குறவர் இனத்தில் புரட்சி.. மகனுக்கு கல்வி கொடுத்த தாய்.. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த குறத்தி மகன்
Kurathi Magan: விநியோகஸ்தர்களால் ஒப்பேறாது என கூறப்பட்ட பின்னரும் இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் துணிந்து இயக்கி 1972ஆம் ஆண்டில் இதே நாளில் வெளியிட்ட இந்தப் படம், இன்றுடன் 52 ஆண்டுகளை கடந்திக்கிறது. படம் வெளியானபோது ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாகவும் வெற்றி பெற்றது.
தமிழ் சினிமாவில் வழக்கமான க்ளிசே கதைகளுக்கு மத்தியில் குறிப்பட்ட மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய கதையம்சத்தில் வெளியாகி ஹிட்டடித்த படங்கள் ஏராளமாக உள்ளன. இதில் ஒரு சில புதிய டிரெண்டையும், கலாச்சாரத்தையும் உருவாக்கியும் உள்ளது.
அப்படி நரிகுறவர் இன மக்களின் வாழ்வியலையும், அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து மற்றவர்களை போல் சமூக அந்தஸ்தை பெற சமமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்த படம் குறத்தி மகன்.
இயக்குநர் திலகம் என்று அழைக்கப்பட்ட கே.எஸ். கோபால கிருஷ்ணன், குடும்ப திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மனம் கவர்ந்த் இயக்குநராக இருந்து வந்தார். இவரது கற்பகம், கை கொடுத்த தொய்வம், சித்தி, பணமா பாசமா?, குலமா குணமா? போன்ற படங்கள் சிறந்த பேமிலி டிராமா படங்களாக அமைந்தன. இவரது படங்களின் சிறப்பாக பெண் கதாபாத்திரங்களும், பெண்களின் எண்ண ஓட்டங்களையும் திரையில் கொண்டு வருவதும் முக்கிய அம்சங்களாக இருந்தன.
அத்துடன் ஜெமனி கணேசனின் ஆஸ்தான இயக்குநராக இருந்து வந்த கே.எஸ். கோபாலகிருஷ்ணன், முழுக்க நரிகுறவர்களின் வாழ்க்கையையும், அந்த கூட்டத்தில் உள்ள ஒரு பெண் தன் மகன் படித்து வாழ்க்கையில் முன்னேறுவதற்காக மேற்கொள்ளும் தியாகத்தை வைத்து குறத்தி மகன் படத்தை உருவாக்கினார்.
ஆரம்பத்தில் இந்த படத்தை சந்திரபாபு, பத்மினி, சிவகுமார், வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். ஆயிரம் அடி எடுத்த பின்னர் விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து வந்த அதிருப்தியால் இதை கைவிட்டு அடுத்த படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அதுவும் கைகூடாமல் போக மீண்டும் குறத்தி மகன் படத்தை கையில் எடுத்தார் இயக்குநர் கே.எஸ், கோபாலகிருஷ்ணன்.
இந்த முறை முற்றிலும் புதிய நடிகர் பட்டாளம். தனது ஆஸ்தான் ஹீரோ ஜெமினி கணேசன், அவருக்கு ஜோடியாக கேஆர் விஜயா, வில்லனாக நம்பியார், முக்கிய கதாபாத்திரத்தில் விஎஸ் ராகவன் என தேர்வு செய்தார். படத்தின் முக்கிய கதாபாத்திரமான குறத்தி மகனின் கேரக்டருக்கு முதலில் ஆடிஷன் செய்யப்பட்டவர், அப்போது டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன் உதவியாளரான வெளுத்த இளைஞன் இருந்தவர். அவர் வேறு யாருமில்லை, உலக நாயகன் கமல்ஹாசன்தான்.
இந்த படத்துக்கான ஆடிஷனில் தனது மென்மையான குரல் வளத்தால் கமல்ஹாசன் வாய்ப்பை இழக்க, அந்த கதாபாத்திரத்தில் மாஸ்டர் ஸ்ரீதர் நடிக்க வைக்கப்பட்டார். அதேபோல் நடிகை ஜெய்சித்ராவும் இந்த படத்தில்தான் ஹீரோயினாக அறிமுகமானார்.
