Suriya: 15 வருஷத்துக்கு அப்புறம் முக்கிய முடிவு எடுத்த சூர்யா.. சம்மருக்கு அப்புறம் வேற மாறி தான்..
Suriya: நடிகர் சூர்யா சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Suriya: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சூர்யா. இவருக்கு தெலுங்கு மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடித்த பல தமிழ் படங்கள் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலை ஈட்டியிருக்கின்றன.
நேரடி தெலுங்கு படத்தில் சூர்யா
தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் சூர்யாவுக்கு ஒரு கிரேஸ் உள்ளது. ஆனால், சூர்யா இதுவரை ஒரே ஒரு நேரடி தெலுங்கு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். ராம் கோபால் வர்மாவின் ரக்த சரித்ரா 2 (2010) படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன்பிறகு அவர் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சூர்யா முடிவுக்கு வந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
வெங்கி அட்லூரியுடன் அடுத்த படம்
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் ஒரு படத்தில் நடிக்க சூர்யா ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு லக்கி பாஸ்கர் மூலம் பிளாக்பஸ்டர் அடித்த வெங்கி அட்லூரி, முன்னதாக கோலிவுட் நடிகர் தனுஷுடன் இணைந்து 'வாத்தி' படத்தை இயக்கி வெற்றியும் கண்டார். இதுபோன்று தொடர்ச்சியாக இரண்டு பிளாக்பஸ்டர்களை கடந்து வந்த வெங்கியுடன் ஒரு படத்தில் சூர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிகிறது.
சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்
சூர்யாவின் ரெட்ரோ படம் இந்த ஆண்டு கோடையில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் சூர்யா ரசிகர்களை கவரும் விதமாக தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் வடிவவாசல் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். அதே சமயம் தற்போது ஆர்.ஜே.பாலாஜியுடன் ஒரு படத்திலும் சூர்யா ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
தெலுங்கு பட ஷூட்டிங்
இருப்பினும், வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மே மாதமே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரின் கீழ் நாக வம்சி தயாரிக்கிறார்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படத்தையும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்தது. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று பெரும் பாராட்டைப் பெற்றது. இதனால் வெங்கிக்கு மேலும் புகழ் கிடைத்தது.
இன்னொரு தெலுங்கு படத்தில் சூர்யா?
இதற்கிடையில், சூர்யா மற்றொரு தெலுங்கு படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில் தண்டேல் படத்தை இயக்கிய இயக்குனர் சந்து மாண்டேட்டியும் சூர்யாவிடம் கதை கூறியுள்ளார். இந்த படம் ஓகே என்றால் கீதா ஆர்ட்ஸ் சார்பில் அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் சூர்யா அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்