Vaaname Ellai: இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை.. பாசிட்டிவ் விதைத்த படம்.. கே. பாலசந்தரின் வானமே எல்லை
Vaaname Ellai: இயக்குநர் கே. பாலசந்தர், தற்கொலைக்கு எதிராகவும், வாழ்க்கை மீது இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை வரவழைக்கும் விதமாகவும் உருவாக்கிய படம்தான் வானமே எல்லை. நல்ல வரவேற்பை பெற்றதுடன் இயக்குநர் கே. பாலசந்தருக்கும் சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருதை பெற்று தந்தது.

கமல்ஹாசன், ரதி அக்னிஹோத்ரி, மாதவி ஆகியோரது நடிப்பில் வெளியாகி, இந்தி சினிமாவின் கிளாசிக் காதல் கதையாக இருந்து வரும் படம் ஏக் துஜே கே லியே. பாலசந்தர் இயக்கிய இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் படத்தின் க்ளைமாக்ஸால் ஈர்க்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் தற்கொலையும் செய்து கொண்டனர்.
இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த இயக்குநர் கே. பாலசந்தர், தற்கொலைக்கு எதிராகவும், வாழ்க்கை மீது இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை வரவழைக்கும் விதமாகவும் உருவாக்கிய படம்தான் வானமே எல்லை.
ஆனந்த் பாபு, பப்லூ ப்ருத்விராஜ், கெளதம் சுந்தரராஜன், மதுபாலா, ரம்யா கிருஷ்ணன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் இயக்குநர் கே. பாலசந்தருக்கும் சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருதை பெற்று தந்தது. அத்துடன் சிறந்த படத்துக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதையும் பெற்றது.
தங்களின் பெற்றோர்களாலே விரக்தியின் உச்சிக்கும் செல்லும் இளைஞர்கள் 5 போர் தற்கொலை செய்வதுதான் தீர்வு என முடிவெடுத்து அதற்காக நாள் ஒன்றையும் குறிக்க, இடைப்பட்ட நாளில் வாழும் வாழ்க்கை அவர்களது எண்ணத்தை எப்படி மாற்றுகிறது என்பதே படத்தின் கதை.
இன்றைய டிஜிட்டல் உலகில் ஆசிரியர் திட்டியது முதல், கேட்ட பொருளை பெற்றோர் வாங்கிதரவில்லை என ஏமாற்றத்தை, சிகிப்புத்தன்மையை, தோல்வியை எள் அளவும் ஏற்றுக்கொள்ளாத 2K கிட்கள் தங்களது உயிர்களை மாய்த்து கொள்வதை கிண்டல் செய்யும் விதமாக ஏராளமான மீம்கள் உலா வருவதை பார்த்துள்ளோம்.
இவை முந்தைய தலைமுறையினருக்கு நகைப்புக்கு உரியதாக இருந்தாலும், உண்மையில் டிஜிட்டல் தலைமுறையினர் சந்தித்த துயரங்களின் வெளிபாடாகவே தற்கொலைகளும், தவறான முடிவுகளும் இருந்துள்ளன.
இந்த தற்கொலை முயற்சிகள் என்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கமாகவே வந்துள்ள நிலையில், அந்த காலங்களுக்கு ஏற்ப மருந்துகளும் வெளிவந்து கொண்டேதான் இருந்துள்ளன.
அந்த வகையில் இயக்குநர் பாலசந்தர், விரக்தி, தற்கொலை எண்ணங்களை விரட்டியடிக்கும் மருந்தாக தனது பாணியில் உருவாக்கிய வானமே எல்லை ரசிகர்கள் மத்தியும் நல்ல வரவேற்பை பெற்றது.
கொஞ்சம் தடம் மாறினாலும் பிரச்சார தொணிக்கு மாறிவிடும் கதையில் முடிச்சுகள், திருப்பங்கள் என விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருப்பார். அளவான அட்வைஸ்களுடன், வாழ்க்கையின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக, "அந்தியாயத்தின் அகதிகள், விரக்தியின் எல்லைக்கே விரட்டப்பட்டவங்க", "படிப்புக்கும் நடைமுறை வாழ்க்கைகும் எத்தனை முரண்பாடு", "தற்கொலை ஒரு விதமான Protest" என சில பஞ்ச்களுடன் காட்சிபடுத்தியிருப்பார்.
வீட்டை விட்டு வெளியேறும் சாவதற்காக ஒன்றாக இணையும் ஆனந்த் பாபு, பப்லூ ப்ருத்விராஜ், கெளதம் சுந்தரராஜன், மதுபாலா ஆகியோரின் பிளாஷ்பேக் காட்சிகள், அவர்கள் எடுத்திருக்கும் இந்த முடிவும் காம்பிரமைஸ் செய்யும் விதமாக டுவிஸ்ட்களை கொடுத்திருப்பார் இயக்குநர் சிகரம்.
வானமே எல்லை படத்துக்கு வைரமுத்து பாடல் வரிகள் எழுத மரகதமணி இசையமைத்திருப்பார். இப்போதுள்ளவர்களுக்கு எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமானால் ஆஸ்கர் வென்ற நாட்டு நாட்டு பாடலின் இசையமைப்பாளர் கீரவாணிதான், தமிழில் மரகதமணி என்ற பெயரில் பாலசந்தரின் சில படங்களுக்கு இசையமைத்திருப்பார்.
வானமே எல்லை படத்தில் இடம்பெறும் ஓ மனிதா, ஜனகன மன சொல்லி, கம்மங்காடு, நாடோடி மன்னர்களே, சோகம் இனி இல்லை என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகமாக ஹிட்டடித்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான தரமணி என்கிற படத்தில் இடம்பெறும் ஒரு கோப்பை தேநீர் பாடல் ஓடிக்கொண்டிருக்கும்போது தற்கொலை எண்ணன் மனதில் தலைதூக்குமாயின் என கூறி இயக்குநர் ராம் தொலைபேசி எண் ஒன்றை குறிப்பிடுவதார்.
ஆனால் அவ்வாறு மனதை மாற்றும் கால்செண்டர்கள் வருவதற்கு முன்னர் விரக்தியானவர்கள் மனதில் ஒரு வித Postivityயை விதைத்த படமாக வானமே எல்லை இருந்துள்ளது.
தற்கொலைக்கு எதிரான படமாக கொண்டாடப்பட்ட வானமே எல்லை வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகிறது. மனக்கவலைய போக்கும் அருமருந்தாகவே அமைந்த இந்த படம் ரீவிசிட் செய்து பார்ப்பதற்கான சிறந்த படமாகவே உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்