இன்றும், என்றும் மவுசு குறையாத ஒரு படம்.. முதலில் ஹீரோ வடிவேலு தானாம்.. 25 ஆண்டுகளை கடந்த துள்ளாத மனமும் துள்ளும்!
25 ஆண்டுகளை கடந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம், இன்றும் துள்ளிக்கொண்டிருக்கிறது என்றால் உண்மையில் அதன் கதையும், திரைக்கதையும், வசனமும், பாடல்களும், நடிகர்களின் நடிப்பு தான் முக்கிய காரணம்.

துள்ளாத மனமும் துள்ளும் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது குட்டி, ருக்கு தான். அந்த படத்தில் விஜய் பெயர் குட்டி, சிம்ரன் பெயர் ருக்கு. 1999ம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் விஜய்க்கு ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. முக்கியமாக கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் உருவானது இந்தப் படத்தில் தான். எழில் இயக்கிய இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும், மணிவண்ணன், தாமு உள்ளிட்ட பலரும் நடிக்க, எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் எனலாம்.
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி செளத்ரி தயாரித்த துள்ளாத மனமும் துள்ளும் 200 நாட்கள் வரை வெற்றிகரமாக ஒடியது. மேலும், விஜய்யின் மார்க்கெட்டும் வேற லெவலில் பிக் அப் ஆனது இப்படத்தின் மூலம் தான். இன்றோடு 25 ஆண்டுகளை கடக்கிறது துள்ளாத மனமும் துள்ளும். பாடலை மூச்சாக கொண்ட ஒரு இளைஞன். பாடலை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பெண். இருவரும் அருகே இருந்தாலும், அவர்களுக்குள் அறிமுகம் இல்லை. ஆனால், அவனின் பாடலை அவள் ரசிக்கிறாள்.
அறியாத அவன் குரலை அவளுக்கு பிடித்திருக்கிறது, ஆனால் அதே இளைஞன் உடனான சந்திப்பில், அவன் மீது வெறுப்பு வருகிறது. அதுவும் அவன் தான் அந்த பாடகன் என்பது தெரியாமலேயே. ஒரு கட்டத்தில் அந்த இளைஞனால் பார்வையிழக்கிறாள் ருக்கு. தன்னால் பார்வையிழந்த பெண்ணுக்கு பார்வை தர, தன் சிறுநீரகத்தை தானம் செய்து, சிறைக்குச் செல்லும் குட்டி, மீண்டும் திரும்பி வரும் போது, ருக்கு கலெக்டராக இருக்கிறாள். குட்டியை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை.