IT Raid: விமான நிலையம் சென்ற இயக்குநர் சுகுமாரை மடக்கிய வருமான வரித்துறையினர்.. காலை முதல் நடக்கும் ஐடி சோதனை
IT Raids in Director Sukumar House: விமான நிலையம் சென்றிருந்த புஷ்பா 2 பட இயக்குநர் அழைத்து வந்த வருமான வரித்துறையினர் அவரிடம் பல்வேறு தகவல்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது நாளாக தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் அடுத்தடுத்து ஐடி ரெய்டு நடந்த சம்பவம் டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரும், கடந்த டிசம்பரில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூலித்த புஷ்பா 2 பட இயக்குநருமான சுகுமார் வீட்டில் இன்று (ஜனவரி 22) காலை முதல் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.
விமான நிலையத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சுகுமார்
விமான நிலையம் சென்றிருந்த இயக்குநர் சுகுமாரை, அங்கிருந்து அழைத்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறார்களாம். அவரிடமிருந்து பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்வதற்காக வீட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே புஷ்பா 2 படத்தின் தயாரிப்பாளர்களான மைத்ரி மூவி மேக்கர்கஸ் நிறுவனத்தை சேர்ந்த நவீன், ரவி ஷங்கர், சிஇஓ செர்ரி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக புஷ்பா 2 இயக்குநர் சுகுமார் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல்
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லர் படமான உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. தெலுங்கு படமான புஷ்பா 2, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா வெளியானது. ரசிகர்களை கவர்ந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டையை கிளப்பியது. இந்த படம் சுமார் 8 வாரங்களில் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து புஷ்பா 2 பட தயாரிப்பாளர்கள், இயக்குநர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. புஷ்பா 2 படத்தின் பட்ஜெட், பணப்பரிமாற்றம், வசூல் நிலவரம் உள்ளிட்ட விஷயங்களை சோதனை குறித்து வருமான வரித்துறை சார்பில் கேள்வி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மற்ற தயாரிப்பாளர்கள் வீட்டில் ஐடி
புஷ்பா 2 பட தயாரிப்பாளர்கள் மட்டுமில்லாமல், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பல முன்னணி தயாரிப்பாளர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. தெலுங்கானா திரைப்பட கூட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான தில் ராஜு வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இவரது தயாரிப்பில் கேம் சேஞ்சர் படம் பொங்கல் ரிலீஸாக திரைக்கு வந்துள்ளது.
அத்துடன் கடந்த 2022 பொங்கல் வெளியீடாக தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்த வாரிசு படத்தை தில் ராஜு தான் தயாரித்திருந்தார். தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்களின் வீடுகளில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.
சுமார் 50க்கும் மேற்பட்ட குழுவாக பிரிந்து வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். தயாரிப்பாளர்களின் வீடுகள், அலுவலங்களில் நடைபெற்ற சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் வீட்டில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடப்பது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்