.
இந்நிலையில் படம் வெளியாகி 25 நாட்களைக் கடந்தபின்னும் வசூலில் இந்தியா முழுக்க ஜெயிலர் சக்கைப்போடுபோட்டது. ஜெயிலர் படம் குறித்து, சினிமா ஆய்வாளர் மனோபாலா விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில், உலகளவில் ஜெயிலர் திரைப்படம் 650 கோடி ரூபாய் வசூல் சாதனைப்புரிந்துள்ளது எனத் தெரிவித்தார். அதேபோல், Sacnilk.com, ஜெயிலர் திரைப்படம் இந்தியா முழுமைக்கும் அனைத்து மொழிகளிலும் ரூ.343 கோடி வசூல் செய்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னதாக, இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இப்படம், முதல் நாளில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து இந்தியாவில் ரூ.48.35 கோடி வசூலித்துள்ளது. 1 வாரத்தில் ஜெயிலர் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் ரூ.235.85 கோடி சம்பாதித்தது. 2வது வாரத்தில் தமிழில் ரூ.62.95 கோடி வசூலித்தது; 3வது வாரத்தில் ரூ.29.75 கோடியும், 4வது வாரத்தில் மேலும் ரூ.13.01 கோடியும் ஜெயிலர் திரைப்படம் வசூலித்துள்ளது.
மூன்று மடங்கு வசூல் தந்த ஜெயிலர்:
ஜெயிலரின் உலக மொத்த வசூல் குறித்த அப்டேட்டை அதன்பின் அளித்த சினிமா ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன், படம் 'மிகப்பெரிய பிளாக்பஸ்டர்' என்றும், 'படத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் மும்மடங்கு லாபம் கிடைத்துள்ளது என்றும் கூறியிருந்தார்.
ஜெயிலர் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெயிலர் 2 படம் குறித்த புதிய அறிவிப்பினை தைப்பொங்கலை ஒட்டி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க, அனிருத் இசையமைக்கவும், நெல்சன் இயக்கவும் செய்ய உள்ளதை அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
ஜெயிலர் 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
இதுதொடர்பாக சன் டிவி, ஜெயிலர் 2 குறித்த அறிவிப்பு டீசரை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், நெல்சனும் அனிருத்தும் ஒரு கடற்கரையோர பங்களாவில் கண்களை மூடிக்கொண்டு, ரிலாக்ஸ் நாற்காலியில் அமர்ந்தவாறு, சில் செய்து கொண்டு இருக்கின்றனர்.
அப்போது புயல் வருகிறது என அருகில் இருக்கும் ரேடியோவில் அறிவிப்பு வெளியாகிறது. உடனே, அருகில் இருக்கும் இசையமைப்பாளர் அனிருத், ’நெல்சா திரும்பவும் நாம் கிளம்பி சென்னைக்குப் போயிடலாமா’ எனக்கேட்கிறார். அதற்குப் பதில் அளிக்கும் நெல்சன், ‘புயலே சென்னையில் தான். அதனால் தான் ஸ்டோரி டிஸ்கசனுக்கு உங்களை கோவா கூட்டிட்டு வந்திருக்கிறேன்’ எனச் சொல்கிறார்.
வழக்கம்போல், அனிருத் இந்த டிஸ்கசனை கொஞ்சம் ஏன் தாமதமாக வைக்கக் கூடாது என டாகால்ட்டி காட்டுகிறார். உடனே, நெல்சன், ‘என் படத்துக்கு அப்புறம் 5 புயல் வந்துச்சு. ட்ரம்ப் திரும்ப வந்திட்டார்’ எனப் புலம்புகிறார். உடனே, ஒருவர் பங்களாவின் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு, அனிருத், நெல்சன் காலடியில் விழுகின்றனர். அதைப்பார்த்து பீதியாகும் நெல்சனும் அனிருத்தும் மறைந்துகொள்கின்றனர். அதன்பின், ரஜினியிடம் அவர் தேடி வந்த நபரைக் காட்டிக் கொடுக்கின்றனர்.
கடைசியாக அவர்கள் இருக்கும் இடத்தில் குண்டு வெடிக்கிறது. அதைத்தொடர்ந்து, வெளியில் இருக்கும் ரஜினியை அட்டாக் செய்ய ஒரு குழு வருகிறது. அங்கும் ரஜினியே குண்டுவீசி வழக்கம்போல் எதிரிகளை அழிக்கிறார்.

டாபிக்ஸ்