28 Years of Irattai Roja: பணத்திற்காக கணவரை விற்ற மனைவி.. வித்தியாசமான கதைகளம்.. 28 ஆம் ஆண்டில் இரட்டை ரோஜா!
28 Years of Irattai Roja: ஏழை குடும்பத்தின் வாழ்க்கை பணத்தை மட்டுமே நோக்கி சென்றால நிம்மதி எப்படி இல்லாமல் போகிறது என்ற கருத்தை நகைச்சுவை கலந்து சொன்ன படம் இரட்டை ரோஜா. இப்படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிறது.

தெலுங்கில் 1994 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சுபலக்னம். இப்படத்தில் ஜெகபதி பாபு, ஆம்னி, ரோஜா ஆகியோர் நடித்து இருப்பார்கள். இந்த படத்தின் ரீமேக் தான் இரட்டை ரோஜா. தமிழிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சிறந்த குடும்ப திரைப்படமாக இருந்தது.
பொதுவாக தமிழ் சினிமா என்றாலே நாயகன் நாயகியை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சி தான் இடம்பெற்று இருக்கும். ஒருசில படங்களில் மட்டுமே சில மாற்றங்களை நாம் பார்த்து இருப்போம். அப்படி சில படங்களில் மாற்றங்கள் இருந்தாலும் படம் ஹிட் ஆனதா என்றால் கேள்வி குறி தான். ஆனால் இப்படத்தில் நாயகனை நாயகிகள் போட்டி போட்டுகொண்டு காதலிக்கும் கதையாக இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் நாயகனுக்காக இரண்டு நாயகிகளுக்கு இடையில் நிலவும் போட்டியை வைத்து உருவான படம் தான் இரட்டை ரோஜா. ஒரு பெண்ணின் கணவரை இன்னொரு பெண் காதலித்து அவரை அடைய நினைத்து மேற்கொள்ளும் முயற்சிகளும், அதனால் என்ன மாதிரியான பிரச்சனைகள் நிகழ்கிறது என்பதை மையமாக கொண்டு இப்படம் வெளியாகி இருக்கும்.
பொதுவாக காதல் என்றாலே தப்பு என சொல்லிய காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட கதையை அவ்வளவு எளிதாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெண்கள் அனைவரும் பார்த்து ரசிக்கும் விதமாக பூபதி ராஜா எழுதிய கதைக்கு சரியான திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பார் இயக்குநர் கேயார்.
இப்படத்தில் ராம்கி, ஊர்வசி, குஷ்பூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராம்கி மனைவியாக ஊர்வசி நடித்து இருப்பார்.ஊர்வசிக்கு பணத்தின் மேல அதீத ஆசை. எந்த அளவுக்கு என்றால் கணவனை விட்டுகொடுக்கும் அளவுக்கு. ராம்கி மீது உள்ள காதலால் எப்படியாவது ராம்கியை அடைய வேண்டும் என எண்ணி குஷ்பூ ஊர்வசிக்கு பணத்தை கொடுத்து ராம்கியை திருமணம் செய்ய நினைக்கிறார்.
அதேபோல பணத்தை பெற்றுகொண்டு குஷ்பூவுக்கு ராம்கியுடன் ஊர்வசி திருமணம் செய்து வைக்கிறார்.
திருமணம் செய்து வைக்கும் காட்சியில் ஊர்வசி பணம் மீதான ஆசையால் கணவரை விட்டுக்கொடுக்க போகிறோம் எனற கவலை இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பார். திருமணத்திற்கு பிறகு நடக்கும் சில சம்பவத்தால் தான் செய்த தவறை உணர்ந்த ஊர்வசி கிளைமாக்ஸில் ராம்கியிடம் மன்றாடும் காட்சியும் ஊர்வசி மேல் வெறுப்பும், பரிதாபமும் நம்மை அறியாமல் வெளிப்படும்.
ஒரு ஏழ்மையான குடும்பம் எப்படி இருக்க வேண்டும், பண பற்றாக்குறையால் எவ்வாறு அணுக வேண்டும், பணத்தை விட கணவர் தான் முக்கியம் என்பதை நச் என்று நல்ல திருப்பங்களுடனான கதையாக தான் இந்த இரட்டை ரோஜா திரைப்படம் அமைந்திருக்கும்.
அதேப்போல இப்படத்தில் நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது. இப்படத்தில் நடித்த ஜூனியர் பாலையா, எம்ஆர் கிருஷ்ணமூர்த்தி, பாண்டு, தியாகு, சின்னி ஜெயந்த் ஆகியோர் நகைச்சுவையில் அசத்தி இருப்பார்கள்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க வாலி பாடல்கள் எழுதி இருப்பார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே செம ஹிட். வாலி பாடல் வரிகளில் இளையராஜா இசையில் படத்தில் இடம்பெறும் உன்னை விட மாட்டேன், சிறுவானி ஆத்து தண்ணீ பாடல்கள் படம் வெளியாகி சில வாரங்கள் வரை ஒளிஒலியும், டாப் 10 பாடல்கள் நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம்பிடித்தன.
ஏழை குடும்பத்தின் வாழ்க்கை பணத்தை மட்டுமே நோக்கி சென்றால நிம்மதி எப்படி இல்லாமல் போகிறது என்ற கருத்தை நகைச்சுவை கலந்து சொன்ன படம் இரட்டை ரோஜா. இப்படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
