தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நான் ஒரு காட்டுமிராண்டி.. ராஜ்கிரண் சார் தான் ஒப்புக்கொண்டார்.. 33ஆம் ஆண்டில் என் ராசாவின் மனசிலே

நான் ஒரு காட்டுமிராண்டி.. ராஜ்கிரண் சார் தான் ஒப்புக்கொண்டார்.. 33ஆம் ஆண்டில் என் ராசாவின் மனசிலே

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 13, 2024 05:55 AM IST

En Rasavin Manasile: என் ராஜாவின் மனசிலே கதையை சொன்னதும் ராஜ்கிரண் சார் ரூ.1000க்கு காசோலை தந்தார். அப்போ அது அவ்வளவு பெரிய தொகை. கையில் எடுத்துக் கொண்டு நேராக விசு சாரை தான் சந்தித்தேன்.

என் ராஜாவின் மனசிலே
என் ராஜாவின் மனசிலே

ட்ரெண்டிங் செய்திகள்

தெலுங்கு திரைப்படத்தின் மறு உருவாக்கம் என்றாலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. தற்போது உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா இயக்கிய திரைப்படம். இந்த படத்தின் தயாரிப்பாளரும் ராஜ்கிரண் தான்.

இசையமைப்பாளர் இளையராஜா படத்திற்கு வழக்கம்போல ரசிகர்களை மயக்கத்தில் ஆழ்த்தினார். படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன.

நகைச்சுவை ஜாம்பவானாக தற்போது தமிழ் சினிமாவில் வாழ்ந்து வரும் நடிகர் வடிவேலு இந்த திரைப்படத்தில் தான் அறிமுகமானார். சினிமாவில் நடித்த வாய்ப்பு கேட்காத வடிவேலுவை எதார்த்தமாக அழைத்து நடிக்க வைத்தார் ராஜ்கிரண்.

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை மீனாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமும் இதுதான். குழந்தை நட்சத்திரமாகத் தமிழ் சினிமாவில் நடிகை மீனா நடித்திருந்தாலும், என் ராசாவின் மனசிலே திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. ஏனென்றால் ஒரு புதிய கதை என்ற திரைப்படத்தில் அவர் ஏற்கனவே அறிமுகமாகி விட்டார் ஆனால் அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

நடிகர்களான வடிவேலு மற்றும் மீனா ஆகியோருக்கு தொடக்கமாக அமைந்த இந்தத் திரைப்படம், இருவரையும் தற்போது வரை உச்ச நடிகர்களாக வைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தை தற்போது வரை நடிகை மீனா நினைவு கூறுவார்.

எங்களுக்கு வாழ்வளித்த நடிகர் என்று கடவுளுக்கு நிகராக அனைத்து மேடைகளையும் பயன்படுத்தி நடிகர் தனுஷ் இப்போது வரை நடிகர் ராஜ்கிரணைப் பெருமைப்படுத்துவார்.

அதனைப் பெருமைப்படுத்தும் விதமாக ராஜ்கிரணை வைத்து நடிகர் தனுஷ், இயக்குநர் தனுஷாகவும் உருவெடுத்தார். தனித்துவமான சண்டைக் காட்சி, வசன உச்சரிப்பு என அனைத்தையுமே வித்தியாசமாக அறிமுகப்படுத்தியவர் நடிகர் ராஜ்கிரண்.

குயில் பாட்டு ஓ வந்ததென்ன என்ற பாடல் இன்று வரை பலரது பிளே லிஸ்டில் இருந்து வருகிறது. சோலை பசுங்கிளியே என்று இளையராஜாவின் குரலில் வெளியான சோகப்பாடல் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்டது.

இதுகுறித்து இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறுகையில், நான் ஒரு காட்டுமிராண்டி. என்னை கலைஞனாக மாற்றியது விசு சார் தான். அவரை பார்த்து எல்லாம் கற்றுக் கொண்டேன், அவர் மாதிரி படம் எடுக்க நான் கற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு பயங்கர கோபம் வரும். யாராக இருந்தாலும் திட்டிவிடுவார். உதவி இயக்குனர்களை விட்டு கொடுக்க மாட்டார்.

ராஜாவின் மனசிலே கதையை சொன்னதும் ராஜ்கிரண் சார் ரூ.1000க்கு காசோலை தந்தார். அப்போ அது அவ்வளவு பெரிய தொகை. கையில் எடுத்துக் கொண்டு நேராக விசு சாரை தான் சந்தித்தேன். ‘இந்த நாள் வரும் என்று எனக்கு தெரியும் வாழ்த்துக்கள், ஆனால் ஒன்று யாருக்கும் அவநம்பிக்கை கொடுக்காதீங்க…’ என்று அறிவுரை வழங்கினார்.

அப்படிப்பட்ட வெள்ளிவிழா கண்ட இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகின்றன. நடிகராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராக இன்றுவரை ராஜ்கிரண் இருந்து வருகிறார். இன்றும் என் ராசாவின் மனசிலே திரைப்படம் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத ஒரு காவியமாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்