டபுள் ஆக்டிங் கதை.. இரட்டை நாயகிகள்.. காதல் வேறு.. கல்யாணம் வேறு.. குழப்பத்தில் நாயகன்.. பார்த்திபன் கனவு என்னாச்சு?
Parthiban Kanavu: இயக்குநர் பார்த்திபனின் உதவி இயக்குநராக இருந்த கரு. பழனியப்பன் இயக்கிய முதல் திரைப்படம் பார்த்திபன் கனவு. தற்போது கரு. பழனியப்பன் மேடை பேச்சாளராக ஜொலித்து வருவதுடன், நடிகராகவும் சில படங்களில் தோன்றியுள்ளார்.
டபுள் ஆக்டிங் கதைகள் என்றாலே அண்ணன் தம்பி, அப்பா - மகன், அக்கா - தங்கை உறவுகளுக்குள்ளே அந்த கதாபாத்திரங்கள் இருப்பதுபோன்ற கதை அமைப்பது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே காலம் காலமாக பின்பற்றப்படும் பார்மூலாவாக இருந்து வருகிறது.
இதை உடைத்தெறித்து அவ்வப்போது சில படங்களும் வெளியாகி ஹிட்டும் ஆகியுள்ளது. அப்படி, தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் டபுள் ஆக்டிங்கில்,அக்கா - தங்கையாக இல்லாமல் தோன்றி சூப்பர் ஹிட்டான படம் ஒன்று பார்த்திபன் கனவு.
இயக்குநர் பார்த்திபனின் உதவி இயக்குநராக இருந்த கரு, பழனியப்பன் இயக்கிய முதல் திரைப்படம் பார்த்திபன் கனவு. தற்போது கரு. பழனியப்பன் மேடை பேச்சாளராக ஜொலித்து வருவதுடன், நடிகராகவும் சில படங்களில் தோன்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், சிநேகா (இரட்டை வேடம்), விவேக், மணிவண்ணன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். ரெமாண்டிக் டிராமா பாணியில் 2003ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் தமிழ்நாடு அரசின் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த காமெடி நடிகர், சிறந்த காமெடி நடிகை, சிறந்த பாடலாசிரியர், சிறந்த பின்னணி பாடகி பிரிவுகளில் விருதுகளை அள்ளியது.
இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. காதல் கதைதான் என்றாலும் இந்தப் படத்தின் திரைக்கதை அமைப்பும், அது சொல்லப்பட்ட விதமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
ஒவ்வொரு ஆணுக்கும் தனது திருமணம் குறித்த மிகப் பெரிய கனவு இருப்பது இயல்புதான். அப்படி படத்தின் நாயகனாக பார்த்திபன் கனவு காண்பதும், பின் அது நிறைவேறுபோல் காட்டி, டுவிஸ்ட் ஒன்றை வைத்திருப்பார்.
தான் கண்ட கனவுக்கும், அதற்கு நேர் எதிராக தனக்கு அமையும் வாழ்க்கைகும் இடையே சிக்கி கொள்ளும் நாயகன் எதிர்கொள்ளும் குழப்பம், சஞ்சலம் போன்ற சிக்கல்களிலிருந்து காதல் எப்படி அவனை மாற்றுகிறது என்பதை அழகான கவிதையாய சொல்லியிருப்பார்கள்.
சத்யா என்ற குடும்பத்து பெண்ணாகவும், ஜனனி என்கிற மாடர்ன் பெண்ணாகவும் சிநேகா இருவேறு துருவங்கள் கொண்ட கதாபத்திரத்தில் தோன்றியிருப்பார். ஜனனியை துரத்தி துரத்தி காதலிக்கும் பார்த்திபன் (ஸ்ரீகாந்த்), பின்னர் ஜனனி என நினைத்து சத்யாவை திருமணம் செய்து கொண்டு பின்னர் ஆற்றாமையில் சிக்கி தவிப்பதுமாக தோன்றியிருப்பார்.
