25 years of Endrendrum Kadhal: ‘உலகெல்லாம் ஒரு சொல் காதல்’ விஜய்யின் சூப்பர் ஹிட் மூவி என்றென்றும் காதல்
என்றென்றும் காதல்.. விஜய் ரம்பா காம்போவில் ஆழமான காதலை மையப்படுத்தி வெளிவந்த திரைப்படம். 1999 மார்ச் 5 இதே நாளில் வெளியாகி இளைஞர்களால் கொண்டாடப்பட்ட விஜய் படம்.

என்றென்றும் காதல்.. விஜய் ரம்பா காம்போவில் ஆழமான காதலை மையப்படுத்தி வெளிவந்த திரைப்படம். 1999 மார்ச் 5 இதே நாளில் வெளியாகி இளைஞர்களால் கொண்டாடப்பட்ட விஜய் படம்.
நடிகர் விஜய் அவரது பெயரிலேயே விஜய் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும், ரம்பா மீனாட்சியாகவும், மூத்த நடிகர் நம்பியார் சேதுபதியாகவும், நிழல்கள் ரவி நாகராஜ் ஆகவும் ரகுவரன் சேகராகவும், ராதாரவி கிருஷ்ணன் ஆகவும் இவர் மனைவி உமாவாக அஞ்சுவும், பானுப்ரியா பூஜாவாகவும், தாமு வாசுவாகவும் இவரின் மனைவி கிரிஜாவாக சிந்துவும் நடித்து உருவான படம்.
மனோஜ் பட்நாகர் இந்த படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். கே.டி. குஞ்சுமோன் அவர்களுடன் இணைந்து தயாரிப்பாளராகவும் மனோஜ் இருந்தார்.
ஹீரோ பெரிய கப்பல் நிறுவனத்தின் இயக்குனர். இவரது தந்தை சேதுபதியோடு இரு சகோதரர்களான கிருஷ்ணன் மற்றும் வாசு என்று கலகலப்பான கூட்டுக்குடும்பமாக இருந்தாலும் கூட விஜய் தான் முழு நிர்வாகமும் கவனித்து கொள்வார். இவர்களோடு திருமணம் முடிக்காத விஜயின் சகோதரி அக்கா பூஜாவும் இருந்து வருகிறார். வெளிநாட்டில் தொழில் செய்து வரும் நாகராஜ் மற்றும் சேகருடன் தொழில் ரீதியாக உறவை மேம்படுத்திக் கொள்ள விஜய் சுவிட்சர்லாந்து செல்கிறார். சென்ற இடத்தில் நாகராஜன் வீட்டில் விஜய் தங்குகிறார்.
நாகராஜன் சகோதரி மீனாட்சியுடன் காதல் ஏற்படுகிறது. திருமணம் செய்து கொள்ள பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்காத போதிலும் பெண்ணோடு சுவிட்சர்லாந்தில் தங்களுடன் வீட்டோடு மாப்பிள்ளையாக தான் விஜய் வசிக்க வேண்டும் என்று பூஜாவின் அண்ணன் நாகராஜ் தெரிவிக்கிறார். இந்தியாவை மிகவும் மோசமான வார்த்தைகளால் பேசி விடுகிறார். தனது காதலையும் விட தனக்கு பிடித்த இந்திய மண்ணை விட்டு வர முடியாது என்று விஜய்கூறி விட்டு தாயகம் திரும்ப தயாராகும் போது பூஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தங்கள் காதலில் ஏற்படும் பிரிவின் வலியை விஜய்யும் ரம்பாவும் அழகாக நமக்குள் கடத்தி இருப்பார்கள். இந்த பிளவுக்கான முழு காரணமும் உணர்ந்த மற்றொரு சகோதரர் சேகரான ரகுவரன் இந்த காதலர்களை சேர்த்து வைக்க தனது தங்கையுடன் இந்தியா கிளம்பி வருவார். இப்போது தான் கதை வேறு ஒரு ட்ராக்கில் யூ டர்ன் அடித்து திரும்பும்.
மீனாட்சி யின் அண்ணன் நாகராஜ் தான் தனது சகோதரி பூஜாவை காதலித்து வசதியான வாழ்க்கைக்காக கைவிட்டு சென்ற துரோகம் வெளியே தெரிய ஆரம்பிக்கும். பூஜாவை வாழாவெட்டியாக உட்கார வைத்த நாகராஜ் மீண்டும் பூஜாவை சந்திக்கும் போது பூஜாவின் தம்பி விஜய்க்கு தனது தங்கை மீனாட்சியை திருமணம் செய்து வைக்க மறுப்பார். விஜய் மீனாட்சியுடன் சேர்ந்தாரா? பூஜா வாழ்க்கை என்ன ஆனது என்ற கேள்வி க்கு பல திருப்பங்களோடு படம் வழக்கம் போல் சுபமாக முடிவுக்கு வரும்.
படத்தின் டைட்டில் கார்டு முடிந்த உடன் விசாலி. கண்ணதாசன் அவர்கள் இளம் வயதிலேயே தொழிலதிபர் ஆக வளர்ந்திருக்கும் விஜய்யை தொலைக்காட்சிக்காக பேட்டி எடுப்பார். அந்த பேட்டியிலேயே ஹீரோவின் மொத்த உறவுகளை அழகாக அறிமுகம் செய்து காட்சிப்படுத்தி இயக்குநர். அந்த நிகழ்ச்சியிலேயே விஜய் அவர்கள் காதல் என்பதற்கான விளக்கத்தை இயக்குநர் அற்புதமாக அமைத்திருப்பார்.
அதேபோல் விஜய் சுவிட்சர்லாந்து சென்ற உடனேயே ஹீரோயின் தரப்பு உறவுகளை குழப்பம் இன்றி அறிமுக காட்சிகள் இருக்கும். ஆரம்பம் முதல் முடிவு வரை தெளிந்த நீரோடையாய் திரைக்கதை அமைத்து இருப்பது இயக்குநரின் சிறப்பு. அதேபோல் கிரேஸிமோகன் அவர்கள் வசனங்கள் அங்கங்கே பளிங்கு போல தெறிக்கும். இப்படத்தின் இசையையும் மனோஜ் பட்னாகர் அமைத்து அமர்க்களம் செய்து இருப்பார்.
அவர் இசையில் "மேகங்கள் எங்கே போனாலும்"
"உலகெல்லாம் ஒரு சொல் காதல்"
"கண்களா மின்னலா"
"ஓ தென்றலே "
"டேக் இட் ஈசி"
"ஜலக்கு" என்ற ஆறு பாடல்கள் அனைத்தும் சிறந்த மியூசிக் ஆல்பமாக இன்று வரை உள்ளது. கே.எஸ்.சிவா தனது ஒளிப்பதிவு மூலம் ஐரோப்பிய நாடுகளின் அழகை நம்மை ரசிக்கும்படி எடுத்து இருப்பார்.
என்றென்றும் காதல்... 2k கிட்ஸ் மனதில் பதிந்த படம் இப்போதும் கூட பசுமையாக எல்லோருடைய மனதிலும் என்றென்றும் காதல்.
