முழு நீள காமெடி.. காசுதான் எந்த காலத்துக்கும் கடவுள்.. என்றும் புதிய படம் காசேதான் கடவுளடா
Kasethan Kadavulada: காசுதான் எந்த காலத்துக்கும் கடவுள் என்ற கருத்தை முழு நீள நகைச்சுவையாக சொன்ன படமாக இருந்த காசேதான் கடவுளடா வெளியாகி இன்றுடன் 52 ஆண்டுகள் ஆகிறது.

தமிழ் சினிமாவில் வெளிவந்த முழு நீள காமெடி படங்களில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த படங்களில் ஒன்றாக காசேதான் கடவுளடா படம் உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப பணத்துக்காக அண்ணன், தம்பி, உறவினர்களால் அரங்கேற்றப்படும் நாடகம், அதனால் நிகழ்த்தப்படும் நகைச்சுவை கலாட்டா பின்னர் இறுதியில் சுபம் என முடியும் படம், தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி படங்களில் ஒன்றாக உள்ளது.
மேடை நாடகங்களில் கதாசிரியரான சித்ராலயா கோபு காசேதான் கடவுளடா என்ற பெயரில் 300 முறைக்கு மேல் அரங்கேற்றிய நாடகத்தை அதே பெயரில் படமாக்க ஏவிஎம் நிறுவனம் முன் வந்தனர் , இந்த படம் மூலம் இயக்குநரான சித்ராலயா கோபு, வெற்றியும் கண்டார்.
படத்தில் முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா, ரமா பிரபா, ஜெயகுமாரி, எம்ஆர்ஆர் வாசு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். படத்தின் அடிப்படை கதையானது பணத்தை திருட திட்டம்போடுவது என்று த்ரில்லர் ஜானரில் இருந்தாலும் பிரேமுக்கு பிரேம் டைமிங் வசனங்களின் மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைத்து முழு நீள காமெடி படமாகவே உருவாக்கியிருப்பார்கள்.
படத்தின் ஹைலட்டாக தேங்காய் சீனிவாசனின் கதாபாத்திரம் அமைந்திருக்கும். பக்கா மெட்ராஸ் பாஷை பேசிக்கொண்டு, டீ கடை நடத்தி வருபவராக வரும் அவரை சாமியாராக மாற்றி பணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனோரமாவிடம் பணம் பறிக்க முயற்சியாகவே படத்தின் பிரதான காட்சிகள் இருக்கும்.
இதற்காக ஒவ்வொரு கதாபாத்திரங்கள் செய்யும் லூட்டி, குறிப்பாக சாமியராக தோன்றும் தேங்காய் சீனிவாசனின் ஒவ்வொரு வசனமும் சிரிப்பலைகளை வரவழைக்கும்.
ஒரு காட்சியில் பிரேமில் உள்ள மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி, முத்துராமன் உள்பட அனைவரின் பெயரையும் மந்திரம் சொல்வது போல் சொல்லியவாறே சீட்டில் அமர்ந்து பேசும் காட்சி தேங்காய் சீனிவாசனின் டைமிங் காமெடிக்கான சாட்சியாகவே இருக்கும். இது ஒரு சாம்பிள் என்றால் இதை போன்ற பல மந்திரங்களை படம் முழுக்க ஆங்காங்கே வெளிபடுத்தி சிரிக்க வைப்பார்.
மேடை நாடகத்தின் மறுவடிவம் என்பதால் வெறும் வசன உச்சரிப்புகளால் மட்டுமல்லாமல் பாடி லாங்குவேஜ், முக பாவானைகள், தனித்துவமான மேனரிசத்தாலும் படத்தில் இடம்பிடிக்கும் மற்ற கதாபாத்திரங்களும் சிரிக்க வைத்திருப்பார்கள்.
ரஜினிகாந்தின் தில்லு முல்லு படத்தில் கண்டிப்புடன் கூடிய மேனேஜிங் டைரடக்ரடாக தோன்றி, தேங்காய் சீனிவாசன் சிரிக்க வைத்திருப்பதை பலரும் அறிவார்கள்.
ஆனால் அந்த படத்துக்கு முன்னரே மெட்ராஸ் பாஷையில் டீக்கடை காரராகவும், சாமியார் வேஷத்தில் சாமியார் போன்று பெர்பார்மென்சில் உச்சத்தை தொட்டு பார்வையாளர்களை குஷிப்படுத்தியிருப்பார்.
படத்துக்கு வாலி பாடல்கள் வரிகள் எழுதியிருக்க எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். அனைத்து பாடல்களும் ஹிட்டாகியிருக்கும் நிலையில், ஜம்புலிங்கமே ஜடாதரா என்ற பாடல் சிறந்த கிளாசிக் பாடலாக இன்றும் பலரது விருப்ப பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான இந்த படத்தை அடிப்படையாக வைத்து 2017இல் நடிகர் ஒய்ஜி மகேந்திரன் மேடை நாடகம் ஒன்று அரங்கேற்றினார். அதுவும் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் 100 முறைக்கு மேல் மேடை ஏறியது.
அத்துடன் இந்த படத்தை மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் ரீமேக் செய்துள்ளார்கள். இந்த ரீமேக் படம் வரும் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய காசேதான் கடவுளடா படம் அமேசான் ப்ரைமில் இருக்கும் நிலையில், ஜாலியாக டைம் பாஸ் செய்ய நினைப்பவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படமாக இது அமைந்திருக்கும்.
காசுதான் எந்த காலத்துக்கும் கடவுள் என்ற கருத்தை முழு நீள நகைச்சுவையாக சொன்ன படமாக இருந்த காசேதான் கடவுளடா வெளியாகி இன்றுடன் 52 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்