நீ விரும்புறவன விட உன்ன விரும்புறவனவனா கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் வாழ்க்கை சந்தேஷமா இருக்கும் வள்ளி படத்தில் வரும் ரஜினிகாந்த் பஞ்ச் வசனம் பேசுவார். ஒரு பெண்ணை நோக்கி பேசும் வசனமாகவே இது அமைந்திருக்கும். ஆனால் இந்த வசனம் ஆணுக்கும் பொருந்தும் என்பதை சொல்லும் விதமாகவே பார்த்திபன் கனவு படத்தின் கதை அமைந்திருக்கும்.
கிட்டத்தட்ட பார்த்திபன் திருமணத்துக்கு பின் சந்திக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதையே மறைமுகமாக எடுத்து சொல்லும். பார்த்திபனுக்கு ஜனனி மீது இருந்த காதலைவிட மனைவி சத்யா தன் மீது வைத்திருக்கும் அளவு கடத்த அன்பை எடுத்துகூறும் விதமாக இருக்கும்.
திருமணமான பின்னரும் வாழ்க்கியின் மீது பிடிப்பு இல்லாமல், ஜனனியை தேடி பார்த்திபன் பயணிப்பதை தொடரவே செய்வார். குறிப்பாக ஜனனியின் தந்தை - பார்த்திபன் சந்திப்பின்போது, நீங்கள் மட்டும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் நீங்க தான் என மாப்பிள்ளை என எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவார்.
அப்போது அதை ஆமோதிப்பது போல் இருக்கும் பார்த்திபன், இறுதி காட்சியில் தான் மனைவி என்றே தெரியாமல், மனைவி மீது இருக்கும் காதலை வெளிப்படுத்துவது கவிதையாகவே இருக்கும்.
காதலி மனைவியாகாமல் போனதால் பார்த்திபன் கனவு கலைந்து போயிருப்பதாக காட்டியிருப்பார்கள். ஆனால் தனது மனைவி மீது உருவாகியிருக்கும் காதலை, தனது காதலி என நினைத்து மனைவியிடமே எடுத்துரைக்கும் பாரத்திபன கனவு உண்மையில் இதுதான் என்பதை காட்டியிருப்பார்கள்.
உருகி உருகி காதலிக்கும் காட்சிகள் எதுவும் இல்லாயென்றாலும் தமிழ் சினிமாவில் வந்த ரொமாண்டிக் படங்களில் இது முக்கியமானதாகவே உள்ளது.
வித்யாசாகர் இசையில் கபிலன், யுகபாரதி, நா. முத்துக்குமார், அறிவுமதி, பா. விஜய் ஆகியோர் படத்துக்கு பாடல் எழுதிருப்பார்கள்.டூயட், மெலடி, குத்துப்பாடல் என அனைத்தும் கலந்த வெரைட்டியான ஆல்பமாக இருந்து இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
பக் பக் பக் மாட புறா என்ற பாடலில் 1960களில் தொடங்கி 2000ஆவது ஆண்டு வரை நான்கு தலைமுறைகளாக தமிழ் சினிமா பாடல்கள் படமாக்கி இருக்கும் விதத்தை வைத்து விஷுவல் செய்து அசத்தியிருப்பார்கள். இது பார்ப்பதற்கும் மிகவும் அழகாக அமைந்திருந்தது.
குறிப்பாக ஆழங்குயில் கூவும் ரயில், கனா கண்டேனடி பாடல் அதிக ரசித்த, ரசித்து வரும் பாடல்களாகவே உள்ளன. படத்தின் சீரியஸான கதைக்கு இடையே கதையோட்டத்துடனும், தனி டிராக்காகவும் வரும் விவேக் - தேவதர்ஷனி காமெடியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
டாப் நடிகர்கள் இல்லாமல் அப்போது சில படங்களில் மட்டும் தலை காட்டிய ஸ்ரீகாந்த் - சிநேகா ஜோடிக்கு திருப்புமுனை தந்த பார்த்திபன் கனவு வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்