தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kamakodiyan: என் அன்பே.. என் அன்பே - இளமைக் கவிஞனின் நினைவு தினம்

Kamakodiyan: என் அன்பே.. என் அன்பே - இளமைக் கவிஞனின் நினைவு தினம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 05, 2024 05:45 AM IST

பாடலாசிரியர் காமகோடியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது.

பாடலாசிரியர் காமகோடியன்
பாடலாசிரியர் காமகோடியன்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு திரைப்படத்திற்கு பாடல்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, இசை எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு பாடல்களின் இடம்பெறும் வரிகளும் முக்கியமாகும். இன்று வரை பலரால் கண்ணதாசன், வாலி, மருதகாசி, புலமைப்பித்தன் என பல பாடல் ஆசிரியர்கள் போற்றப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் சிறப்புக்குரிய இடத்தில் இருப்பவர்தான் பாடலாசிரியர் காமகோடியன். மனதை உருக்கக்கூடிய எத்தனையோ பாடல்களுக்கு வரிகளால் அழகு கூட்டியவர் பாடலாசிரியர் காமகோடியன். கவிஞர் வாலி பயணித்தது போல எம் எஸ் விஸ்வநாதன் தொடங்கி யுவன் சங்கர் ராஜா வரை பாடல் ஆசிரியர் காம கோடியனும் தனது தடத்தை பதித்துள்ளார்.

உங்களால் நம்ப முடியாது, மௌனம் பேசியதே திரைப்படத்தில் என் அன்பே என் அன்பே என்ற பாடலை எழுதியது இவர்தான். இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆஸ்த்தான கவிஞர்களின் பட்டியலில் இவரும் முக்கிய பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ். விஸ்வநாதன் தொடங்கி இளையராஜா, தேவா, எஸ்.ஏ ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா என அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் இவர் பாடல் எழுதியுள்ளார்.

பொன்மனம் என்ற திரைப்படத்தில் அழகாக அழகா என 90களில் பிறந்தவர்களுக்கு பிடித்த பாடலை எழுதியதும் இவர்தான். மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே என சக்திவேல் திரைப்படத்தில் மிகப்பெரிய ஹிட்டான பாடலையும் இவர் தான் எழுதினார்.

பழங்காலம் தொடங்கி தற்போது இருக்கக்கூடிய தொழில்நுட்ப இசையமைப்பாளர்கள் வரை ஒரு பாடல் ஆசிரியர் பயணம் செய்வது என்பது மிகப்பெரிய சிறப்பு கூறிய விஷயமாகும். அதனை முழுமைப்படுத்தியது வாலி என்றால் அதே பயணத்தை முறையாக மேற்கொண்டவர் பாடல் ஆசிரியர் காம கோடியன்.

பாடல்கள் ஒரு பக்கம் இசையால் ரசிக்கப்பட்டாலும் பாடல் வரிகள் எளிதில் எளிய மக்கள் மத்தியில் பதிவது என்பது பாடல் ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது அனைவரும் எளிதாக உச்சரித்து முணுமுணுத்துக் கொண்டே இருக்கக்கூடிய வரிகளை கொடுப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.

கவித்துவம் மாறாமல் எளிய நடையில் தமிழை பயன்படுத்தி அத்தனை பாடல்களையும் மக்கள் மத்தியில் சேர்த்த பாடல் ஆசிரியர்களில் இவரும் ஒருவர் என்று கூறினால் அது மிகையாகாது.

இப்படி சிறப்புமிக்க இடத்தை தனக்காக வைத்திருந்த கலைஞன் கடந்த ஆண்டு மறைந்தார். இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. வார்த்தைகளால் வாழும் கவிஞர்களுக்கு என்றும் அழிவில்லை என்பதற்கு காமகோடியன் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்று கூறினால் அது மிகை ஆகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்