கமல் முக்கிய கதாபாத்திரத்தில் ரிஜெக்ட் ஆனாலும், மாஸ்டர் ஸ்ரீதரின் அண்ணன் கதாபாத்திரத்தில் அவருடன் இணைந்து செகண்ட் ஹீரோவாக சில காட்சிகளில் ஹேண்ட்சமாக தோன்றியிருப்பார்.
இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் கதை சொல்லும் பாணி என்பது முதல் காட்சியில் இருந்தே தொடங்கும். அப்படித்தான் குறத்தி மகன் படத்திலும் முதல் காட்சியில் இருந்தே படத்தின் கதையை தொடங்கியிருப்பார்.
நரிகுறவர் சமூகத்துக்கு என இருக்கும் கட்டுப்பாடுகள், அவர்களின் வாழ்க்கை முறை என தெளிவாக காட்சிபடுத்தியிருக்கும் இந்த படத்தில் நிறைவான நடிப்பை ஜெமினி கணேசன் உள்பட அனைவரும் வெளிப்படுத்தியிருப்பார்கள்.
எம்ஜிஆர் படங்களை போல் கொடூரமான வில்லனாக இல்லாமல், வில்லத்தனம் செய்து பின்னர் கடைசியில் திருந்தி வருந்தும் கேரக்டரில் நம்பியார் தனது வில்லனிச மேனரிசத்தை கொண்டுவந்து கலக்கலப்பூட்டியிருப்பார்.
நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வரும் நரிகுறவர் பற்றி சமீப காலமாக வெளிவரும் செய்திகளும், அவர்களுக்கு இளைக்கப்படும் அநீதிகளும் பலருக்கும் மனவேதனையை தரும் விதமாகவே அமைந்துள்ளன. குறிப்பாக அவர்களை சமூகத்தில் ஒரு சக மனிதர்களாக மதிப்பளிக்கும் போக்கு இல்லாமல் இருப்பது வேதனை தரக்கூடிய விஷயமாகவே இன்றும் தொடர்ந்து வருகிறது.
அப்படியென்றால் 51 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் அப்போதே நரிகுறவ மக்களுக்கு குரல் கொடுக்கும் விதமாகவும், அவர்களின் முன்னேற்றம் குறித்து தமிழ் சினிமாவில் பேசப்பட்ட ஒரே படமாகவும் இந்த குறத்தி மகன் இருந்து வருகிறது.
இந்த படத்தில் இடம்பெறும் பிரபல வசனமாக "இன்று ஏற்காடு, நாளை ஆற்காடு என இருக்கும் நமக்கு படிப்பு தேவையில்லை" என்று கூறும் நரிகுறவ கூட்டத்தின் தலைவனாக வரும் ஜெமினி கணேசன், தனது மகன் படித்து போலீஸாக வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவிக்கும் கே.ஆர். விஜயாவிடம் கூறுவார்.
இன்றும் நரிகுறவ மக்களின் வாழ்க்கை ஜெமினி கணேசன் கூறுவது போல் தொடர்ந்து வந்தாலும், கே.ஆர். விஜயாவின் எண்ணத்தை போன்று சமூகத்தில் தங்களுக்கு தனியொரு இடத்தை பிடிக்கும் முயற்சியையும் இந்த இனத்தை சேர்ந்தவர்கள் சில மேற்கொண்டு வருவது நல்ல மாற்றமாகவே இருந்து வருகிறது.
விநியோகஸ்தர்களால் ஒப்பேறாது என கூறப்பட்ட பின்னரும் இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் துணிந்து இயக்கி 1972ஆம் ஆண்டில் இதே நாளில் வெளியிட்ட இந்தப் படம், இன்றுடன் 52 ஆண்டுகளை கடந்திக்கிறது. படம் வெளியானபோது ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாகவும் வெற்றி பெற்றது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9