Vijayakanth: கணவன் மீது சந்தேகம்.. அதிக பாசத்தால் வரும் ஆபத்தை உணர்த்திய படம்
என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 35 ஆண்டுகளாகின்றன.
தமிழ் சினிமாவில் அதிரடி படங்களில் நடித்து வந்த விஜயகாந்த். திடீரென குடும்பப் பாங்கான படங்களில் நடித்தார். அதனை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணம் இருந்தபோதிலும் நல்ல கதைகளை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு ஏற்றவாறு அமைதியான கதாபாத்திரங்களில் வெற்றி கண்டார் விஜயகாந்த்.
அது போன்ற படங்கள் நடிகர் விஜயகாந்திற்கு வெற்றியையும் கொடுத்தது. அப்படி குடும்ப கதையாக விஜயகாந்த் வெற்றி கண்ட திரைப்படம் தான் என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான். நகைச்சுவை நடிகராக தற்போது அனைவராலும் அறியப்பட்டு சமீபத்தில் உயிரிழந்த நடிகர் மனோபாலா தான் இந்த திரைப்படத்தின் இயக்குனர்.
தற்போது இருப்பவர்களுக்கு அவர் ஒரு நடிகராக மட்டுமே தெரியும். ஆனால் அவர் ஒரு இயக்குனர். நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் என பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார் மனோபாலா. இந்த என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் இந்த திரைப்படம் சந்தேகப்படும் மனைவியின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
கணவன் மீது அதிக பாசம் கொண்ட மனைவி எப்படி எல்லாம் யோசிப்பார் அதிலும் பணக்கார மனைவி எப்படி யோசிப்பார் என்பதுதான் திரைப்படத்தின் அடித்தளமாகும். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.
தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி கன்னடம் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
விஜயகாந்தின் மனைவியாக நடிகை ரேகாவும், அவதூறு கூறப்படும் பெண்ணாக சுஹாசினியும் நாயகனாக விஜயகாந்த் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். தன் தந்தையின் அலுவலகத்தில் வேலை செய்யும் விஜயகாந்த்தை ரேகா திருமணம் செய்து கொள்கிறார். நண்பராக இருக்க கூடிய சுஹாசினி மீது ரேகாவிற்கு சந்தேகம் ஏற்படுகிறது தனது கணவனோடு வைத்து அவர் சந்தேகப்படுகிறார்.
சுஹாசினி பக்கத்து வீட்டில் குடியேறியதும் ரேகாவிற்கு சந்தேகம் அதிகமாகின்றது. உடனே அவர் குறித்து அந்த திருமுழுவதும் அவதூறை பரப்புகிறார் ரேகா. இவர் வதந்திகளை பரப்புகின்ற காரணத்தினால் அவரை திருமணம் செய்ய யாரும் தயாராக இல்லை.
அங்கு இருக்கக்கூடிய அனைவரும் சுஹாசினியை கேலி செய்து அசிங்கப்படுத்துகின்றனர். இதனால் தனது வேலையையும் இழந்து விடுகிறார். இதுகுறித்து ரேகாவிற்கு பாடம் கற்பிக்க முயற்சி செய்து விஜயகாந்த்தோடு சேர்ந்து அவரை வீட்டில் இருந்து கொண்டு ரேகாவை மாற்ற முயற்சி செய்கின்றனர்.
இதற்கு விஜயகாந்த்தும் சம்மதித்து ஒரே வீட்டில் மூன்று பேரும் தங்குகின்றனர். இதில் கோபமடைந்த ரேகா தனது பெற்றோரின் வீட்டிற்கு செல்கிறார். இதற்கு இடையில் விஜயகாந்த் மகள் கடத்தப்பட்டு விடுகிறார். இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு கடைசியில் விஜயகாந்த் தனது மகளைக் காப்பாற்றுகிறார்.
அதன் பின்னர் சுகாசினி மற்றும் விஜயகாந்த் இருவருக்கும் கோயிலில் திருமணம் நடக்க இருப்பதாக ரேகாவிற்கு தெரிவிக்கப்படுகிறது அதிர்ச்சி அடைந்து கோயிலுக்குள் வருகிறார். அதன் பின்னர் தனது தவறை உணர்ந்து கணவனான விஜயகாந்த் காலில் விழுந்து அவரோடு சேர்ந்து விடுகிறார். கடைசியில் திருமணம் கோயிலில் இருக்கும் சுவாமிகளுக்கு தான் என தெரிவிக்கப்பட்டு திரைப்படம் முடிவடைகிறது.
எனது கணவன் எனக்கு மட்டும்தான் என்ற எண்ணத்தில் எப்படி எல்லாம் ஒரு பணக்கார பெண் செயல்படுவார் என இந்த திரைப்படத்தில் ரேகா மிகவும் அருமையாக நடித்திருப்பார். விஜயகாந்த் மற்றும் சுஹாசினி இருவருமே தங்களது தனித்துவம் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.
விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட இந்த திரைப்படத்தை மனோபாலா சலிப்பு இல்லாமல் நகர்த்தி இருப்பார். இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 35 ஆண்டுகளாகின்றன. எந்தவித கதாபாத்திரத்தையும் விஜயகாந்த் ஏற்று சிறப்பாக நடிப்பார் என உதாரணமாக திகழ்ந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். இன்று வரை குடும்ப திரைப்படங்களில் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தை இந்த திரைப்படம் பெற்றிருக்கிறது என்று கூறினால் அது நல்ல படைப்புக்கான அடையாளமாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்